கெங்கவல்லி(தனி): இரு கழகங்களிடையே நேரடிப் போட்டி?

2021 தேர்தலைப் பொருத்தவரையில் அதிமுக, திமுக கட்சிகள் நேரிடையாக களம் இறங்கினால் பலத்த போட்டியாக இருக்கும்.
கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லியிலுள்ள ஊராட்சி ஒன்றிய வளாகம்
கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லியிலுள்ள ஊராட்சி ஒன்றிய வளாகம்

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்து வந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், கெங்கவல்லி, ஆத்தூர் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி சீரமைப்பு செய்யப்பட்டு, கெங்கவல்லி (தனி) தொகுதியாக பெயர்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் பிரதானத் தொழில் விவசாயம். குறிப்பாக மரவள்ளி, சவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பு, மஞ்சள், மக்காச்சோளம், நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் அதிக அளவில் விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் காணப்படுகின்றனர்.

இப்பகுதியில், கொல்லிமலையிலிருந்து உற்பத்தியாகும் சுவேத நதியும், தலைவாசல் பகுதியில் பாய்ந்தோடும் வசிஷ்ட நதியும் வங்கக் கடலில் சென்று கலக்கின்றன.

வாக்காளர் நிலவரம்:

ஆண்கள்: 1,15,581
பெண்கள்: 1,22,668
மூன்றாம் பாலினத்தவர்: 4
மொத்தம்: 2,38,253

தொகுதியிலுள்ள பகுதிகள்:

கெங்கவல்லி வட்டம், தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தலைவாசல் வட்டம் ஆகியவை இத்தொகுதியில் உள்ளன.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் என 5 பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன. மேலும், கெங்கவல்லி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளும் உள்ளன.

சமூக நிலவரம்:

இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், உடையார், நாயக்கர் என பல்வேறுபட்ட சமூகத்தினர் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.  பட்டியல் இனத்தவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பறையர் சமூகத்தினர் அதிகம். அதனால் அரசியல் கட்சியினர் இந்தச் சமூகத்திலிருந்து மட்டுமே வேட்பாளர்களை களம் இறக்கி வருகின்றன.

கடந்த தேர்தல்களின் நிலவரம்:

தலைவாசல் தொகுதியாக இருந்துவந்த வரையிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துள்ளது. எனினும், 1989-இல் தலைவாசலைச் சேர்ந்த குணசேகரனும், 2006-இல் கூடமலையைச் சேர்ந்த சின்னதுரையும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

தொகுதி சீரமைப்புக்குப் பின் கெங்கவல்லி (தனி) தொகுதியாகச் சந்தித்த முதல் தேர்தலில் (2011), அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் சுபா,  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சின்னதுரையைவிட 13,465 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: 

ஆர்.சுபா (தேமுதிக) 72,922
கு.சின்னதுரை (திமுக) 59,457
ஜெ.மணிமாறன் (சுயேச்சை) 5,978
பி.சிவகாமி (இந்திய ஜனநாயக கட்சி) 4,048
ஏ.முருகேசன்(சுயேச்சை) 2,452
ஜி.மதியழகன் (பாஜக)1,787 

2016 பேரவைத் தேர்தல் நிலவரம்:

அ.மருதமுத்து (அதிமுக) 74,301
ஜெ.ரேகாபிரியதர்ஷிணி (திமுக) 72,039
ஏ.சண்முகவேல்மூர்த்தி (பா.ம.க) 10,715
ஆர்.சுபா (தேமுதிக) 7,114
ஏ.கணேசன் (கொமதேக ) 3,786
சிவகாமி பரமசிவம் (பாஜக) 2,023
செந்தில்குமார் (நாம் தமிழர் கட்சி) 921
நோட்டா 1,766

நிறைவேறிய முக்கிய திட்டம்:

தற்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மருதமுத்துவின் பதவிக்காலத்தில்தான், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் 1,102 ஏக்கரில் ரூ. 1,022 கோடியில்,  ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இதனை அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவேறாத திட்டங்கள்:

தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்திலுள்ள சேரடிக்கும் பிள்ளையார்மதி கிராமத்துக்கும் இடையில் எழுத்துக்கல் என்ற இடத்தில் ரூ. 100 கோடியில் சேரடி அணைக்கட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2006 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின் இத்திட்டம்  கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தம்மம்பட்டியில் 2006-இல் திமுக ஆட்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க  இடம் தேர்வு வரை சென்ற பின்னர் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டதால் இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசுக் கல்லூரியில் சேர, சேலம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளுக்கு செல்லும் சூழல் இருந்து வருகிறது.

இத்தொகுதிக்கு உள்பட்ட தலைவாசலில் தினசரி காய்கறி மார்க்கெட் பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இங்கு காய்கறி இருப்பு வைத்து விற்பதற்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், தம்மம்பட்டிக்கு வட்டச் சாலை, தம்மம்பட்டிக்கு நகராட்சி அந்தஸ்து கோரிக்கைகளும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. கெங்கவல்லியில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என்பது கெங்கவல்லி மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் தொழிற்சாலைகள், அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மாணவ, மாணவிகள், இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

கள நிலவரம்: கெங்கவல்லி தொகுதியைப் பொருத்தவரையில் அதிமுகவில் அமைச்சர் வி.சரோஜா போட்டியிடக் கூடும் என பேசப்படுகிறது. அதேநேரத்தில் திமுகவைப் பொருத்தவரை சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

திமுக முன்னாள் எம்எல்ஏ கே.சின்னதுரையும் வரிசை கட்டி நிற்கிறார். இத்தொகுதியில் கடந்த 2011இல் அதிமுக கூட்டணியில் தேமுதிக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடந்த 2016 தேர்தலில் வெறும் 2,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அதிமுகவிடம் நூலிழையில் தப்பவிட்ட திமுக, இந்த முறை வெற்றி பெறும் முனைப்பில் பரம வைரியான அதிமுகவை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com