தாராபுரம் (தனி): வெற்றி யாருக்கு?

தற்போது காங்கிரஸ் கட்சி வசம் இந்தத் தொகுதி இருப்பதால் அந்த கட்சியினரே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனினும் திமுக நேரடியாக போட்டியிட வேண்டுமே கட்சியினர் வலியுறுத்துகின்றனர். 
தாராபுரம் நகராட்சி அலுவலகம்
தாராபுரம் நகராட்சி அலுவலகம்

அமராவதி ஆறு ஓடிக் கொண்டிருக்கும் பகுதி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள விடாரபுரம் மருவி தாராபுரம் என்றழைக்கப்படுகிறது. பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது கடைசி ஒரு ஆண்டை தாராபுரத்தில் தற்போது உள்ள தில்லாபுரி அம்மன் கோயில் காட்டுப் பகுதியில் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதியானது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாகவே உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

நகராட்சியில் 30 வார்டுகளையும், மூலனூர், குண்டடம், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியுள்ளது. கன்னிவாடி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன.  

தாராபுரம் நகராட்சி அலுவலகம், ஆஞ்சநேயர் கோயில், தீயணைப்பு நிலையம், தாராபுரம் புதிய மேம்பாலம், உப்பாறு அணை, நல்லதங்கால் ஓடை அணை, 16 கால் விசைத்தூண் மண்டபம், ருத்ரவீரராகவ பெருமாள் கோயில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அமராவதி பழைய பாலம் ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும். 
 
வாக்காளர் விவரம் 

ஆண்கள் -  1,25,773 
பெண்கள்  -  1,30,946 
மூன்றாம் பாலினத்தவர் -  10 
மொத்தம் - 2,56,729 

தொழில் சமூக நிலவரம்

இத்தொகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, கறிக்கோழிப் பண்ணைகள், நூற்பாலைகளும் பல உள்ளன. அமராவதி ஆற்றுப்பாசனம் மூலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளதால் இளைஞர்கள் பலர் வேலைக்காக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தத் தொகுதியில் பழங்குடியினர், தேவேந்திர வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேரும், கொங்கு வேளாள கவுண்டர், முதலியார், செட்டியார் உள்ளிட்ட பிரிவினர் 60 சதவீதம் பேரும் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

இந்தத் தொகுதியானது கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இங்கு நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

1952 சேனாதிபதி கவுண்டர் - (சுயேச்சை)
1957 சேனாதிபதி கவுண்டர் - (காங்கிரஸ்) 
1962 பார்வதி அர்ச்சுனன் - (காங்கிரஸ்) 
1967 பழனியம்மாள் -  (திமுக) 
1971 பழனியம்மாள்  - (திமுக) 
1977 ஆர்.அய்யாசாமி - (அதிமுக) 
1980 ஏ.பெரியசாமி  - (அதிமுக) 
1984 ஏ.பெரியசாமி -  (அதிமுக) 
1989 டி.சாந்தகுமாரி -  (திமுக) 
1991 பி.ஈசுவரமூர்த்தி - (அதிமுக) 
1996 ஆர்.சரசுவதி  - (திமுக) 
2001 வி.சிவகாமி -  (பாமக) 
2006 பி.பிரபாவதி - (திமுக)
2011 பொன்னுசாமி -  (அதிமுக) 
2016 வி.எஸ்.காளிமுத்து - (காங்கிரஸ்) 

2016 தேர்தல் நிலவரம்

வி.எஸ்.காளிமுத்து  (காங்கிரஸ்) - 83,538
கே.பொன்னுசாமி  (அதிமுக) -  73,521
வித்தியாசம் - 10,017
 
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வழியாக அவிநாசிபாளையம் வரையில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 741 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. தாராபுரம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைத்தது, நகரில் 5 இடங்களில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ. 8 கோடி செலவில் தடுப்பணை கட்டி ஆற்று நீரை நகராட்சிப் பகுதிகளில் விநியோகம் செய்து குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத பணிகள்

தாராபுரம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் அமைக்கப்படாதது, அரசு பொறியியல் கல்லூரி இல்லாதது, மடத்துப்பாளையம், வெங்கிட்டிபாளையம், வரப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் சரி வர இல்லை. இப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூலனூரில் முருங்கை பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், தாராபுரத்தில் தக்காளிச் சாறு பிழியும் தொழிற்சாலை வேண்டும் என்பதும் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகள்.

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி வரையில் ரயில் பாதை அமைக்க வேண்டும். தாராபுரம் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடியதாக தரம் உயர்த்த வேண்டும். அமராவதி சிலையை மீண்டும் பொள்ளாச்சி சாலையில் நிறுவ வேண்டும். குளத்துப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலையை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கண் வலி மூலிகைக் கிழங்கு விதையை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய மூலனூரில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அரசூர் ஷட்டர் மூலமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இந்தத் தேர்தலில் அதிமுக நேரடியாக வேட்பாளரைக் களம் இறக்கும் என்று தெரிகிறது. இதில், அதிமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்தியபாமா, மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், கௌரி சித்ரா ஆகியோர் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, கூட்டணிக் கட்சியான பாமகவும் இந்தத் தொகுதியைக் கேட்டுள்ளது.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை இந்தத் தொகுதி தற்போது காங்கிரஸ் கட்சி வசம் இருக்கிறது. எனவே, அந்த கட்சியினரே மீண்டும் எதிர்பார்த்திருக்கின்றனர். அதேநேரம் திமுக நேரடியாக போட்டியிட வலியுறுத்தி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி செயலர் சரஸ்வதி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரபாவதி பெரியசாமி உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com