மயிலம்: சமபலத்துடன் மோதத் தயாராகும் திமுக - பாமக

மயிலம் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி திமுக-பாமக இடையே சம பலத்துடன் கூடிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
வீடூர் அணை
வீடூர் அணை


மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி விழுப்புரம் - திண்டிவனம் இடையே அமைந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி மயிலம்.

அங்கு, நகராட்சி, பேரூராட்சி என எந்த நகர்ப்பகுதியும் கிடையாது. முழுவதும் கிராமங்களை உள்ளடக்கியப் பகுதி. இத்தொகுதியானது திண்டிவனம், செஞ்சி ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகவே இருந்து வருகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செஞ்சி வட்டத்தின் கீழ் உள்ள உடையந்தாங்கல், கள்ளப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர்,விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.

திண்டிவனம் வட்டத்தின் கீழ் உள்ள மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம், செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மயிலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி, பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் ஆகிய கிராமங்களும் அடங்கும்.

மக்களின் பிரச்னைகள்

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வளர்ச்சியடைந்திருந்தாலும், தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடையாமலே உள்ளது என்று கூற வேண்டும். தற்போது வரையில் மயிலும் ஊராட்சியாகவே இருந்து வருகிறது. மயிலத்தை பேருராட்சியாக தரம் உயர்ந்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோன்று, இந்த தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லாததால், திண்டிவனம், விழுப்புரம் போன்ற ஊர்களுக்குச் சென்று மாணவ, மாணவிகள் படித்து வர சிரமப்படுகின்றனர். மேலும், மயிலம் தொகுதிக்கான சட்டப்பேரவை அலுவலகம் மயிலத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லத்தில் அமைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து மனு அளிக்க வெகுதொலைவுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனை மயிலம் அல்லது கூட்டேரிப்பட்டில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மயிலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், சம்பங்கி, மல்லி உள்ளிட்ட பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால், பூக்களை இந்த பகுதியிலேயே விற்பனை செய்ய ஏதுவாக கூட்டேரிப்பட்டில் பூக்களுக்கான சந்தையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளனர். மேலும், மயிலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் வேண்டும், பாழடைந்த காவல் நிலையத்தை புதிதாக கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும், விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட பகுதியாகவும் இருப்பதால் வேளாண் பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அங்கு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே. நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டிக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, மயிலத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

மயிலம் தொகுதியில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட வீடூர் அணை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அணை இதுவாகும். அந்த அணையை நம்பி விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, புதுவை மாநிலத்திலும் நாற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. ஆனால், அணைக்கு வரும் நீர்வரத்துப் பகுதிகள் அடைபட்டுள்ளதால் முறையாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்மே வீடூர் அணை நிரம்பும் நிலை உள்ளது. அதேபோன்று, அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையைத் தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் பெரும் எதிர்ப்பார்ப்பாகும்.

மேலும், வீடூர் அணை பகுதி இந்த மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இருப்பினும், அது முறையாக பராமரிக்கப்படாமலும், போதிய வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறது. இதனை மேம்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மயிலம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் வேறு பகுதிக்கு வேலைதேடி செல்வது தொடர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் கோரிக்கையாகும்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

இந்த தொகுதியில் 2011, 2016 களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளன. அதிமுக, திமுக ஆகியவை தலா ஒருமுறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட நாகராஜன் 81,656 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதின. அதிமுக சார்பில் கே.அண்ணாதுரையும், திமுக சார்பில் இரா.மாசிலாமணியும் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த தேர்தலில் 70,880 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மாசிலாமணி வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அண்ணாதுரை 58,754 வாக்குகள் பெற்றிருந்தார்.

வாக்காளர் நிலவரம்: தற்போது மயிலம் தொகுதியில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 577 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர்.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

இந்த தொகுதியில்தான் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊர் உள்ளது. அதனால், இந்த தொகுதியில் அதிமுகவை களம் இறக்க வைக்க அவர் திட்டமிட்டு வருகிறார். இருப்பினும், பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மயிலம் தொகுதியை பாமக கேட்டுப் பெறவும் முயன்று வருகிறது. ஏனெனில், கடந்த 2011 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் 81,575 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இவருக்கும் இடையே 81 வாக்குகள் மட்டுமே வித்தியாம். நூல் இழையில் பாமக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது.

மேலும், 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும், தனித்துப் போட்டியிட்ட பாமக 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும் பெற்றுள்ளன. ஆகையால், மீண்டும் இங்கு போட்டியிட்டால் வெற்றிக்கனியை சுவைத்துவிடலாம் என்று பாமக நம்பி வருகிறது.

மறுபுறம் இந்த தொகுதியில் திமுக மீண்டும் போட்டியிடும் விருப்பத்தில் உள்ளது. இந்த தொகுதியை கடைசியாக திமுக கைப்பற்றியுள்ளதால், வெற்றி எளிதாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பில் உள்ளது. திமுக சார்பில் ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்ற மாசிலாமணியும், திமுக தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவாவும் போட்டியிட விரும்பத்தில் உள்ளனர்.

ஆனால், திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறது. ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மயிலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெருமளவு வாக்குகளை பெற்றுள்ளது. அதனால், மயிலம் தொகுதியில் களம் இறங்க காங்கிரஸ் கட்சியும் மல்லுக்கட்டி வருகிறது.

மயிலம் தொகுதியில் வன்னியர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 35 சதவீதம் வன்னியர்களும், 25 சதவீதம் ஆதிதிராவிடர்களும், மற்ற சமூகத்தினர் 40 சதவீதத்தினரும் உள்ளனர்.

தற்போது வரையில் மயிலம் தொகுதி திமுக-பாமக இடையே சம பலத்துடன் கூடிய போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொகுதியை காங்கிரஸ் பெற்றால் பாமக-காங்கிரஸ் இடையேயும், அதிமுக நின்றால் திமுக-அதிமுக இடையேயான போட்டியாக மாற வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com