பண்ருட்டி: சமபலத்தில் அதிமுக - திமுக

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இருப்பது பலம். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் கூடுதல் பலமாக உள்ளன. 
பண்ருட்டியில் உள்ள பலாப்பழ மண்டியில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்.
பண்ருட்டியில் உள்ள பலாப்பழ மண்டியில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்.


தொகுதியின் சிறப்பு: கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பண்ருட்டி தொகுதி வர்த்தகத்திற்கும், பலா, முந்திரி மற்றும் வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு பெயர் பெற்றது.

நில அமைப்பு: மாவட்டத் தலைநகரின் அருகாமையில் அமைந்துள்ளது. கெடிலம், மலட்டாறு, தென்பெண்ணை ஆறுகளை கொண்டுள்ளதால் மண் மற்றும் நீர் வளம் கொண்டது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகள், பண்ருட்டி, அண்ணாகிராமம்  ஒன்றியங்கள், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள் இத்தொகுதியில் அடங்கும்.

சமூக, சாதி, தொழில்: வன்னியர், தலித் சமூகத்தினர் சம அளவில் உள்ளனர். ரெட்டியார், செட்டியார் உள்ளிட்ட ஜாதியினரும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கணிசமான அளவு உள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, நெசவு மற்றும் முந்திரி தொழில் பிரதானம்.

வாக்காளர்கள்: தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,150, பெண் வாக்காளர்கள் 1,25,533, மூன்றாம் பாலினத்தவர்கள் 28 என மொத்தம் 2,44,711 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் வென்றவர்கள்: சென்னை மாகாணமாக இருந்த போது 1952-இல் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி, 1967-இல் பண்ருட்டி ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பண்ருட்டி ராமசந்திரன் 1971-இல் திமுகவிலும், 1977, 1980, 1984 அதிமுகவிலும், 1991-இல் பாமகவிலும் நின்று வெற்றி பெற்றார்.

திமுகவைச் சேர்ந்த நந்தகோபாலகிருஷ்ணன், ராமசாமி ஆகியோர் முறையே 1989, 1996-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். 2001-இல் அதிமுக, 2006-இல் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக கட்சியைச் சேர்ந்த தி.வேல்முருகன் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் அதிமுகவில் அங்கம் வகித்த தேமுதிகவைச் சேர்ந்த சிவக்கொழுந்து வெற்றி பெற்றார். 

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சத்யா பன்னீர்செல்வமும், திமுக கூட்டணிக் கட்சி சார்பில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 3,128 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யா பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். 

பொன்.குமார் தொழிலாளர் நலசங்கத்தின் தலைவராக இருப்பது அவரது பலம். ஆனாலும், வெளியூர்காரர் மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்காதது இவரது வெற்றி வாய்ப்பு நழுவிப்போனதற்குக் காரணம் என கூறப்படுகிறது

மக்களின் எதிர்பார்ப்புகள்: அரசு கலைக்கல்லூரி, பெண்களுக்கென தனியாக அரசு மேல்நிலைப்பள்ளி, முந்திரி, பலாவில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கட்சிகளின் செல்வாக்கு: அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 முறையும், திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் 4 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள்: அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இருப்பது பலம். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் கூடுதல் பலம்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

திமுக கூட்டணிக் கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தொடர்ந்து இரண்டு முறை பண்ருட்டியில் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் தொகுதியை நன்கு அறிந்தவர். பெரும் முயற்சியால் அரசுப் பொறியியல் கல்லூரியை பண்ருட்டிக்கு கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும்.

அதேநேரத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீண்டும் தேர்தலை சந்திப்பதற்கு தயாராக உள்ளார். ஆனால், த.வா.க. தலைவர் வேல்முருகனை எதிர்த்து போட்டியிட அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தவாக தலைவர் தி.வேல்முருகனுக்கும், எதிராக களம் இறங்கும் அதிமுக அல்லது கூட்டணிக்கட்சி வேட்பாளர் இடையே போட்டி கடினமாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com