குறிஞ்சிப்பாடி: தொகுதியை மீட்குமா அதிமுக?

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக, திமுக தொடர்ந்து களம் காணுகின்றன. வரும் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியிடுவது உறுதி ஆகியுள்ளது. 
குறிஞ்சிப்பாடி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பு பயிா்கள் (கோப்புப்படம்)
குறிஞ்சிப்பாடி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பு பயிா்கள் (கோப்புப்படம்)

தொகுதியின் சிறப்பு:

கடலூர் மாவட்டத்தில் செழிப்புமிக்க பகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதியும் ஒன்று. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருட்பிரகாச வள்ளல் பெருமான் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம் வடலூரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் விளையும் மணிலா எண்ணெய் பிழித்திறன் அதிகம் கொண்டது. வடலூர் மற்றும் கடலூர் பகுதிகள் தொழிற்பேட்டைகளை கொண்டது.

நில அமைப்பு:

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி தொகுதிகளை எல்லை பகுதியாக கொண்ட தொகுதி. வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளையும், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தையும் கொண்டுள்ளது.  என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீர் விவசாயத்திற்கு உயிர் நீராக உள்ளது.

சமூகம்-சாதி-தொழில்கள்:

வன்னியர்களும், அதற்கு அடுத்தப்படியாக பட்டியலினத்தவரும் அதிகம் வசிக்கின்றனர். நாயுடு, ரெட்டியார்கள் பெருமளவு உள்ளனர். நாடார், முதலியார், செட்டியார் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமான அளவு வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, நெசவு பிரதானத் தொழிலாக உள்ளது.

வாக்காளர் விவரம்:

இத்த தொகுதியில் 1,19,707 ஆண் வாக்காளர்கள், 1,22,855 பெண் வாக்காளர்கள், இதரர் 23 பேர் என மொத்தம் வாக்காளர்கள் 2,42,585.

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்:

1962, 67, 71-இல் இராசாங்கம்(திமுக),

1977-இல் எம்.செல்வராசு(திமுக),

1980, 84-இல் எ.தங்கராசு(அதிமுக),

1989-இல் என்.கணேசமூர்த்தி(திமுக),

1991-இல் கே.சிவசுப்ரமணியன்(அதிமுக),

1996, 2001, 2006, 2016-இல் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்(திமுக),

2011-இல் சொரத்தூர் ரா.ராஜேந்திரன்(அதிமுக)

என திமுக 9 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு செல்வாக்குள்ள பகுதிகள்: வன்னியர்கள், பட்டியலினத்தவர், நாயுடு, ரெட்டியார் அதிக அளவில் உள்ளனர். திமுக, அதிமுகவிற்கு செல்வாக்குள்ள பகுதி. ஆனாலும், திமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது.

நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்:

பெருமாள் ஏரியை தூர்வாரி படகு சவாரி விடப்படும் என அதிமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், திமுக ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது கிடப்பில் உள்ளது.

தொகுதியின் எதிர்பார்ப்புகள்:

வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகரமாக்க அறிவிப்பது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள பாதிப்பில் இருந்து மக்களையும், விவசாய பயிர்களையும் காப்பது. நலிவடைந்துள்ள கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்துவது. என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கடல் நீர் உட்புகுவதை நிறுத்த வேண்டுதல். தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுப்பது ஆகியவை முக்கியக் கோரிக்கையாக உள்ளன.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக, திமுக தொடர்ந்து களம் காணுகின்றன. வரும் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். பாமகவும் குறிஞ்சிப்பாடி தொகுதியை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com