செய்யாறு: அதிமுக மீண்டும் தக்கவைக்குமா?

செய்யாறு தொகுதியில் கடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வென்ற நிலையில், தங்கள் கோட்டையைக் கைப்பற்ற திமுக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. 
செய்யாறு அரசு கலைக் கல்லூரி
செய்யாறு அரசு கலைக் கல்லூரி

திமுக கோட்டையில் இருந்து அதிமுக கோட்டையாக மாறியது செய்யாறு தொகுதி. ஒரு அரசுக்கு நான்கு தூண்களாக அமைவது சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிக்கைகள். இவற்றில் முதலிடம் வகிப்பது சட்டமன்றம் தான். இந்திய அரசியல் அமைப்பு கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக சட்டசபை தேர்தல் மீக நீண்டதொரு வரலாறு கொண்டதாகும்.
1937, 1946 -ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வரி செலுத்துபவர்கள், ஜமீன்தார்கள், மேதைகள், கல்வியாளர்கள் மற்றும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய நபர்கள்  மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் சட்டபேரவை தேர்தல் 1952  -ல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1952, 1957, 1962,1967,1971,1977, 1980,1984,1989,1991,1996,2001, 2006, 2011, 2016 என 15 முறை சட்ட மன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று உள்ளன.

சட்டபேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 1952 முதல் 1967 வரையில் சில வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் 1967 க்கு பின்பு தற்போதுள்ள 234 தொகுதிகளை அடிப்படையாக கொண்டு 2016 வரையில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வந்துள்ளன.

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி (தனி), செங்கம் (தனி), தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர் என 9 தொகுதிகள் இருந்து வந்துள்ளன. தொகுதி சீரமைப்பின் கீழ் பெரணமல்லூர், தண்டராம்பட்டு ஆகிய தொகுதிகளில் நீக்கப்பட்டு கீழ்பொண்ணாத்தூர் தொகுதி புதியதாக சேர்க்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலாவது வருவாய் கோட்டம் தொடங்கப்பட்டதாகும்.

செய்யாறு தொகுதி. இத்தொகுதியானது ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக (வேலூர் - திருவண்ணாமலை) இருந்த போது 1952 -ல் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இத்தொகுதியில் 1985-ல் இடைத்தேர்தலும் நடைபெற்று உள்ளது. இத்தொகுதியைச்  சுற்றி காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு ஆகிய தொகுதிகளும், வந்தவாசி தனி தொகுதியும் அமையப் பெற்று உள்ளது.

செய்யாறு தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம் என இரு வட்டங்களும், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியும் அமைந்துள்ளன. செய்யாறு ஒன்றியததில் 53 ஊராட்சிகளும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 63 ஊராட்சிகளும், அனக்காவூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்பட 222 வருவாய் கிராமங்களும் உள்ளன. அதுப்போல் திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.

செய்யாறு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 126686 பேரும், பெண் வாக்காளர்கள் 132544 பேரும், மூன்றாம் பாலித்தனர் ஒருவர் என மொத்தம் 259231  வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இத்தொகுதியில் மொத்தம் 317 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் 83 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது வரையில் போட்டியிட்டவர்கள்:

செய்யாறு தொகுதியில் 1952 -ம் ஆண்டு தேர்தலில் உக்கல் கிராமத்தை தர்மலிங்க நாய்க்கர் காங்கிரஸ் கட்சி சார்பிலும், நெடும்பிறை கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஜஸ்ட்டீஸ் கட்சி (நீதிக்கட்சி) சார்பிலும் போட்டியிட்டதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

1957  தேர்தலில் கொருக்கை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பா.இராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சி சார்பிலும், உக்கல் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்க நாய்க்கர் சுயேட்சையாக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பா.இராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இவர் அரசு கொறடாகவாகவும், 1977 -ல் மத்திய உணவுக்கழக தலைவராகவும், 1985 -ல் கேரள மாநில கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.

