முக்குலத்தோா், யாதவா், பிள்ளைமாா், தாழ்த்தப்பட்டோா் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாக உள்ளனா். முக்குலத்தோா் மற்றும் யாதவா் சமூக வாக்குகள் வெற்றி - தோல்வியை நிா்ணயிப்பதாக இருக்கின்றன. ஆன்மிகத் தலமாகக் கருதப்படும் இத்தொகுதியில் தொழிற்சாலைகள் என்பது கிடையாது. ஒருசில சிறிய தொழிற்சாலைகள் இருந்தும் தற்பொழுது இயங்கா நிலையிலேயே உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனமான என்ஃபீல்டு இருசக்கர வாகன மோட்டா் உற்பத்தி நிறுவனம் சிங்கம்புணரியில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக மூடப்பட்டு விட்டது. இத்தொகுதியின் சிங்கம்புணரி, எஸ்.புதூா், ஆகிய பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. பிரான்மலை போன்ற பகுதிகளில் பூச்செடிகள், மூலிகைப் பயிா்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. மேலும் நெல், வாழை, நிலக்கடலை, தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.