
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமைவாய்ந்த மலைக்கோட்டை சங்ககிரியில் உள்ளது. இம்மலையில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும், இஸ்லாமியர் தர்காவும் உள்ளன. இங்கு சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டதால் அவரது நினைவாக ஈரோடு பவானி பிரிவு சாலையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1,38,013
பெண்கள்:1,35,110
மூன்றாம்பாலினத்தவர்: 20
மொத்தம்: 2,73,143.
தொகுதியின் எல்லைகள்:
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வடகிழக்கில் சேலம் (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. கிழக்கே வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி, தென்கிழக்கே திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) சட்டப்பேரவைத் தொகுதி, தென்மேற்கில் குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) சட்டப்பேரவைத் தொகுதி, மேற்கே பவானி சட்டப்பேரவைத் தொகுதி (ஈரோடு மாவட்டம்), எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவையும், வடமேற்கில் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியும் எல்லைகளாகஉள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்:
சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, அரசிராமணி, தேவூர், இடங்கணசாலை பேரூராட்சிப் பகுதிகள், ஓமலூர் வட்டத்துக்கு உள்பட்ட தாரமங்கலம் பேரூராட்சி பகுதி, சங்ககிரி, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், ஓமலூர் வட்டத்துக்கு உள்பட்ட தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தெசவிளக்கு வடக்கு, தெற்கு, பணிக்கனூர், பாப்பாம்பாடி, இடையப்பட்டி, எலவம்பட்டி, குறுக்குப்பட்டி ஆகிய பகுதிகளை சங்ககிரி தொகுதி கொண்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள 51 கிராமங்கள்:
சங்ககிரி வருவாய் வட்டத்தில் ஆலத்தூர், வீராச்சிப்பாளையம் அக்ரஹாரம், கஸ்தூரிப்பட்டி, மோரூர்பிட் 1, மோரூர்பிட் 2, சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், அரசிராமணி பிட்1, பிட்2, தப்பகுட்டை, இடங்கணசாலை பிட்1, பிட்2, ஏகாபுரம், அ.புதூர், கன்னந்தேரி, நடுவனேரி, எர்ணாபுரம், கூடலூர், காளிகவுண்டம்பாளையம், அக்ரஹார தாழையூர், வைகுந்தம், கெடிகாவல் உள்ளிட்ட 44 கிராமங்கள், ஓமலூர் வருவாய் வட்டத்தில் பாப்பம்பாடி, எலவம்பட்டி, பணிக்கனூர் (இடையப்பட்டி), தாரமங்கலம், தெசவிளக்கு வடக்கு, தெற்கு, குறுக்கப்பட்டி உள்ளிட்ட7 கிராமங்கள் உள்பட 51 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி.
வாக்குச்சாவடி மையங்கள்:
2016 சட்டப்பேரவைத் தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி 78 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சமூக நிலவரம்:
இத்தொகுதியில் வன்னியர், அருந்ததியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். கொங்கு வேளாளக் கவுண்டர், செட்டியார், நாயக்கர், நாடார், முதலியார், தாழ்த்தப்பட்டவர்கள் என பலதரப்பினர் வசித்துவருகின்றனர். இத்தொகுதியில் முக்கியத் தொழிலாக லாரித் தொழில் உள்ளது. விவசாயம், விசைத்தறித் தொழிலும் கணிசமாக உள்ளது. கூலித் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டது சங்ககிரி தொகுதி.
