பரமத்திவேலூர்: திமுக மீண்டும் வெற்றி பெறுமா?

தொகுதியிலுள்ள நகர்ப்புறப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளன. திமுக வென்ற தொகுதி என்பதால் இங்கு பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை
பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்.
பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தொகுதி 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பரமத்திவேலூர் தொகுதியைக் கடந்து செல்கிறது. கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்கள் இதன் எல்லைகளாக உள்ளன.

கரூர்- நாமக்கல்லை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மிகப் பெரிய இரண்டு பாலங்கள் உள்ளன. ஜேடர்பாளையம் படுகையணையும், படகு இல்லத்துடன் கூடிய அண்ணா பூங்காவும் சுற்றுலாத்தலமாக உள்ளன.

பரமத்தி வேலூரில் காவிரிக் கரையில் காசிக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயமும் உள்ளன.

வாக்காளர் விவரம்:

ஆண்கள்:1,06,572,
பெண்கள்: 1,14,408,
மூன்றாம் பாலினத்தவர்: 6.
மொத்தம்: 2,20,986.
வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை: 333

தொகுதியின் பகுதிகள்:

இதற்கு முன் இருந்த கபிலர்மலை சட்டப்பேரவைத் தொகுதியானது 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது கபிலர்மலை நீக்கப்பட்டு, பரமத்தி வேலூர் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பில், மோகனூர் ஒன்றியம் நீக்கப்பட்டு, எலச்சிபாளையம் ஒன்றியம் புதிதாகச் சேர்க்கப்பட்டது. கபிலர்மலை, பரமத்தி, எலச்சிபாளையம் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில் எலச்சிபாளையத்தில் மொத்தமுள்ள 29 ஊராட்சிகளில் ஒன்பது ஊராட்சிகள் மட்டும் அடங்கும்.

மேலும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய 5 பேரூராட்சிகள் உள்ளன. ஜேடர்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, நல்லூர் பரமத்தி, எஸ்.வாழவந்தி, குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, பொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன.

பரமத்தி வேலூர் தொகுதியில் 70 சதவீதம் விவசாயம் சார்ந்தே உள்ளது. இங்கு வாழை, வெற்றிலை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு பயிர்களும், வெல்லம், முட்டை, தேங்காய் உற்பத்தியும் முக்கிய தொழிலாக விளங்குகின்றன. மேலும் பட்டு நெசவு, செங்கல் உற்பத்தித் தொழிலிலும் நடைபெறுகிறது.

இதுவரை நடந்த தேர்தல்கள்:

  • கபிலர்மலை தொகுதியாக இருந்தபோது:

1962:  வி.வேலப்ப கவுண்டர் (திமுக)
1967:  சி.வி.வேலப்பன் (திமுக)
1971:  சி.வி.வேலப்பன் (திமுக)
1977:  கே.செங்கோடன் (அதிமுக)
1980:  சி.வி.வேலப்பன் (அதிமுக)
1984:  பி.செங்கோட்டையன் (காங்கிரஸ்)
1989:  கே.ஏ.மணி (அதிமுக)
1991:  பி.சரஸ்வதி (அதிமுக)
1996:  கே.கே.வீரப்பன் (திமுக)
2001:  ஏ.ஆர்.மலையப்பசாமி (பாமக)
2006: கே.நெடுஞ்செழியன் (பாமக)

  • தொகுதி மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு வென்றோர்:

2011:  உ.தனியரசு (அதிமுக கூட்டணி)
2016:  கே.எஸ்.மூர்த்தி (திமுக) 74,418
           ஆர்.ஆர்.ராஜேந்திரன் (அதிமுக) 73,600
 

தொகுதியின் பிரச்னைகள்: 

விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த இத்தொகுதியில் வாழ்வாதாரத்துக்கான வேறு வாய்ப்பு ஏதுமில்லை. வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காவிரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை இல்லை.

கட்சிகளின் செல்வாக்கு: 

தொகுதியிலுள்ள நகர்ப்புறப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளன. திமுக வென்ற தொகுதி என்பதால் இங்கு பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசின் விலையில்லாத் திட்டங்கள் மட்டும் பிற தொகுதிகளைப் போல இங்கும்  நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக, திமுக, அமமுக ஆகியவை நேரடியாகப் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

கடந்த 2016 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியைத் தழுவியதால் இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளரும், மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி வியூகங்களை அமைத்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com