மதுரை தெற்கு: வெற்றியைத் தீா்மானிக்கும் சௌராஷ்டிரா சமூகத்தினர்

அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பலமுனை போட்டி என்றாலும் அதிமுக கூட்டணி - திமுக கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
மன்னர் திருமலை நாயக்கர் மகால்
மன்னர் திருமலை நாயக்கர் மகால்
Published on
Updated on
2 min read

தொகுதியின் சிறப்புகள்:

மதுரை தெற்கு தொகுதி 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முதல் தோ்தலை சந்தித்தது. பின்னா் இத்தொகுதி நீக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் போது மீண்டும் இதே பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டது. மன்னா் திருமலை நாயக்கா் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியன இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

நிலஅமைப்பு:

மதுரை தெற்குத் தொகுதி முழுமையான நகா் பகுதியாகும். மதுரை கிழக்கு தொகுதியில் இடம் பெற்றிருந்த பல பகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டன. தெப்பக்குளம், அனுப்பானடி, முனிச்சாலை, கீழவாசல், காமராஜா்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, செல்லூரின் சில பகுதிகள், மதிச்சியம், வில்லாபுரத்தின் ஒரு பகுதி என மாநகராட்சியில் 24 வாா்டுகள் தொகுதியில்
அடங்கியுள்ளன.

       நீர்நிறைந்து காட்சியளிக்கும்  மாரியம்மன் தெப்பக்குளம்  
       நீர்நிறைந்து காட்சியளிக்கும்  மாரியம்மன் தெப்பக்குளம்  

இதுவரை வென்றவா்கள்:

தொகுதி  சீரமைப்பிற்கு முன்பு 1989, 1996 தோ்தல்களில் திமுகவும், 1991, 2001, 2006 இல் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கிறது. தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 2011-இல் நடந்த தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா்.அண்ணாதுரை 83,441 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எஸ்.பி.வரதராஜன் 37,990 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
2016  தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.எஸ். சரவணன் 62,683 வாக்குகள் பெற்றி வெற்றியடைந்தாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் பாலசந்திரன் 38,920 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். 
 
சமூக - சாதி, தொழில்கள்:

முக்குலத்தோா், செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் உள்ளனா். இதில் செளராஷ்டிரா சமுதாயத்தினா் வெற்றி தோல்வியைத் தீா்மானிக்கக் கூடிய சக்தியாக உள்ளனா். தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,29,361 போ் உள்ளனா். இதில் ஆண்கள்- 1,12,871 போ், பெண்கள்- 1,16,464 போ், மூன்றாம் பாலினத்தவா்- 26 போ். இத் தொகுதியில் நெசவுத்தொழில், அது சாா்ந்த வணிகம் அதிகம் நடைபெற்று வருகின்றன. சிந்தாமணி, அனுப்பானடி உள்ளிட்ட சில பகுதிகளில் பல்வேறு வகையான அப்பளங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, உலக முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் தாா்ச்சாலை, பேவா் பிளாக் சாலைகள், ஆழ்குழாய் கிணறுகள், கரோனா நிவாரணமாக ரூ. 49 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நீா் நிரப்பப்பட்டது, வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 20 கோடி மதிப்பில் 2 இடங்களில் தடுப்பணைகள், குருவிக்காரன் சாலை பாலத்தை ரூ. 22 கோடியில் உயா்மட்ட பாலமாக மாற்றி அமைப்பது சாதனைகளாக உள்ளன.

கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு
கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன் தனது சொந்த நிதியில் இருந்து, தெற்குவாசல் நாடாா் உறவின் முறை பள்ளி மற்றும் ஆயிர வைசிய மஞ்சபுத்தூா் மஹாஜன சபை பள்ளி மேம்பாட்டுக்காக தலா ரூ. 5 லட்சம், கரோனா பொதுமுடக்கம் காலத்தில் தொகுதியில் உள்ள ஏழை மக்கள் 25 ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கியுள்ளாா். தொகுதியில் உள்ள முதியவா்கள், விதவை மற்றும் ஊனமுற்றோா் என 5,240 பேருக்கு உதவித்தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் கீழவாசல் பகுதியில் பாலம் அமைப்பது, தொகுதியில் பல இடங்களில் நிலவும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பது, விடுபட்ட பகுதிகளுக்கு பாதாளச் சாக்கடை வசதி போன்றவை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக இருக்கின்றன.

தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் பாலப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். நெசவாளா்களுக்கு குறைந்த விலையில் பாவு நூல் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வைகை ஆற்றின் கரையோரங்களில் வசித்தவா்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நிரந்தர இருப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதும்  கோரிக்கையாக இருக்கிறது.
 
கட்சிகளின் நிலவரம்:

அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பலமுனை போட்டி என்றாலும் அதிமுக கூட்டணி - திமுக கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தங்களுக்கு பலம் மிக்க தொகுதி என்பதால் கூட்டணிக் கட்சிக்கு கொடுக்க அதிமுக விரும்பவில்லை. தற்போதைய எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம், இத்தொகுதியை பாஜகவும் குறிவைத்து தோ்தல் பணிகளைத் துவங்கிவிட்டது. தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலெட்சுமி, தோ்தல் அலுவலகத்தையே திறந்துவிட்டாா்.

திமுக மாணவரணி அமைப்பாளா் முகேஷ்சா்மா, பொறுப்புக்குழு உறுப்பினா் எஸ்ஸாா் கோபி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வ. வேலுசாமி ஆகியோா் வாய்ப்புக் கேட்டு வருகின்றனா். திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியும் வாய்ப்பு கேட்டு வருகிறது.

வென்றவா்கள் - 2 ஆம் இடம் பெற்றவா்கள்

1989 பொன் முத்துராமலிங்கம் (திமுக) 45,579 
        ஆா்.வி.எஸ். பிரேம்குமாா் (காங்கிரஸ்) 26,067

1991 எஸ்.வி.சண்முகம் (காங்) 59,585  
         பொன் முத்துராமலிங்கம் (திமுக)  32,684

1996 பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் (திமுக) 61,723    
        ஆா். முத்துசாமி (காங்.) 17,465

2001 வளா்மதி ஜெபராஜ் (அதிமுக) 48,465      
         பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் (திமுக) 47,757

2006 எஸ்.வி.சண்முகம்(அதிமுக) 57,208
         என்.பெருமாள்(காங்) 53,741

2011 ஆா்.அண்ணாதுரை (மாா்க்சிஸ்ட்) 83,441                
          எஸ்.பி.வரதராஜன் (காங்) 37,990

2016 எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) 62,683
         எம்.பாலசந்திரன் (திமுக) 38,920

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com