காட்டுமன்னார்கோயில் (தனி): அதிமுக- விசிக இடையே போட்டி

வரும் தேர்தலில் அதிமுக சார்பில் நாக.முருகுமாறன், இவரை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான விசிக சார்பில் சிந்தனைச்செல்வன் போட்டியிடப்போவதாகத் தெரிகிறது. 
வீராணம் ஏரி
வீராணம் ஏரி


கடலூர் மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியான காட்டுமன்னார்கோவில் தொகுதியை கைப்பற்ற அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது. வீராணம் ஏரி, திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில் ஆகிய பகுதிகள் அடங்கிய தொகுதியாக திகழ்கிறது. விவசாயம்தான் பிரதான தொழில். மேலும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் இத்தொகுதி உள்ளது.

சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

தற்போது ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றியம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், குமராட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளப் பாதிப்பு அடைந்த கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாக இது உள்ளது.

தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள்

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி - 15 வார்டுகள், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி - 18 வார்டுகள், லால்பேட்டை பேரூராட்சி - 15 வார்டுகள். கீரப்பாளையம் ஒன்றியம்: 21 ஊராட்சிகள்: கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர்.

காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் 55 ஊராட்சிகள்: ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர், கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கவம், குணவாசல், குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர், மதகளிர்மாணிக்கம் மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர்.

சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி. தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம். குமராட்சி ஒன்றியம்

36 ஊராட்சிகள்: ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறன் 83,665 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் 51,940 வாக்குகள் பெற்று தோல்வுயுற்றார். 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய மனித உரிமை கட்சி 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் ஜனநாயக பேரவை ஒரு முறையும், அதிமுக இருமுறையும் வென்றுள்ளது.

இதுவரை வென்றவர்கள்: 

1962- எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக),

1967- எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்),

1971-எஸ்.பெருமாள் (திமுக),

1977-மருதூர் ராமலிங்கம் (திமுக),

1980-மருதூர் ராமலிங்கம் (திமுக),

1984-எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்),

1989-ஏ.தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி),

1991-ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி),

1996-மருதூர் இராமலிங்கம் (திமுக),

2001-டாக்டர் ப.வள்ளல்பெருமான் (காங்கிரசு ஜனநாயக பேரவை),

2006-துரை.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி),

2011 நாக.முருகுமாறன் (அதிமுக),

2016- நாக.முருகுமாறன்.


கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்வதற்கு ஏதுவாகவும், வெள்ளங்காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடலூர் மாவட்டம் மா ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே 387 கோடியில் மதிப்பில் உயர்மட்ட பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாணவர்களின் நலன் கருதி காட்டுமன்னார்கோவில் பகுதியிலேயே ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களுக்கு பேருந்துகள் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக அரசு பணிமனை கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அதனை ஒரு தாலுகா மாற்றப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்குட்பட்ட தேத்தாம்பட்டு பகுதியில் அரசு தொழிற் பயிற்சி மையத்தையும் கூடுவெளி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டுவந்து மாணவர்களின் கல்வி தரம் மேம்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதி புதிய ஒன்றியமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தங்களுடைய பகுதியில் விளைந்த நெற்பயிர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்க்கு ஏதுவாக மார்க்கெட் கமிட்டிக்கு ஒரு மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கு காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலகமும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டப்பட்டது காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை காலத்தில் மிகப் பெரும் பாதிப்பை அளிக்கும் மணவாய்க்கால் குறுக்கே மேல ராதாம்பூர் கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

நந்திமங்கலம் பூலாமேடு கிராமங்களுக்கு இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 5 கிராம மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நாக.முருகுமாறன் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச்செல்வன் போட்டியிடப்போவதாக தெரிகிறது. அல்லது திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு இத்தொகுதி வழங்கினால் தொழிலதிபர் கே.ஐ. மணிரத்தினமும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com