இதுவரை நடந்த தேர்தல்கள்:
கடந்த 1957 முதல் 2016 வரை 14 தேர்தல்களை எதிர்கொண்ட இத்தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் 1957 முதல் 2016 வரை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் விவரம்:
1957: கே.எஸ். சுப்ரமணிய கவுண்டர் (காங்கிரஸ்) 21,408
ஆர். தாண்டவன் (சுயேச்சை) 9,064
1962: கே.எஸ். சுப்ரமணிய கவுண்டர் (காங்கிரஸ்) 26,531
பி. பண்டரிநாதன் (திமுக) 17587
1967: ஆர். நல்லமுத்து (திமுக) 30,112
ஏ. ராஜேந்திரன் (காங்கிரஸ்) 17,174
1971: வி.முத்து (திமுக) 27,741
பி.டி. சீரங்கன் (காங்கிரஸ்) 17,422
1977: பி.தனபால் (அதிமுக) 32,780
எம். பரமானந்தம் (திமுக) 11,751
1980: பி. தனபால் (அதிமுக) 45,664
ஆர். வரதராஜன் (திமுக) 33,109
1984: பி.தனபால் (அதிமுக) 58,276
எஸ்.முருகேசன் (திமுக)41,906
1989: ஆர்.வரதராஜன் (திமுக) 43,365
ஆர்.தனபால் (அதிமுக- ஜெஅணி) 35,496
1991: வி.சரோஜா (அதிமுக) 79,039
ஆர்.வரதராஜன் (திமுக) 27,080
1996: வி.முத்து (திமுக) 64,216
கே.கே. ராமசாமி(அதிமுக) 42,880
2001: பி.தனபால் (அதிமுக) 70,312
டி.ஆர். சரவணன்(திமுக) 47,360
2006: வி.பி.துரைசாமி (திமுக) 67,792
எஸ்.சாந்தாமணி (அதிமுக) 51,372
2011: விஜயலட்சுமி பழனிசாமி (அதிமுக) 1,05,502
வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (திமுக) 70,423
2016: எஸ்.ராஜா (அதிமுக) 96,202
டி.கே.ராஜேஸ்வரன் (காங்கிரஸ்) 58,828
பி. கண்ணன் (பாமக) 37,927
கே.சரவணன் (கொமதேக) 5,091
கே.செல்வகுமார் (தமாகா) 5,633
பிரதான பிரச்னை:
சங்ககிரி தொகுதியில் லாரி தொழிலைச் சார்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் டீசல் விலைஉயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு லாரிக்குத் தேவையான டயர் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் லாரித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தவிர, கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையால் கடந்த பல மாதங்களாக லாரிகள் இயங்காததால், இத்தொழிலை நம்பி ஓரிரண்டு லாரிகளை மட்டும் வைத்து தொழில் நடத்திவரும் பலர் நிதிநிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற கடன்களைத் திரும்பச் செலுத்த இயலாமையால் லாரிகளை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது குடும்பங்களும் இத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே லாரி தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில லாரி உரிமையாளர் சம்மேளனமும், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கமும் பல முறை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சங்ககிரியில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன.
இவற்றில் குறைந்தது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் சங்ககிரி நகருக்குள் பல்வேறு வேலைகளுக்காக தினசரி வந்துசெல்கின்றன. அதனால் சங்ககிரி நகரில் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. இதனைத் தவிர்க்க ஒரு லாரியை நிறுவனத்திடம் விலைக்கு வாங்கி அதற்கு பாடி கட்டி, வண்ணம் பூசி, எலக்ட்ரிக்கல் பணிகள் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச்சான்று பெறும் வரை ஒரேஇடத்தில் நிறுத்தி வேலைபார்க்கும் வகையில் ‘ஆட்டோநகர்' அமைக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர் சங்கத்தின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இக்கோரிக்கையை அதிமுக, திமுகவும் ஏற்பதாகக் கூறி,தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபோதும், அதற்கான பணிகள் இன்றுவரை நடைபெறாததாது லாரிஉரிமையாளர்கள்,தொழிலாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதியின் இதர பிரச்னைகள்:
சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் உள்ள நட்டுவம்பாளையம் ரயில்வே தரைவழிப் பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லக்கூடிய அளவில் சிறியதாக உள்ளதால், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையம் ரயில்வே நிலையத்தையொட்டி உள்ள மாவெளிபாளையம், ஊஞ்சானூர், பச்சப்பட்டி, வளையசெட்டிபட்டி, உப்புப்பாளையம், வடுகப்பட்டி, பாப்பநாயக்கனூர், தட்டாம்பட்டி, வேப்பம்பட்டி, சென்னாத்கல்கரட்டுப்புதூர், காஞ்சாம்புதூர், தாதவராயன்குட்டை, நாயக்கன்வளவு, கருமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவெளிபாளையம் தரைவழிப் பாலத்தைப் பயன்படுத்திவந்த நிலையில், தற்போது பாலத்திற்கு முன்பு இருபுறங்களிலும் ரயில்வே துறை சார்பில் கடந்த 2015ல் பாதுகாப்புத் தடுப்பு வளையங்கள் வைக்கப்பட்டன. இதனால் அரசுப் பேருந்துகள் செல்ல செல்லாததால் கிராமங்களில் உள்ள நோயாளிகள், மாணவ, மாணவிகள் தவித்துவருகின்றனர். இந்த ரயில்வே பாதுகாப்பு தடுப்பு வளையத்தால் 14 கிராமங்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு வடுகப்பட்டியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கத்துடன் மேம்படுத்தப்பட்டஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தையும் முன்னாள் முதல்வர் திறந்துவைத்தார். இரண்டு சிற்றுந்துகள் மட்டுமே இயங்கிவருகின்றன. பால் லாரிகள், தனியார் கல்லூரி, பள்ளிப் பேருந்துகள், ரேஷன் பொருட்களைக் கொண்டுசெல்லும் லாரிகள் சுமார் 6 கி.மீ. தூரத்தைக் கடந்து சென்றுவருகின்றன.
