தென்காசி: 462 வாக்குகளில் வெற்றி - தோல்வி இடம் மாறிய தொகுதி

காங்கிரஸ் கட்சியினரும் இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவே நேரடியாக போட்டியிடும் சூழல் நிலவுகிறது.
குற்றாலம்
குற்றாலம்

தென்காசி மாவட்டத்தின் தலைநகராகத் திகழ்கிறது தென்காசி தொகுதி. காசி விஸ்வநாதர்  ஆலயம், குற்றாலம் அருவிகள், தென்காசி தொகுதியின் அடையாளங்கள். ஒவ்வோர் ஆண்டும் 9 மாதங்கள் மிகவும் இதமான தட்பவெப்பநிலையே இங்கு நிலவும். இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். மிகப்பெரிய சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிகள் இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு.

குற்றாலம் அருவிகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள்.

தென்காசியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து  48 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். இத் தொகுதியின் மொத்த வாக்குசாவடிகள் 326.

தென்காசி தொகுதியில் தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் ஆகிய இரண்டு வட்டங்கள் உள்ளன. 

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1952-இல்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிள்ளை, 1957-இல் சுயேச்சை வேட்பாளர் ஏ.கே. சட்டநாதகரையாளர், 1962-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.சுப்பையா முதலியார், 1967ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. சிதம்பரம்பிள்ளை, 1971-இல் திமுகவைச் சேர்ந்த சம்சுதீன் என்ற கதிரவன், 1977-இல் காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த எஸ்.முத்துசாமிகரையாளர், 1980-இல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே.சட்டநாத கரையாளர், 1984-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.ஆர்.வேங்கடரமணன், 1989 மற்றும் 1991-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சா.பீட்டர் அல்போன்ஸ், 1996-இல் தமாகாவைச் சேர்ந்த கே.ரவிஅருணன்,

2001-இல் அதிமுகவைச் சேர்ந்த கே.அண்ணாமலை, 2006-இல் திமுகவைச் சேர்ந்த வீ.கருப்பசாமி பாண்டியன், 2011-இல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார், 2016-இல் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இத்தொகுதியில் 7 முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், 3 முறை அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்கள் இருமுறையும், சுயேட்சை வேட்பாளர், தமாகா மற்றும் சமக வேட்பாளர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொகுதியைப் பொருத்தவரையில் நாடார், முக்குலத்தோர், தலித் வாக்குகள் அதிகமாக உள்ளன. 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இத்தொகுதி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து போட்டியிட்டனர்.

நிறைவேறிய கோரிக்கைகள்: இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், இப்பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையான தென்காசி தனி மாவட்டம், 50 ஆண்டுகால கோரிக்கையான ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியிருப்பது முக்கிய சாதனைகளாகும்.

அதேநேரத்தில் செண்பகக் கால்வாய் அமைக்கும் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படவில்லை. குற்றாலத்தை மேலும் மெருகூட்டுவதற்காக எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இத்தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு தொழிற்சாலைகூட  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்காசி தொகுதியைப் பொருத்தவரையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இதுதவிர அமமுக, பாஜக, தமுமுக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவிலான வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ளன.

பலமும் பலவீனமும்: அமமுகவைப் பொருத்தவரை தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூர் உள்பட 20 முதல் 25 கிராமங்களில் மிகவும் வலுவாக உள்ளது. இந்த வாக்குகள் இதுவரையிலும் அதிமுகவிற்கே சாதகமாக இருந்து வந்தது. தற்போதையை சூழ்நிலையில் அமமுக வாக்குகள் அதிமுகவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
அதேவேளையில் கடந்த முறை இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பா.செல்வி 11 ஆயிரத்து 716 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது அக்கட்சிக்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தொகுதியில் அதிமுக, திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புகின்றனர். அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாநில அமைப்புச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், கூட்டணி கட்சியான சமக நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.

திமுக சார்பில் அதன் மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் போட்டியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதுடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களையும் தென்காசியை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 462 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே காங்கிரஸ் கட்சியினரும் இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவே நேரடியாக போட்டியிடும் சூழல் நிலவுகிறது. தேர்தலில் வேட்பாளர் சார்ந்த ஜாதி, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள், வேட்பாளரின் மீதான மக்களின் பார்வை போன்றவையே வெற்றியை நிர்ணயிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com