ஈரோடு மேற்கு: 30 ஆயிரம் இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் இதில் அடங்கியுள்ளன.
ஈரோடு ரயில் நிலையம்
ஈரோடு ரயில் நிலையம்


ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்டது ஈரோடு மேற்குத்   தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் இதில் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளன. தொகுதி வாக்காளர்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவுத் தொழிலை 50 சதவீதம் பேரும் சார்ந்துள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: பெருந்துறை வட்டத்தில் வடமுகம்  வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள்.

ஈரோடு வட்டத்தில்  கரை எல்லப்பாளையம்,  எலவமலை,  மேட்டுநாசுவம்பாளையம், பேரோடு,  நொச்சிபாளையம்,  கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல்திண்டல், கீழ்திண்டல், கதிரம்பட்டி,  ராயபாளையம், மேட்டுக்கடை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர்புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம்,  வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்.

மறு சீரமைப்பில் உருவான தொகுதி: 2008 இல் தொகுதி மறு சீரமைப்பில் இந்தத் தொகுதி உருவானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி.  இங்கு ஆண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 913 வாக்காளர்கள், பெண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 393 வாக்காளர்கள், மூன்றாம் பாலினம் 30 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 316  வாக்காளர்கள் உள்ளனர்.

2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுகவைச் சேர்ந்த கே.வி.இராமலிங்கம் வெற்றி பெற்றார். 2011-இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித்  தலைவராக உள்ள எம்.யுவராஜா, 2016-இல் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கே.வி.ராமலிங்கத்திடம் தோல்வியடைந்தனர். கடந்த 2016 தேர்தலில் கே.வி.இராமலிங்கம், திமுக வேட்பாளர் சு.முத்துசாமியைவிட 4,906 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

ஈரோடு நகருக்கு குடிநீர் வழங்கக் காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்டமைப்பு  
ஈரோடு நகருக்கு குடிநீர் வழங்கக் காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்டமைப்பு  

வலுவான சமுதாய வாக்குகள்: இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் 45 சதவீதம் அளவுக்கு உள்ள நிலையில் இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் வகுப்பினர், முதலியார், நாடார், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

தீர்க்கப்படாத பிரச்சனைகள்: மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். முழுமையாக நிறைவேற்றப்படாத புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிறைவு பெறாத சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் போன்றவை வாக்காளர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
 
மக்களின் எதிர்பார்ப்பு: 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் கே.வி. இராமலிங்கம் எம்எல்ஏவாக இருக்கிறார். மாநகராட்சிப் பகுதிக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் கொண்டுவந்ததுதான் இவர் செய்த ஒரே பெரிய திட்டம்.

ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்படும் என அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.  சாய, தோல் கழிவு பிரச்னைக்கு தீர்வு காண பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோடு - சத்தி சாலையில் சித்தோடு முதல் ஈரோடு பேருந்து நிலையம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படாதது, விசைத்தறி தொழிலின் முக்கியப் பிரச்னையான நூல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படாதது போன்ற பிரச்னைகள் தற்போதையை அதிமுக எம்எல்ஏ மீது மக்களுக்கு எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சாதனைகள்: நகரப் பகுதிகளில் ஏராளமான பூங்காக்கள் அமைத்ததும், குடிநீர், சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தியதும் அதிமுக எம்எல்ஏவின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. 
 
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: தொடர்ந்து இரண்டு முறை இந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கே.வி.இராமலிங்கம், 2021 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும் ஈரோடு கிழக்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு மீண்டும் யுவராஜா அல்லது அக்கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

அதிமுக நேரடியாக களம் இறங்கினால் முதல்வருக்கு நெருக்கானமானவரான முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. திமுகவில் மீண்டும் சு.முத்துசாமி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

கடந்த 2016 தேர்தலில் இங்கு தனித்துப்போட்டியிட்ட கொமதேக  7,477  வாக்குகளைப் பெற்றது. மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக 6,624 வாக்குகளை பெற்றது. இப்போது அந்த கட்சிகள் கூட்டணியில்  இருப்பது  திமுகவுக்கு பலமாக கருதப்படுகிறது.

இந்தத் தொகுதியை பொருத்தவரை திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்பு அதிகம். அதிமுகவில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அந்த கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற கடுமையாக போராட வேண்டிய நிலை உருவாகும். அதிமுக நேரடியாக களமிறங்கினால் இந்த தொகுதிக்கு புதிய வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பது அக்கட்சிக்கு காலத்தின் கட்டாயம் என கூறலாம். இந்தத் தொகுதியில் 18 முதல் 21 வயதுக்குள்பட்ட சுமார் 30,000 இளம் வாக்காளர்கள் இருக்கின்றனர். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் இவர்களை இலக்காகக் கொள்கிறது.  இவர்கள் யார் பக்கம் நிற்கப் போகிறார்கள் என்பதும் வெற்றியில் பெரும் பங்காற்றும்.  

படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com