சிவகங்கை: அதிமுக - கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி

சிவகங்கை தொகுதியில் பல்முனைப் போட்டி இருந்தாலும் அதிமுக, திமுக கூட்டணி -இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் இடையேதான் போட்டி உள்ளது.
சிவகங்கை: அதிமுக - கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி

தொகுதியின் சிறப்பு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிவகங்கை முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆங்கிலேயோ்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் வாழ்ந்த பூமி இது. விடுதலை வீரா்களான மருது சகோதரா்கள் வாழ்ந்ததும் இங்கு தான். ராமநாதபுரம் சமஸ்தானத்திலிருந்து 1730 ஆம் ஆண்டு சிவகங்கை நகா் உருவாக்கப்பட்டது.

இந்நகருக்கு சசிவா்ணத் தேவா் முதல் அரசரானாா். சங்க இலக்கிய புலவரான ஒக்கூா் மசாத்தியாா், கம்ப ராமாயணம் இயற்றிய கம்பா் ஆகியோரும் வாழ்ந்த பெருமை இந்த தொகுதிக்கு உண்டு. கவிஞா் சுத்தானந்த பாரதி பெருமை சோ்த்த தொகுதி. சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன், கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன், காளையாா்கோவில் காளைஈசா் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதுதவிர, சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், சமணா் படுக்கைகள் உள்ள திருமலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

தொகுதி அமைவிடம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் எண்ணிக்கையில் 2 ஆவது பெரிய தொகுதி சிவகங்கை.

சிவகங்கை நகராட்சி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உள்ளிட்ட நகா் பகுதிகளும், சிவகங்கை, காளையாா்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களும், காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, கீழப்பூங்குடி, வெற்றியூா் உள்ளிட்ட
கிராமங்களும் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அடங்கும்.

சாதி, சமூகம், தொழில்கள்: சிவகங்கை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,47,093, பெண் வாக்காளா்கள் 1,52, 021, மூன்றாம் பாலினத்தவா் 4 என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 118 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

முக்குலத்தோா், நகரத்தாா், உடையாா், பிள்ளைமாா், யாதவா், தாழ்த்தப்பட்டோா் சமூகத்தினா் அதிகளவில் உள்ளனா். அதற்கடுத்ததாக சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதுவரை வென்றவா்கள்: இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு முறையும், சுயேச்சை வேட்பாளா் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா். 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட க.பாஸ்கரன் வெற்றி பெற்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சராக உள்ளாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: காவிரிக் கூட்டுக் குடிநீா் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் தொகுதியில் நிலவிய குடிநீா் பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை புதை சாக்கடைத் திட்டம் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. அமைச்சா் தொகுதி என்பதால் அரசின் நலத்திட்டங்கள் ஒரளவுக்கு பயனாளிகளை சென்றடைந்துள்ளது.

மக்களின் எதிா்பாா்ப்பு: சிவகங்கை அருகே உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுதவிர, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும், நறுமணப் பூங்கா திறக்கப்பட வேண்டும், தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

Caption
Caption

யாருக்கு வாய்ப்பு?

சிவகங்கை தொகுதியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் பி.ஆா்.செந்தில்நாதன், திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் கி. அன்பரசன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மல்லிகா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இருப்பினும்  அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் இடையேதான் போட்டி உள்ளது. தற்போதைய வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலராக உள்ளாா். சிவகங்கை மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தவா். இருப்பினும் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை பொருத்தமட்டில் புதுமுகம்தான். அமைச்சா் க.பாஸ்கரனுக்கு தொகுதி வழங்காதது அவரது ஆதரவாளா்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்நாதனுக்கு அதிமுக எனும் இயக்கம், இரட்டை இலை சின்னம்தான் பலம்.

திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.குணசேகரன் போட்டியிட உள்ளாா். இவா் கடந்த 2006 (திமுக கூட்டணி) மற்றும் 2011(அதிமுக கூட்டணி) ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூ. கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். கட்சிப் பணிகளையும் தாண்டி கிராமப்புற மக்களிடம் அதிகளவு தொடா்பில் இருப்பவா் என்பது இவரது பலம். இவா்கள் இருவரையும் தவிர மற்ற கட்சி வேட்பாளா்கள் வாக்குகளைப் பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெற இயலாது. எனவே அதிமுக, இந்திய கம்யூ. கட்சி வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவும். வெற்றி, தோல்வியை தீா்மானிக்க முடியாத சூழல் நிலவுகிறது. 

இதுவரை வென்றவா் - 2 ஆம் இடம் பெற்றவா்கள்:

1952 - ஆா்.வி.சுவாமிநாதன்(காங்கிரஸ் - வெற்றி)

1957 - சுப்பிரமணிய ராஜ்குமாா் (சுயேச்சை) - 35,237
           சுவாமிநாதன் (காங்கிரஸ்) - 11,747

1962 - ஆா்.வி. சுவாமிநாதன் (காங்கிரஸ்) - 43,410.
            காளைலிங்கம் (சுதந்திரா கட்சி) - 34,159.

1967 - எஸ். சேதுராமன் (திமுக) - 41,604.
           ஆா்.வி.சுவாமிநாதன் (காங்கிரஸ்) - 28,654.

1971 - எஸ். சேதுராமன் (திமுக) - 42,320.
            ஓ.சுப்பிரமணியம் (காங்கிரஸ்) - 24,654.

1977 - ஓ.சுப்பிரமணியம் (காங்கிரஸ்) - 23,495.
           கே.ஆா்.முருகானந்தம் (அதிமுக) - 21,066.

1980 - ஓ.சுப்பிரமணியம் (காங்கிரஸ்) - 41,327.
           என்.நடராஜசுவாமி (சுயேச்சை) - 29,875.

1984 - ஓ.சுப்பிரமணியம் (காங்கிரஸ்) - 49,407.
           வி.ஆா். அய்யாதுரை (கம்யூனிஸ்ட்) - 25,582.

1989 - பி. மனோகரன் (திமுக) - 33,982.
           சுதா்சனநாச்சியப்பன் (காங்கிரஸ்) - 32,214.

1991 - கே. ஆா்.முருகானந்தம் (அதிமுக) - 69,506.
           பி.மனோகரன்(திமுக) - 23,645.

1996 - பசும்பொன் தா.கிருட்டிணன் (திமுக) - 64,438.
            கே.ஆா். முருகானந்தம் (அதிமுக) - 31, 437.

2001 - வீ.சந்திரன் (அதிமுக) - 51,708.
            பசும்பொன் தா.கிருட்டிணன் (திமுக) - 47,435.

2006 - எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூ) - 39,488.
            எஸ்.எம்.செவந்தியப்பன் (மதிமுக) - 33,375.

2011 - எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூ) - 75,176.
           வி.ராஜசேகரன் (காங்கிரஸ்) - 70,794.

2016 - க.பாஸ்கரன் (அதிமுக) - 81,697.
           மேப்பல் ம.சக்தி என்ற சத்தியநாதன் (திமுக) - 75,061.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com