

தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் நகர்வுகள் நடக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள திண்டிவனம் தொகுதியில் எதிர்வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் மோதப்போவது அதிமுகவா? அல்லது பாமகவா? என்ற எதிர்பார்ப்புடன் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
ராமதாஸின் சொந்தத் தொகுதி என்பதால் இது முக்கிய தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்
திண்டிவனம் தொகுதியை பொருத்தவரை திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி என நகர பகுதிகளும், திண்டிவனம் வட்டத்துக்குள்பட்ட கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம்,
கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர்,
ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டியவை
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமான திண்டிவனம் ரயில் நிலையத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும். இத்தொகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.
சென்னை, புதுச்சேரிக்கு வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொகுதி விவரம்
1951 முதல் 2006 வரை பொதுத்தொகுதியாக இருந்த நிலையில் தொகுதி சீரமைப்புக்குப்பின் 2011 பேரவைத் தேர்தலில் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதியில் திமுக, காங்கிரஸ் தலா 5 முறையும், அதிமுக மூன்று முறையும், ராமசாமி படையாச்சி தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றி பெற்றவர்கள்
1951 ஜெகநாதன் (தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி),
1957 பி.வீரப்ப கவுண்டர் (சுயேச்சை),
1962 எ.தங்கவேலு (திமுக),
1967 கே.ராமமூர்த்தி (காங்கிரஸ்),
1971 ஜி.ராசாராம் (திமுக),
1977 டி.ஆர்.ராசாராமரெட்டி (காங்கிரஸ்),
1980 தங்கமணி கவுண்டர் (காங்கிரஸ்),
1984 டி.கே.தங்கமணி (காங்கிரஸ்),
1989 ஆர்.மாசிலாமணி (திமுக),
1991 எ.சு.பன்னீர்செல்வம் (காங்கிரஸ்),
1996 ஆர்.சேதுநாதன் (திமுக),
2001, 2006-இல் சி.வி.சண்முகம்,
2011 த.அரிதாஸ் (அதிமுக),
2016 சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக)
தொடக்கத்தில் திமுக, காங்கிரஸின் கோட்டையாக மாறி மாறி இருந்த இத்தொகுதி, 2001-இல் அமைச்சர் சி.வி.சண்முகம் வெற்றி பெற்றப் பின்பு அதிமுகவின் கோட்டையாக உருவெடுத்தது. தனித்தொகுதியாக மாறியதால் அமைச்சர் சண்முகம், விழுப்புரம் தொகுதிக்கு இடம்மாறியபோதும் 2011-இல் அதிமுகவே இத்தொகுதியில் வெற்றி பெற்றது.
இத்தொகுதியில் பாமக, தேமுதிகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இக்கட்சிகள் கடந்த முறை பாமக தனித்துக் களம் இறங்கி 29,848 வாக்குகள், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக 14,928 வாக்குகள் என பிரித்ததால் நான்கு முனை போட்டியிலும் திமுக 101 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றிக்கனியை பறித்தது.
மதிமுக தொடங்கியபோது 1996-இல் இத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி 16.43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால், மதிமுகவின் வாக்கு வங்கி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தேய்ந்துவிட்டது. அதேநேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலம். இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இருக்கும் நிலையில் இது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கக்கூடும்.
சாதிய ரீதியான வாக்குகள்
இத்தொகுதிக்குள் வன்னியர்கள் சுமார் 35 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 25 சதவீதம் மற்றும் முதலியார், உடையார், ரெட்டியார், நாயுடு, யாதவர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் உள்ளனர்.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்
திமுக கூட்டணியில் இத்தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிட அதிமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ராமதாஸின் சொந்தத் தொகுதி இது என்பதால் சென்டிமென்டாக இத்தொகுதியை கேட்டு வாங்க பாமக தரப்பில் அதிமுக தலைமைக்கு அழுத்தம் தரப்படுகிறது.
ராமதாஸின் விருப்பத்தை அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டால் இத்தொகுதியில் திமுக-பாமக இடையே நேரடிப் போட்டி உருவாகும். இல்லையெனில் திமுக-அதிமுக இடையே போட்டி ஏற்படும். திமுகவுடன் மோதுவது பாமகவா அல்லது அதிமுகவா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.
2016 தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்
சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக) - 61,879
எஸ்.பி.ராஜேந்திரன் (அதிமுக) - 61,778
ஏ.காளிதாஸ் (பாமக) - 29,848
எம்.உதயக்குமார் (தேமுதிக) - 14,928
பி.பூவழகி (பாஜக) - 1,509
ஜி.புவனேஸ்வரி (நாம் தமிழர்) - 908
எஸ்.ஏ.விஸ்வநாதன் (அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி) - 716
ஆர்.கார்த்திக் (சுயேச்சை) - 489
ஏ.கோவிந்தசாமி (பகுஜன்சமாஜ்) - 396
கே.மீரா (சுயேச்சை) - 392
எம்.சந்திரசேகரன் (சுயேச்சை) - 195.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.