திருப்பூர் வடக்கு: வெற்றியை நிர்ணயிக்கும் சாதி வாக்குகள்

திருப்பூர் வடக்கு தொகுதியைப் பொருத்தவரை சாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் இரு பெரும் கட்சிகளும் கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துவார்கள்.
எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டின் தொகுதிகள் மறுசீரமைக்குப்பின் போது திருப்பூர் வடக்குத் தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தின் பெரிய தொகுதியாகும். மாநகராட்சிப் பகுதிகள் அதையொட்டிய கிராமப்புறங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில் பின்னலாடை உற்பத்தி, பாத்திரம் தயாரிப்பு ஆகிய தொழில்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.
  
தொகுதியில் இடம் பெற்றுள்ள பகுதிகள்
 
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 29 வார்டுகளையும், பட்டம்பாளையம், மேற்குபதி, தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், சொக்கனூர், வள்ளிபுரம் ஆகிய 10 ஊராட்சிகளையும் கொண்டது இந்தத் தொகுதி.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,87,209  
பெண்கள் - 1,79,417 
மூன்றாம் பாலினத்தவர் - 97, 
மொத்தம் - 3,66,543

தொழில், சமூக நிலவரம்

இந்தத் தொகுதியில், மாநகராட்சிப் பகுதிகளில் முக்கியத் தொழில்களாக பின்னலாடை உற்பத்தி, பாத்திரத் தயாரிப்பு ஆகியவையும், ஊராட்சிப் பகுதிகளில் வேளாண்மையும் நடைபெறுகிறது. தொகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி, அதனைச் சார்ந்த நிறுவனங்கள், பாத்திர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் மூலமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். அடுத்தபடியாக செங்குந்த முதலியார், ஆதிதிராவிடர், இதர சமூகத்தினர் உள்ளனர்.
 
கடந்த தேர்தல்கள் 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இத்தொகுதியில், தேர்தல் நடைபெற்ற 2 முறையும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 

2011 தேர்தல் நிலவரம் 

எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) - 1,13,640
சி. கோவிந்தசாமி (திமுக) - 40,369
வாக்கு வித்தியாசம்  - 73,271
 
2016 தேர்தல் நிலவரம் 
 
கே.என்.விஜயகுமார் (அதிமுக) - 1,06,717 
மு.பெ.சாமிநாதன்  (திமுக) -  68,943 
வாக்கு வித்தியாசம்  - 37,774 
 
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 4 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,063 கோடியில் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 10 ஊராட்சிகளில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அன்னூர்-மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 73 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் 5 ஆண்டுகளில் சுமார் 200 கோடிக்கு சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. பெருமாநல்லூரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டு தற்போது மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காளிபாளையம் ஊராட்சியில் ரூ. 24 கோடியில் துணை மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 
தீர்க்கப்படாத பிரச்னைகள்

பின்னலாடைத் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 2019 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பணிகள் தொடங்கப்படாதது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிவுறு நகரம் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர சீரமைக்காதது, மாநகரில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படாதது ஆகியவையும் முக்கியப் பிரச்னையாகவே கருதப்படுகிறது.  
பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாநகரப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே 
மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இந்தத் தொகுதியில் நடைபெற்றுள்ள 2 தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, தற்போதைய தேர்தலிலும் அதிமுகவே போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதேபோல், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.என்.விஜயகுமாரும், முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலருமான சி.சிவசாமி, ஒன்றியச் செயலர்கள் பலரும் இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளனர். அதேநேரம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா, பாஜக ஆகிய கட்சிகளும் இந்தத் தொகுதியைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தொகுதியை கேட்டிருக்கின்றன. எனினும் திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுகவே வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில், மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் வாய்ப்பு கேட்டிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் ஆர்வம் காட்டி வருகிறார். திருப்பூர் வடக்கு தொகுதியைப் பொருத்தவரை சாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் இரு பெரும் கட்சிகளும் கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com