ஈரோடு கிழக்கு: வெற்றியை நிர்ணயிக்கும் சமுதாய வாக்குகள்

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் சம பலத்தில் இருந்தாலும் இரு கட்சிகளில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அந்த கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது. 
ஈரோடு காளை மாடு சிலை
ஈரோடு காளை மாடு சிலை

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி, ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது.  இதன்மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். துணிகளுக்கு சாயமிடுதல், ப்ளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

இங்கு அப்துல் கனி சந்தைப் பகுதியில் திங்கள்கிழமை நடக்கும் இரவு சந்தையில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மறு சீரமைப்பில் உருவான தொகுதி: 2008 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டப்பேரவை தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதி உருவானது. அதன் பின்பு நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது. 2011இல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவின் வி.சி.சந்திரகுமாரும், 2016இல் அதிமுகவின் கே.எஸ். தென்னரசுவும் வெற்றிபெற்றனர்.

2011 தேர்தலில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தேமுதிக வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ். தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் ஆண்  வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15  ஆயிரத்து 987, மூன்றாம் பாலினம் 15 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 26  ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர்(ஈரோடு தொகுதியாக இருந்தபோது)
வெற்றிபெற்றவர்கள், இரண்டாம் இடம் பிடித்தவர்கள் விவரம்:


1951: வெற்றி பெற்றவர் - ராஜூ (இந்திய பொதுவுடமைக் கட்சி)
இரண்டாம் இடம் - தெய்வசிகாமணி கவுண்டர் (காங்கிரஸ்)

1957: வெற்றி பெற்றவர்- வி.எஸ்.மாணிக்கசுந்தரம் (காங்கிரஸ்)
இரண்டாம் இடம் - ராஜூ (இந்திய பொதுவுடமைக் கட்சி)

1962: வெற்றி பெற்றவர் -எ.எஸ்.தட்சிணாமூர்த்தி கவுண்டர் (காங்கிரஸ்)
இரண்டாம் இடம் - எம்.சின்னுசாமி கவுண்டர்

1967: வெற்றி பெற்றவர் - எம்.சின்னசாமி (திமுக)
இரண்டாம் இடம் - பி.அர்சுனன் (காங்கிரஸ்)

1971: வெற்றி பெற்றவர் - எம். சுப்ரமணியன் (திமுக)  
இரண்டாம் இடம் - கே.பி.முத்துசாமி (ஸ்தாபன காங்கிரஸ்)

1977: வெற்றி பெற்றவர் - எஸ்.முத்துசாமி (அதிமுக)
இரண்டாம் இடம் - எம். சுப்ரமணியன் (திமுக)

1980: வெற்றி பெற்றவர் - எஸ்.முத்துசாமி (அதிமுக)
இரண்டாம் இடம் - ஆர்.சாய்நாதன் (காங்கிரஸ்)

1984: வெற்றி பெற்றவர் - எஸ்.முத்துசாமி (அதிமுக)
இரண்டாம் இடம் - சுப்புலட்சுமி ஜெகதீசன்(திமுக)

1989: வெற்றி பெற்றவர் - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
இரண்டாம் இடம் - எஸ்.முத்துசாமி (அதிமுக ஜானகி அணி)

1991: வெற்றி பெற்றவர் - சி. மாணிக்கம் (அதிமுக)
இரண்டாம் இடம் - அ.கணேசமூர்த்தி (திமுக)

1996: வெற்றி பெற்றவர் - என்.கே.கே.பெரியசாமி (திமுக)
இரண்டாம் இடம் - எஸ்.முத்துசாமி (அதிமுக)

2001: வெற்றி பெற்றவர் - கே. எஸ்.தென்னரசு (அதிமுக)
இரண்டாம் இடம் - என்.கே.கே.பெரியசாமி (திமுக)

2006: வெற்றி பெற்றவர் - என்.கே.கே.பி.ராஜா (திமுக)
இரண்டாம் இடம் - ஈ.ஆர்.சிவகுமார்(அதிமுக)
 
பிரச்னைகள்: ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்படும் சாய மற்றும் தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதாரச் சீர்கேட்டை அளித்து வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கால கோரிக்கை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள், 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவுக்கு வராத மின் புதைவடம் அமைக்கும் திட்டம் போன்றவை தீராத பிரச்னையாக நீடிக்கிறது.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: 

ஈரோடு நகரின் முக்கியப் பிரச்னையான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தியதும், ஈரோடு நகரில் அரசு மருத்துவமனை நான்கு முனை சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைத்ததும், ஈரோடு அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி பணிகள் நடப்பது, ஜவுளி வளாகம் கட்டுமானப் பணிகளை தொடங்கி இருப்பது போன்றவை வெகுஜன மக்களின் பார்வையில் 5 ஆண்டுகளில் செய்த சாதனையாக கவனம் பெறுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு: பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவது, நகரில் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாதி வாக்குகள் பலம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளும்,  30 சதவீதம் அளவுக்கு முதலியார் சமுதாய வாக்குகளும், நாடார், தேவர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 30  சதவீதம் பேர் உள்ளனர்.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் கட்சி வாக்குகள் சம பலத்தில் உள்ள தொகுதியாக இருந்தாலும், இந்த இரண்டு கட்சிகளில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. நகர்ப்பகுதியாக இருப்பதால் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் கவனம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மீது திரும்ப வாய்ப்புள்ளது. இந்த தொகுதியில் சுமார் 20,000 புதிய வாக்காளர்கள் உள்ளனர்.  

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: 2021 தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் போட்டியிட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியை எதிர்பார்க்கிறது.  

படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com