7 முறை வென்று  திமுக கோட்டையான செய்யாறு தொகுதி

1962 -ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் செய்யாறு நகரைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான புலவர் கா.கோவிந்தன் திமுக சார்பிலும், உக்கல் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்க நாய்க்கர் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டதில் புலவர் கா.கோவிந்தன் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 1967, 1971,1977 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தர்களில் புலவர் கா.கோவிந்தன் தொடர்ந்து வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து 1980 -ல் திமுக சார்பில் போட்டியிட்ட பாபு ஜனார்த்தனம் வெற்றி பெற்றார். அதேப் போல் 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வ.அன்பழகன் வெற்றிப் பெற்று செய்யாறு தொகுதி திமுக கோட்டையாக விளங்கி வந்தது.

5 முறை வெற்றிப் பெற்ற அதிமுக

1984 - ல் நடைபெற்ற அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.முருகனும், 1985  - ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வே.குப்புசாமியும், 1991 ல் நடைபெற்ற தேர்தலில் அ.தேவராஜீம், 2011 -ல் முக்கூர் என்.சுப்பிரமணியனும், 2016 -ல் தூசி கே.மோகன் போட்டியிட்டு  வெற்றி பெற்று அதிமுகக் கோட்டையானது.  

3 முறை காங்கிரஸ் வெற்றி

முதன் முதலாக 1952 -ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உக்கல் வி.தர்மலிங்க நாய்க்கர் வெற்றிப் பெற்றார். அதற்கு அடுத்தாற்போல் 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கொருக்கை பா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.  50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் 2006  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றிப் பெற்றார். 1952 முதல் 2016 வரை நடைபெற்ற தேர்தலில் 7 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 3 முறை காங்கிரஸ்சும், ஒரு முறை பாமக எனவும் வெற்றி பெற்று உள்ளது.

இதுவரை வென்றவர்கள்

1.1952 ல் வி.தர்மலிங்க நாய்க்கர் (காங்கிரஸ்)
2.1957 ல் பா.இராமச்சந்திரன் (காங்கிரஸ்)
3.1962 ல் புலவர் கா.கோவிந்தன் (திமுக)
4.1967 ல் புலவர் கா.கோவிந்தன் (திமுக)
5.1971 ல் புலவர் கா.கோவிந்தன் (திமுக)
6.1977 ல் புலவர் கா.கோவிந்தன் (திமுக)
7.1980 ல் பாபு ஜனார்ததனனன் (திமுக)
8.1984 ல் கே.முருகன் (அதிமுக)
9.1985  ல் குப்புசாமி (அதிமுக)
10.1989  ல் வ.அன்பழகன் (திமுக)
11.1991 ல் அ.தேவராஜ் (அதிமுக)
12.1996 ல் வ.அன்பழகன் (திமுக)
13.2001 ல் பி.எஸ்.உலகரட்சகன் (பாமக)
14.2006 ல் எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)
15.2011 ல் முக்கூர் என்.சுப்பிரமணியன் (அதிமுக)
16.2016 ல் தூசி.கே.மோகன் (அதிமுக)

செய்யாறு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு:

1.செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம்:
செய்யாறு சப் - கலெக்டர் ஆபீஸ் தொடர்ந்து 61 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம் தொடங்கி 31 ஆண்டுகள் தான் ஆகிறது. செய்யாறு வருவாய் கோட்டத்துடன் தொடங்கப்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய வருவாய் கோட்டங்கள் மாவட்டங்களாக உயர்வுப் பெற்று உள்ளன.

ஆனால், செய்யாறு வருவாய் கோட்டம் மட்டும் மாவட்டமாக அமையாமல் கோட்டமாகவே செயல்பட்டு வருகிறது. எனவே தொகுதி மக்களின் நலன் கருதி செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும். 

2. வேலூர் (ஒக்கேனக்கல்) கூட்டு குடிநீர் திட்டம் செய்யாறு தொகுதிக்கு நீட்டித்தல்:

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் உள்ள 27 வார்டுகளில் 272 தெருக்களில் 9325 குடும்பங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் நாளொன்றுக்கு 135 லிட்டர் வழங்க வேண்டிய நிலையில் தற்போது 92 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 35 லட்சம் லிட்டர் அளவில் குடிநீரை திருவத்திபுரம் நகராட்சியினர் வழங்கி வருகின்றனர்.

