நெய்வேலி: மின்சார நகரத்தைக் கைப்பற்றப்போவது யார்?

திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே நேரடி போட்டி உள்ளது. திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ  சொரத்தூர் ரா.ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளது.
நெய்வேலி: மின்சார நகரத்தைக் கைப்பற்றப்போவது யார்?

நெய்வேலி தொகுதி மறுசீரமைப்பின்படி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. தற்போது 3-ஆவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் தொகுதி ஆகும்.

தொகுதியின் சிறப்பு:

தென்னிந்தியாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யும் மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என சுமார் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

நில அமைப்பு: பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் தொகுதிகளை எல்லையாகக் கொண்ட தொகுதி. நெய்வேலி நகரியம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த 38 ஊராட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

சமூக-சாதி-தொழில்கள்: நெய்வேலி நகரியத்தில் அனைத்து சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். ஊராட்சிப் பகுதிகளில் வன்னியர்களும், அதற்கு அடுத்தப்படியாக பட்டியலினத்தவர்களும், சிறிய அளவில் நாயுடு, செட்டியார், ரெட்டியார், உடையார் உள்ளிட்ட மற்ற இனத்தவர்களும் வசிக்கின்றனர். என்எல்சி இந்தியா நிறுவனத்தைத் தவிர, விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில். பெரும்பாலானவர்கள் முந்திரி, பலா விவசாயம் செய்து வருகின்றனர்.

வாக்காளர் விவரம்: இந்த தொகுதியில் 1,08,936 ஆண் வாக்காளர்கள், 1,08,935 பெண் வாக்காளர்கள், இதரர் 17 பேர் என மொத்தம் 2,17,888 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள்:

2011 எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன்(அதிமுக) 69,549 வாக்குகள்,
         வேல்முருகன்(பாமக) 61,431 வாக்குகள்.

2016 சபா.ராஜேந்திரன் (திமுக) 54,299 வாக்குகள்.
         ஆர்.ராஜசேகர் (அதிமுக) 36,508 வாக்குகள்

அரசியல் கட்சிகளுக்கு செல்வாக்குள்ள பகுதிகள்: பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடியில் இருந்து பிரித்துச் சேர்க்கப்பட்ட 38 ஊராட்சிகளில் வன்னியர்கள் பெரும்பாலானவர்கள் உள்ளனர். அதற்கடுத்து பட்டியலினத்தவர்கள் உள்ளனர்.  அதிமுக, திமுக மற்றும் பாமகவிற்கு செல்வாக்குள்ள பகுதி.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: முந்திரி ஏற்றுமதி மண்டலம், பலாவில் இருந்து மதிப்புக் கூட்டுப்பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்காதது.

தொகுதி பிரச்சனைகள்:

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், வீடு நிலம் வழங்கியவர்கள், தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் வேலை வாய்ப்பு பிரச்சனைகள். வட்டம் 21, 30-இல் அடிப்படை வசதிகள்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: 

இத்தொகுதியில் 2011-இல் முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் வெற்றி பெற்றார். 2016-இல் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சபா.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

2021 தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே நேரடி போட்டி உள்ளது. திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com