சங்ககிரியில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை உள்ளது. இம்மலை மத்திய தொல்லியல் துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இம்மலையைச் சுற்றுலாத் தலமாக்கி சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும் என்பது சங்ககிரி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையையொட்டி சங்ககிரி நகர் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்க்க போதிய வசதிகள் இல்லாததால், சேலம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழக அரசின் சார்பில் ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில் சங்ககிரியில் புதிதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட தேவூர் பகுதிகளில் இரு பேரூராட்சிகள், சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தேவூரிலிருந்து நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாததால் காய்கறிகளை குமாரபாளைம், ஈரோடு பகுதிகளுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர். தினசரி காலை, மாலை பேருந்து வசதிகள் செய்தால் விவசாயிகள் நேரடியாக சங்ககிரி நகருக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியும்.
மேலும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், நீதிமன்றங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலங்களுக்கும் வந்துசெல்ல உதவியாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சங்ககிரி ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கு தேவூர் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர்பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 17 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இப்பிரச்னைகளைக் களைய தமிழக முதல்வர் தனிதிட்டமாக ரூ. 30.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதற்காக சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.இப்பணிகள் முடிவடையாமல் உள்ளதால், கோடைக்காலத்தில் குடிநீர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
முடிவுற்ற திட்டப் பணிகள்:
சங்ககிரி, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் சாக்கடை வசதிகள், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் சங்ககிரியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தேவூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் அரசின் சார்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தொடர்ந்து வருடம் முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் குழுக்கள் மூலம் காவிரி ஆற்றிலிருந்து நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அரசிய ல்நிலவரம்:
சங்ககிரி தொகுதி, அதிமுகவைப் பொருத்தவரை சேலம் புறநகர் மாவட்டத்திலும், திமுகவைப் பொருத்தவரை சேலம்மேற்குமாவட்டத்திலும் வருகின்றன.
அதிமுக சேலம் புறநகர் மாவட்டச்செயலாளராக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியே உள்ளார். அவர் தொடர்ந்து சங்ககிரி ஒன்றியப் பகுதிகளில் கட்சிப் பணிகளைக் கவனிக்க முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன் அதிமுகவில் சங்ககிரி ஒன்றியம், கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு இரு மாதங்களுக்கு முன்னர் அப்பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது சங்ககிரி தொகுதியைப் பொருத்தவரை அதிமுகவினர் முதல்வரின் பிரசாரத்தை நம்பியே உள்ளனர்.
திமுக சேலம் மேற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளராக (பொறுப்பு) டி.எம். செல்வகணபதி உள்ளார். அவர் முன்னாள் அமைச்சராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். திமுகவில் மாநிலதேர்தல் பணிக்குழு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் பொறுப்பேற்ற பின்னர் சங்ககிரி தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், கிராமங்களில் நேரடியாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இத்தொகுதியைப் பொருத்தவரை அதிமுக - திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், தமிழக முதல்வராக எடப்பாடிபழனிசாமி இருப்பது அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.