திருக்கோவிலூர்: திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவான தொகுதி

தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெற்றுள்ளது அதிமுக - திமுக இடையே சமபலத்தை ஏற்படுத்துகிறது.
தென்பெண்ணை ஆறு
தென்பெண்ணை ஆறு
Updated on
2 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் வரும் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் எதிராக போட்டியிடப் போவது அதிமுக, தேமுதிக அல்லது பாஜகவா என்பதை அறிய அத்தொகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

திருக்கோவிலூர் தொகுதி சந்தித்த தேர்தல்கள்

1952  முதல் 1871 வரை 5 பேரவைத் தேர்தல்களை சந்தித்த இத்தொகுதி பின்னர் தொகுதி சீரமைப்புக் காரணமாக இல்லாமல் போனது. பின்னர் 2008-இல்  நடந்த தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2011, 2016 என இரு பேரவைத் தேர்தல்களை மட்டுமே இத்தொகுதி சந்தித்துள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது திருக்கோவிலூர் வருவாய் கோட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் திருக்கோவிலூர் தொகுதியை பொருத்தவரை அது   விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்

தொகுதியின் தலைநகரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தாலும்,   இத்தொகுதிக்குள்பட்ட 70 சதவீத பகுதிகள் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருப்பதால் இது விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொகுதியின் சிறப்பு

திருக்கோவிலூரில் உலக புகழ்பெற்ற பெருமாள் கோயில் உள்ளது.  இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.  நாலாயிர திவ்யபிரபந்தம் ஆழ்வார்களால் முதன் முதலில் பாடப்பெற்றது என்ற பெருமையும் இக்கோயிலுக்கு உண்டு. இதனால் நாலாயிரபிரபந்த அவதார தலம் என்றும் அழைப்பார்கள். பெருமாளை தமிழ் பாசுரங்களில் பாடியவர்களும், ஆழ்வார்களில் முதன் முதல் தோன்றியவர்களுமான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை நேரில் தரிசித்து பாசுரங்கள் பாடி மகிழ்ந்தனர். இதனை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள்.

முழுக்க முழுக்க கிராமப்புற பகுதிகளை மட்டுமே கொண்ட தொகுதி என்றால் இது மிகையாகாது. தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தை கொண்டு விவசாய நிலங்களை அதிகம்  கொண்ட தொகுதி இது. திருக்கோவிலூர்,  அரகண்டநல்லூர்,  திருவெண்ணைநல்லூர் ஆகிய மூன்று பேரூராட்சி பகுதிகள் இத்தொகுதிக்குள்  உள்ளன.  

மேலும், திருக்கோவிலூர் வட்டத்துக்குள்பட்ட (பகுதி): டி.அத்திப்பாக்கம்,  கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர்,  வீரபாண்டி, புளிக்கல், கல்லந்தல், அருணாபுரம், ஓட்டம்பட்டு, தண்டரை,  அடுக்கவும்,  துரிஞ்சிக்காடு (ஆர்.எப்), வீரங்காபுரம், கண்டாச்சிபுரம், மேல்வாழை, கீழ்வாழை, ஒதியத்தூர், ஒடுவன்குப்பம், சித்தாத்தூர், செங்கமேடு, மடவிளாகம், புதுப்பாளையம், வேடாலம், அப்பனந்தல், புலராம்பட்டு, திருமலைப்பட்டு, வெள்ளம்புத்தூர், அரசங்குப்பம், நாயனூர், கோட்டமருதூர், ஆலூர், கொலப்பாக்கம், சடகட்டி, நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, சொரையப்பட்டு, கோட்டகம், கழுமரம், விழ்ந்தை, அகஸ்தியர் மூலை, 

குலதீபமங்கலம், குடமுரட்டி, மணம்பூண்டி, தேவனூர், வடகரைத்தாழனூர், கொல்லூர், அந்திலி, நெற்குணம், எமப்பேர், அருமலை, மேலகொண்டூர், வி.புத்தூர், காடகனூர், கிங்கிலிவாடி, வி.சித்தாமூர், தனிகேளம்பட்டு, ஆலம்பாடி, சத்தியகண்டனூர், கஸ்பாகாரணை, பெரிச்சானூர், சித்தேரிப்பட்டு, சென்னகுணம், அ.கூடலூர், அயந்தூர், கொடுங்கால், முகையூர், பரனூர், கீழக்கொண்டூர், அத்தண்ட மருதூர், 

