திருப்பூர் தெற்கு: இருமுறையும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி

திருப்பூர் தெற்கு தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 2 தேர்தல்களிலும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் குமரன் நினைவகம்
திருப்பூர் குமரன் நினைவகம்

திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து திருப்பூர் தெற்கு தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டின் தொகுதிகள் மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி முழுவதும் மாநகராட்சிப் பகுதிகளையே உள்ளடக்கியது.

தொகுதியில் இடம் பெற்றுள்ள பகுதிகள்

திருப்பூர் மாநகராட்சியின் வார்டுகள் 12, 13, 31, 32, 34, 35, 38 முதல் 51 வரை, 56 ஆகிய 21 வார்டுகளைக் கொண்டது இந்தத் தொகுதி. திருப்பூர் குமரன் நினைவகம், ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் தெற்கு, வடக்கு வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
 
வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,35,830 
பெண்கள் - 1,32,052 
மூன்றாம் பாலினத்தவர் - 30
மொத்தம் - 2,67,912

தொழில், சமூக நிலவரம்

இந்தத் தொகுதியின் முக்கியத் தொழிலாக பின்னலாடை உற்பத்தி, அதைச் சார்ந்த தொழில்களான சாயமிடுதல், சலவை ஆலைகள், நிட்டிங், டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங் போன்ற தொழில்கள் உள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், தொழிலாளர்கள் இப்பகுதியில் உள்ளனர். இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடர்கள் 30 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 20 சதவீதம் பேரும் உள்ளனர். அடுத்தபடியாக, கொங்கு வேளாளக் கவுண்டர்கள், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். 

கடந்த தேர்தல்கள் 

திருப்பூர் தெற்கு தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 2 தேர்தல்களிலும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.தங்கவேல் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அதிமுகவின் குணசேகரன் வெற்றி பெற்றார்.

கடந்த 2011 தேர்தல் நிலவரம்

கே. தங்கவேல் (மார்க்சிஸ்ட்) - 75, 425 
கே. செந்தில்குமார்(காங்கிரஸ்) - 37, 121

கடந்த 2016 தேர்தல் நிலவரம்

சு.குணசேகரன் (அதிமுக) - 73,351
க.செல்வராஜ்  (திமுக) -   57,418

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ. 336 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணி, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ மார்க்கெட்,  டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 4 ஆவது குடிநீர் திட்டம், புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தீர்க்கப்படாத மக்கள் பிரச்னைகள்

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், காங்கயம் சாலை, மங்களம் சாலை ஆகிய இடங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாநகரப் பகுதிகளில் தேங்கும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையிலும் அவர்களுக்கான மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. ஆகவே, தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது போன்றவை இப்பகுதி மக்களின் முக்கியமான பிரச்னைகளாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

திருப்பூர் தெற்கு தொகுதியைப் பொருத்தவரையில் மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றிருப்பதால் மீண்டும் அதிமுகவே போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போதைய எம்எல்ஏவான சு.குணசேகரன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார். அத்துடன் மேலும் சில நிர்வாகிகளும் களம் காண ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகாவும் இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறது.

எதிரணியில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது. முன்னாள் மேயர் க.செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதேநேரம் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தொகுதியைப் பெற முயற்சித்து வருகின்றனர்.

நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் களம் காணவிருக்கின்றன. எனினும் அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com