உடுமலைப்பேட்டை: 5 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா அதிமுக?

கடந்த 4 தேர்தல்களாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி என்பதாலும், தற்போதைய எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவி வகிப்பதாலும் இந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுகவே போட்டியிட உள்ளது.
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி ஒரு விஐபி தொகுதியாகும். அமைச்சர்கள் எஸ்.ஜே.சாதிக் பாட்சா, ப.குழந்தைவேலு, சி.சண்முகவேலு, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரை எம்எல்ஏக்களாக தேர்வு செய்தது இந்தத் தொகுதிதான்.
 
தொகுதியில் அமைந்துள்ள பகுதிகள்

இந்த தொகுதியில் உடுமலை வட்டத்தில் 26 ஊராட்சிகள், உடுமலை நகராட்சி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 29 ஊராட்சிகள், ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர் ஆகிய பேரூராட்சிகள் அடங்கியுள்ளன.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 1,28,421, பெண்கள் - 1,36,784, மூன்றாம் பாலினத்தவர் - 23, மொத்தம் - 2,65,228. 

தொழில், சமூக நிலவரம்

இந்த தொகுதியில் பெரிய, சிறிய, நடுத்தர நூற்பாலைகள் சுமார் 50க்கும் மேற்பட்டவை உள்ளன. கிராமப்புறங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகள், பட்டுக்கூடு உற்பத்தி நிலையங்கள் உள்ளன. உடுமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொகுதியில் உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, உடுமலை - திருப்பூர், உடுமலை - மூணாறு மாநில நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

உடுமலை தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் 35- 40 சதவீதம் அளவுக்கு உள்ளனர். இதைத் தொடர்ந்து நாயுடு சமூகத்தினர் 20-25 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்கள் 15-20 சதவீதமும் உள்ளனர். இவர்களைத் தவிர செட்டியார், நாடார் உள்ளிட்ட சமூகத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், ஒரு முறை காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சையும், 4 முறை திமுகவும், 7 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிமுக கடந்த 4 தேர்தல்களாக உடுமலை தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு உடுமலை தொகுதி மறுசீரமைக்கப்பட்டு மடத்துக்குளம் தொகுதி தனியாக உருவாக்கப்பட்டது. இதன் பிறகு நடைபெற்ற 2 பொதுத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1951 - மௌனகுருசாமி நாயுடு (காங்கிரஸ்)
1957 - எஸ்.டி.சுப்பைய கவுண்டர் (சுயேச்சை)
1962 - ஆர்.ராஜகோபால் நாயக்கர் (காங்கிரஸ்)
1967 - எஸ்.ஜே.சாதிக்பாட்சா  (திமுக)
1971 - எஸ்.ஜே. சாதிக்பாட்சா(திமுக)
1977 - பி.குழந்தைவேலு (அதிமுக)
1980 - பி.குழந்தைவேலு (அதிமுக)
1984 - எஸ்.திருமலைசாமி கவுண்டர் (காங்கிரஸ்)
1989 - எஸ்.ஜே. சாதிக்பாட்சா (திமுக)
1991 - கே.பி. மணிவாசகம் (அதிமுக)
1996 - டி.செல்வராஜ் (திமுக)
2001 - சி.சண்முகவேலு (அதிமுக)
2006 - சி.சண்முகவேலு (அதிமுக)
2011 - பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக)
2016 - உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக)

2016 தேர்தல்

கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக) 81,817
கே.முத்து (திமுக) 76,130
வித்தியாசம் - 5,687.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

உடுமலை அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, உடுமலை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கொண்டு வந்தது, ரூ.265 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது, நூறாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உடுமலை நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.50 கோடி பெற்றுத் தந்தது, பிஏபி திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய் சீரமைப்புக்காக ரூ.72 கோடியை பெற்றுக் கொடுத்தது, உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் சாலை வசதிகளை மேம்படுத்தியது, ரூ.56 கோடி மதிப்பீட்டில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியது போன்றவற்றை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய பணிகள் எனலாம்.

தீர்க்கப்படாத பிரச்னைகள்

உடுமலையில் அடிப்படை வசதிகள் நிறைந்த பெரிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். உடுமலை நகரில் மழைக் காலத்தில் நல்ல வடிகால் வசதி வேண்டும். உடுமலை தொகுதிக்கு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும். வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன.

விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட அழுகும் காய்கறிகளை சேமித்து வைக்க ஒரு குளிர்சாதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புறவழிச் சாலை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும். உடுமலை நகரையொட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி முதல் தர நகராட்சியாக உயர்த்த வேண்டும் என்பது போன்றவை முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

கடந்த 4 தேர்தல்களாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி என்பதாலும், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவி வகிப்பதாலும் இந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுகவே போட்டியிடுகிறது. உடுமலை ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிட இருக்கிறார். திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாக அதிமுகவை எதிர்க்க உள்ளது. கடந்த முறை போட்டியிட்டு தோல்வியுற்ற கே.முத்து, 2006 இல் போட்டியிட்டு தோல்வியுற்ற வேலுசாமி, உடுமலை திமுக நகரச் செயலர் மத்தின் உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com