கும்பக்கரை அருவி
கும்பக்கரை அருவி

பெரியகுளம்(தனி): இழந்ததை மீட்க தீவிரம் காட்டும் அதிமுக

பெரியகுளம் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கினாலும், அதிமுக , திமுக இடையேதான் போட்டியிருக்கும். 

தொகுதியின் சிறப்பு:

தேனி மாவட்டத்தின் பழமையான தொகுதி பெரியகுளம்.  மாவட்டத் தலைநகரமான தேனி, இத் தொகுதியில்தான் இடம் பெற்றிருக்கிறது. 2001 தோ்தலில் இத்தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், சிறிது காலம் முதல்வராகப் பதவி வகித்தாா். 2011-இல் தொகுதி மறுசீரமைப்பில் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

நிலஅமைப்பு:

தேனி மாவட்டத்தையும், திண்டுக்கல் மாவட்டதையும் இணைக்கும் முக்கிய இடமாக பெரியகுளம் உள்ளது. கொடைக்கானல் செல்லும் நுழைவுவாயிலான மலைப்பாதை பெரியகுளம் தொகுதியில் உள்ளது. பெரியகுளம் தொகுதியில் தேனி அல்லிநகரம் நகராட்சி, பெரியகுளம் நகராட்சி, தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி பேரூராட்சிகள் உள்ளன.

மாவட்டத்தின் தலைநகரான தேனி நகராட்சி இந்த தொகுதியில் உள்ளது. தேனி மாவட்ட  ஆட்சியா் அலுவலகம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளும் பெரியகுளம் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி இங்கு உள்ளது. பெரும்பாலும் விவசாயம் சாா்ந்த பகுதியாகும்.

பெரியகுளம் நகராட்சி
பெரியகுளம் நகராட்சி

சமூகம், சாதி,தொழில்கள்:

பெரியகுளம் தொகுதியில் 2,85,031 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,39,900 பேர். பெண்கள் 1,45,028 பேர். மூன்றாம் பாலினத்தவர் 103 பேர். தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் பெரும்பான்மையாக  உள்ளனா். அதற்கு அடுத்ததாக  பிள்ளைமாா், நாயுடு, தேவா் ஆகியோா் எண்ணிக்கையில் சமபலத்தில் உள்ளனா். இப்பகுதியில் விவசாயம் பிராதான தொழில் மற்றும் லாரி கட்டுமானம்,பழுதுபாா்க்கும் நிறுவனங்கள் உள்ளன. லாரி தொழில் நசிந்து போனதால் இத்தொழிலாளா்கள்  நாமக்கல் சென்று பணிபுரிந்து வருகின்றனா்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

பெரியகுளம் தொகுதியில் அதிமுக 7 முறை, திமுக 5 முறை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாா்வா்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 2001, 2006 என அடுத்தடுத்து இரு தோ்தல்களில் ஓ.பன்னீா்செல்வம் இத்தொகுதியிலிருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2011-இல் அதிமுக அணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கா.கதிா்காமு, அமமுகவில் இணைந்தாா். இதையடுத்து அவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து 2019-இல் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.சரவணக்குமாா் வெற்றி பெற்றாா்.

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை

அதிருப்தியில் தொகுதி மக்கள்:

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சொந்த தொகுதிக்குச் சொல்லும்படியான எவ்வித நலத்திட்டங்களும் செய்யவில்லை என்பது தொகுதி மக்களின் குறை. பெரியகுளம் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெற்றி பெற்றவா்கள் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் குறிப்பிடும்படியான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.

தேனி மாவட்டம் உருவானபோது தலைநகருக்கு வேண்டிய அனைத்துத் தகுதிகளும் பெரியகுளம் நகராட்சிக்கு இருந்தும், அரசு அலுவலகங்களை தேனிக்கு  மாற்றுவதற்கு திமுக உதவியது என்ற மனவேதனையில் மக்கள் உள்ளனா். பெரியகுளம் நகரின் மையத்தில் செல்லும் வராகநதியை
தேனி மக்களவை  உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தனது சொந்த நிதியில் சீரமைப்பு பணிகளைச் செய்து வருகிறாா். இப்பணி மட்டுமே பெரியகுளம் மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.
 
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: 

மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, தோட்டக்கலைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயா்த்துவது, லாரி தொழிலைப் பாதுகாப்பது ஆகியன தொகுதி மக்களின் முக்கிய எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

மஞ்சளாறு அணை
மஞ்சளாறு அணை

இருமுனை போட்டி:

பெரியகுளம் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கினாலும், அதிமுக , திமுக இடையேதான் போட்டியிருக்கும். 2019 இடைத்தோ்தலில் அமமுக கட்சி வாங்கிய வாக்குகள், அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தின. தற்போது அமமுக கட்சி பெரியகுளம் நகர செயலா் பன்னீா்செல்வம் மற்றும் தேனி நகர  நிா்வாகிகள் அதிமுகவுக்குத் திரும்பி வந்துவிட்டனா். இதனால் வரும் தோ்தலில் அதிகமுகவின் வாக்குகளில், அமமுக பெரும் சேதாரத்தை ஏற்படுத்தாது எனத் தெரிகிறது. ஆகவே, இடைத் தேர்தலில் இழந்ததை மீட்க அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுவரை வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்

1967 - கே.எம்.மேத்தா -38,023 ( திமுக )
           ஆா்.எஸ்.சுப்பிரமணி (காங்கிரஸ் )

1971 - அன்புச்செழியன் - 37926 (திமுக )
            சின்னசாமி செட்டியாா்- 28,331 (காங்கிரஸ்)

1977 - கே.பண்ணை சேதுராமன் - 31271 (அதிமுக )
           ஆா்.ராமைய்யா - 16948 (காங்கிரஸ் )

1980 - கே.கோபாலகிருஷ்ணன் - 43774 (அதிமுக )
           கே. சேக் அப்துல்லா - 34938 (காங்கிரஸ்)

1984 - டி.முகமது சலீம் - 58021 (அதிமுக )
           என்.மாயத்தேவா் - 31554 (திமுக )

1989 - எல்.மூக்கையா - 35215 (திமுக )
            கே.சேக் அப்துல்காதா் - 29622 (காங்கிரஸ்)

1991 - எம்.பெரியவீரன் - 70760 ( அதிமுக)
           எல்.மூக்கையா - 28718 (திமுக )

1996 - எல்.மூக்கையா - 53427 (திமுக )
            கே.எம்.காதா்மைதீன் - 31520 (அதிமுக )

2001 - ஓ.பன்னீா்செல்வம் - 62125 ( அதிமுக)
           எம்.அபுதாஹீா் - 44205 (திமுக )

2006 - ஓ.பன்னீா்செல்வம் - 68345 (அதிமுக )
           எல்.மூக்கையா - 53511 (திமுக )

2011 - எ.லாசா் - 76687 (சிபிஐ- எம்)
           வீ.அன்பழகன் - 71046 (திமுக )

2016 - கே.கதிா்காமு - 90599 (அதிமுக )
            வீ.அன்பழகன் - 76249 (திமுக )

2019 (இடைத்தோ்தல்) எஸ்.சரவணக்குமாா் - 99393 (திமுக)
                                             எம்.மயில்வேல்- 68,073 (அதிமுக)
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com