வடக்குநெமிலி, அவியூர், தேவி அகரம், அவியூர்கொளப்பாக்கம், முதலூர், வடமருதூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர், வீரசோழபுரம், ஆற்காடு, அருளவாடி, கொங்கராயனூர், பையூர், அண்டராயனூர், டி.புதுப்பாளையம், வீரணாம்பட்டு, கொடியூர், டி.குன்னத்தூர், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், வடமலையனூர், வில்லிவலம், அருங்குருக்கை, டி.கொணலவாடி, பெண்ணைவலம், ஆக்கனூர், பாவந்தூர்பனப்பாக்கம், இளந்துரை, மணக்குப்பம், டி.இடையூர், சின்னசெவலை, டி.மழவராயனூர், சிறுவானூர், சிறுமதுரை, மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், டி.சாத்தனூர், ஏமப்பூர், மலையம்பட்டு, மற்றும் தடுத்தாட்கொண்டூர் கிராமங்கள் இத்தொகுதியில் உள்ளன.

தீர்க்கப்படாத பிரச்னைகள்

திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்,   இங்கு நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,   விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்,  அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைள் மக்களிடம் உள்ளன.

வாக்காளர் விவரம்

ஆண்கள்:  1,27,201
பெண்கள்: 1,26,342
மூன்றாம் பாலினத்தவர்: 38 
மொத்தம் : 2,53,981 வாக்காளர்கள் உள்ளன.

இத்தொகுதியை பொருத்தவரை வன்னியர்கள் 30 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதம், உடையார்கள் 18 சதவீதம் மற்றும் பிற சமூகத்தினர்களான முதலியார்கள், நாயுடு, ரெட்டியார், யாதவர்கள் உள்ளிட்டோர்  உள்ளனர்.

கடந்த தேர்தல்கள்

இத்தொகுதியில் 1957, 1962, 1967 என மூன்று முறை காங்கிரஸ் கட்சியும், 1971, 2016 என இருமுறை திமுகவும், 1952-இல் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஒரு முறையும், 2011-இல் தேமுதிகவும்  இத்தொகுதியில் வென்றுள்ளன.

தொகுதி சீரமைப்புக்குப்பின் சந்தித்த முதல் தேர்தலான 2011-இல் அதிமுக கூட்டணியில் இங்கு போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசன் 78,229 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் தங்கம் 69,438 வாக்குகள் பெற்று 2-ஆவது இடம் பிடித்தார். 2011 பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தோல்வி அடைந்ததால், 2016  பேரவைத் தேர்தலில்  இத்தொகுதிக்கு இடம்பெயர்ந்து போட்டியிட்டார்.  அப்போது பொன்முடி 93,837 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர்  ஜி.கோதண்டராமனுக்கு 52,780 வாக்குகள் கிடைத்தன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இம்முறையில் இத்தொகுதியில் காங்கிரஸுக்கு என கணிசமான வாக்கு வங்கி பாரம்பரியமாக இருந்தாலும், திமுக கூட்டணியில் திமுக போட்டியிடவே அதிகம் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியை பொருத்தவரை இது கூட்டணி கட்சிக்கு தான் ஒதுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக இடம்பெறும்பட்சத்தில் இத்தொகுதியை தேமுதிகவும் கேட்கும். அதேநேரத்தில் நடு  நாட்டு திருப்பதி என அழைக்கப்படும் திருக்கோவிலூரில் போட்டியிட பாஜகவும் விரும்புகிறது. இத்தொகுதியை பாமக கேட்க மிகவும் வாய்ப்பு குறைவுதான்.

அமைச்சர்  சி.வி.சண்முகத்துக்கு  எதிராக  வலுவான  திமுக     வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற  சூழல் உருவானால் மீண்டும் விழுப்புரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி களம் இறக்கப்படவும் வாய்ப்பு உண்டு.   அப்படி அவர் தொகுதி மாறினாலும் இத்தொகுதியை காங்கிரஸுக்கு  திமுக விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இத்தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்போது திமுக - அதிமுக கூட்டணி இடையே சம போட்டி உருவாகக்கூடும் என்பதே இப்போதைய நிலை. வேட்பாளர் பட்டியல்  வெளியான பின்னர் தேர்தல் பிரசாரத்தை பொருத்து நிலைமை மாறக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com