குன்னம்: அதிமுக- திமுக நேரடி மோதல்?

திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியதால் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி இருக்கும். 
சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா
சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா

தொகுதி அமைப்பு, சிறப்புகள்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் வருவாய் மாவட்டங்களில் உள்ளது குன்னம் (பொது) சட்டப்பேரவைத் தொகுதியாகும். இத் தொகுதியானது  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தின் ஒரு பகுதி, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் என அதிக கிராமங்களை உள்ளடக்கியதாகும். இங்கு வன்னியர், தலித் மற்றும் உடையார் சமூகத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர்.

உ.வே. சாமிநாத ஐயர், தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இத் தொகுதியில் தான். குன்னம் வட்டத்தில் உள்ள பரவாய், ஒகளூர் உள்பட பல கிராமங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கி.பி 11 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்த மதம் வேறூன்றி இருந்ததால், பல்லவர்கள் ஆட்சி காலத்தில் இம்மதம் பெரம்பலூர் மாவட்டத்திலும் இருந்துள்ளதன் சாட்சியாக அங்கு காணப்படும் புத்தர் சிலைகள் இன்றளவும் வழிபாட்டுக்குடையதாக உள்ளது. அதேபோல, வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்மரப் பூங்காவும் சாத்தனூர் கிராமத்தில் உள்ளது.

இத்தொகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் பருத்தி, மக்காசோளம் ஆகிய பயிர்களையே நம்பியுள்ளனர். நிலத்தடியில் சிமெண்டுக்கான மூலப்பொருள்கள் அதிகமாக காணப்படுவதால், ஏராளமான கனிமச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாழடைந்து வருவதோடு, இங்கு வாழும் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

 பரவாய் கிராமத்தில் உள்ள புத்தர் சிலை
 பரவாய் கிராமத்தில் உள்ள புத்தர் சிலை

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு காலத்தில் கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதன் காரணமாக தொல்லுயிர் படிம எச்சங்களின் அடையாளங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கொளக்காநத்தம் அருகேயுள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா சுற்றுலாத் தலமாக உள்ளது. குன்னம் ஆதி கும்பேஸ்வரர் கோயில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில் ஆகியவை பிரத்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களாக உள்ளன.

பிரச்னைகள்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு திருமாந்துறை, பென்னகோணம் உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 3,500 ஆயிரம் ஏக்கர் நிலமும், எதிர்பார்க்கப்பட்ட தொழில் வாய்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதேபோல சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் இப்பகுதியில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு வெற்றி பெற்றோர்: 2011-இல் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் (திமுக) எஸ்.எஸ். சிவசங்கர்.

கடந்த 2016 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.டி. ராமச்சந்திரன், திமுக சார்பில் தங்க. துரைராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் 78,218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 59,422 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளரை விட 18,796 வாக்குகள் அதிகம் பெற்று ஆர்.டி. ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

வாக்காளர் விவரம்: இத்தொகுதியில் 1,32,240 ஆண் வாக்காளர்களும், 1,38,442 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர்.  

கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: செந்துறை ஒன்றியத்துக்குள்ள செத்தேரியில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை. கடலூர்- அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 12 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம். ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர், வேப்பூர் ஒன்றியம் சின்ன வெண்மணி ஆகிய பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. துங்கபுரத்தில் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையம். வேப்பூர் ஒன்றியம் துங்கபுரம், செந்துறை ஒன்றியம் சோழன்குடிகாடு, ஆலத்தூர் ஒன்றியம் ஜமீன் பேரையூர், வேப்பூர் ஒன்றியம், கிழுமத்தூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  

தீர்க்கப்படாத மக்கள் பிரச்னைகள்: கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை தொடங்க வேண்டும். கிராமப்புறங்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும். புதுவேட்டக்குடியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

வேப்பூரில் உள்ள மகளிர் கல்லூரிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். செந்துறையில் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும். முந்திரி சாகுபடி அதிகளவில் உள்ளதால், செந்துறை பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

இத்தொகுதி திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியதால் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடும் நிலை உள்ளன. அதனடிப்படையில், திமுக சார்பில் வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா கணவர் செல்லப்பிள்ளை, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர், ஒன்றியச் செயலர் மருவத்தூர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலர் வெங்கடாஜலம் ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ். சிவங்கர் அல்லது செல்லப்பிள்ளை இதில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், வேப்பூர் ஒன்றியச் செயலர் ப.கிருஷ்ணசாமி ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். ஆர்.டி. ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com