

தமிழகத்தில் மலைவாழ் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் சேலம் மாவட்டம், ஏற்காடு (எஸ்.டி) தொகுதி ஒன்றாகும். ‘ஏழைகளின் உதகை' என வர்ணிக்கப்படும் கோடை சுற்றுலாத் தலமான சேர்வராயன் மலையிலுள்ள ஏற்காடு நகரை மையமாகக் கொண்டு இத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு, சேர்வராயன் மலைக் கிராமங்களில் காபி, மிளகு தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஏற்காட்டில் விளையும் காபி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உலக அளவில் ருசியான காபி ஏற்காட்டில் பயிரிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,500 டன் காபி விளைகிறது.
கல்வராயன் மலை, அருநூற்று மலைக்கிராமங்களில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக விளங்கி வருகின்றன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில், பாக்கு, தேங்காய் உற்பத்தி தொழிலாளர்கள், நூற்பாலைத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1,38,409
பெண்கள் :1,44,231
மூன்றாம் பாலினத்தவர்: 16
மொத்தம்: 2,82,656
தொகுதியின் பகுதிகள்:
ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் ஏற்காடு வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட சேர்வராயன் மலைக் கிராமங்கள், வாழப்பாடி வருவாய் வட்டத்திலுள்ள அருநூற்று மலை, சந்து மலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்து மலைக் கிராமங்கள், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து வருவாய்க் கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.
பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, நெய்ய மலை கிராமங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இதுவரை நடந்த தேர்தல்கள்:
ஏற்காடு தொகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் 2016 வரை நடைபெற்ற பொதுத்தேர்தல், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2011 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சி.பெருமாளின் மறைவுக்குப் பிறகு, 2013இல் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி சரோஜா அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.தமிழ்ச்செல்வனை, அதிமுக சார்பில் போட்டியிட்ட சேர்வராயன் மலை, ஏற்காடு, மஞ்சக்குட்டையை சேர்ந்த கு.சித்ரா 17,394 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்த நிலையிலும், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட சி.பெருமாள், தி.மு.க. வேட்பாளர் தனக்கோடிவேதனைவிட 6,441 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை வாழப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக 2016 தேர்தலில் சேர்வராயன்மலை} ஏற்காடு, மஞ்சக்குட்டை பகுதியைச் சேர்ந்த கு.சித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிறைவேற்றிய திட்டங்கள்:
இருப்பினும் ஏற்காடு சேர்வராயன் மலை, அருநூற்று மலை, பெலாப்பாடி, நெய்ய மலை, கல்வராயன் மலை, மண்ணூர் மலைக் கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தார்சாலை அமைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது மலைவாழ் மக்களிடையே அதிமுகவுக்கு செல்வாக்கைக் கூட்டியுள்ளது.
நிறைவேறாத கோரிக்கைகள்:
2016 பேரவைத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லுôரி அமைத்தல், தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தல், தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு சேலம் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளதால், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, ஏற்காடு, வாழப்பாடி வருவாய் வட்டங்களை ஒருங்கிணைத்து வாழப்பாடியை மையமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மலைக் கிராம மக்களிடையே நிலவுகிறது.
சேர்வராயன் மலை போலவே, இயற்கை எழில் கொஞ்சும் அருநூற்று மலை அடிவாரம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கரியகோயில் அணைகளிலும், சிறுவர் பூங்கா, தங்கும் குடில்கள், படகுத்துறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.
பயன்படாத எம்எல்ஏ அலுவலகம்:
ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகம், வாழப்பாடியை அடுத்த பேளூரில், அயோத்தியாப்பட்டணம் சாலையில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த அலுவலகத்தை இதுவரை எந்த சட்டப்பேரவை உறுப்பினரும் பயன்படுத்தாததால் கட்டிய நாள் முதல் இதுவரை பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. இதனால், சட்டப்பேரவை உறுப்பினரைச் சந்திப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் தொடர்கிறது.
வரும் தேர்தலில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினராவது பேளூரிலுள்ள தொகுதி அலுவலகத்துக்கு மாதம் ஒரு முறை வருகை தந்து மக்கள் குறைகளைக் கேட்டறிய வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தொகுதி நிலவரம்:
பொதுவாக, ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில், திமுகவை விட அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. வன்னியர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்காளர்கள் உள்ளனர். இவை அதிமுக கூட்டணிக்கு சாதகம்.
ஏற்காடு தொகுதியைப் பொருத்த வரை, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் மீதும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு குற்றச்சாட்டு ஏதுமில்லாததால், வரும் தேர்தலிலும் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.