வறண்ட நிலையில் முட்புதராக காட்சியளிக்கும் செய்யாறு ஆற்றில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. எனவே வருங்காலங்களில் செய்யாறு தொகுதி மக்களின் குடிநீர் பூர்த்தி செய்யும் வகையில் வேலூர் (ஒக்கேனக்கல்) கூட்டு குடிநீர் திட்டத்தை செய்யாறு தொகுதி வரைக்கு நீட்டித்து செயல்படுத்திட வேண்டும்.

3. செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்கு தொலைத்தூர (SETC) போக்குவரத்து வசதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது சப்-டிவிஷனாகவும், அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமையிடமாகக் கொண்டது செய்யாறு தொகுதி. ஆனால், செய்யாறு வழியாக அரசு பஸ்ஸோ அல்லது தனியார் பஸ்ஸோ ஒன்று கூட தொலைத்தூர பஸ் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் சிப்காட் பகுதியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களில், சுமார் 50 சதவிகித்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

எனவே அரசு அலுவலர்கள், சிப்காட் தொழிலாளர்கள், செய்யாறு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் செய்யாறு வழியாக தென்மாவட்டப் பகுதிகளுக்கு தொலைத்தூர (SETC)  போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும்.

4.செய்யாறு தொகுதியில் அரசு மகளீர் கலைக்கல்லூரி

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  ஊரகப்பகுதியில் அமைந்துள்ள இக்ககல்லூரியில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 65 சதவிகிதத்திற்கு  மேற்பட்டவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். ஊரகப் பகுதி மாணவிகளின் நலன் கருதி செய்யாறு தொகுதியில் அரசு மகளீர் கலைக்கல்லூரி தொடங்கிட வேண்டும்.

5.செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் பணியிடங்கள்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய கட்டட வசதி, இடவசதி என கட்டமைப்பு உள்ள நிலையில், மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக அறுவை சிகிச்சை அரங்கம், சிறப்பு மருத்துவர்கள், டெக்னிசியன்கள் போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளன. உயிரிழப்பு ஏற்படாத வகையில் அனைத்து சிறப்பு மருத்துவர்கள், டெக்சீனியன்களை நியமித்திடவும், அல்ட்ரா சி.டி.ஸ்கேன் வசதியையும் ஏற்படுத்திட வேண்டும்.                      
6.திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் சுற்றுலா திருத்தலமாக்க வேண்டும். 

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று ஆண்பனை குலையீன்ற அற்புதத் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களை உள்ளடக்கியதாகவும் வேதம் ஒதுவித்த  பழமையை வாய்ந்த புராதானமான திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலை சுற்றுலா தலமாக்கிட வேண்டும்.

7. செய்யாறு தொகுதியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்கள் விவசாயம் நிறைந்த பகுதியாகும், தமிழகத்திலேயே அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம், குறிப்பாக செய்யாறு தொகுதியில் இருந்து அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு கொள்முதல் செய்யப்படுவதால் இப்பகுதியில் வேளாண் கல்லூரியும் அதனைச் சேர்ந்த தோட்டக்கலை கல்லூரியும் தொடங்கிட வேண்டும்.

8. செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் அரசு தொழிற்பயிற்சிக் கூடம்

செய்யாறு சிப்காட் பகுதியில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெற்று வரும் நிலையில், வரும் காலங்களில் பல தொழிற்சாலைகள் அமையவுள்ளன. அதன் அடிப்படையில் இப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பயில ஏதுவாக அரசு தொழிற்கல்வி பயிற்சிக் கூடத்தை அமைக்க வேண்டும்.

9. பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள்

புதியதாக தொடங்கப்பட்ட வெம்பாக்கம் வட்டத்தில் பொது மக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் நலன் கருதி  புதிய பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம். பேரூராட்சி, கருவூலம், கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன் வைத்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com