ஆலங்குளம்: தொகுதியை தக்கவைத்துக்கொள்ளுமா திமுக?

திமுக சார்பில் தற்போதய எம்எல்ஏ பூங்கோதை அல்லது காங்கிரசிற்கு ஒதுக்கப்படுமானால் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆலங்குளம்
ஆலங்குளம்

தொகுதி அமைப்பு, சிறப்புகள்

ஆலங்குளம் தொகுதி, ஆலங்குளம் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி வட்டங்களின் ஒரு பகுதியைக் கொண்டு திருநெல்வேலி மக்களைவைத் தொகுதியின் கீழ் வருகிறது. சபாநாயகர் செல்லப்பாண்டியன், அமைச்சர் ஆலடி அருணா, அமைச்சர் பூங்கோதை என இங்கு வென்றவர்கள் அரசியலில் முக்கியமானவர்களாக இருந்த வரலாறும் உண்டு.  

அண்மையில் வெளியிட்ட நிலவரப்படி தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும் 7 திருநங்கையர் என 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கடந்த 2016 தேர்தலைவிட தற்போது 22 ஆயிரத்து 65 புதிய வாக்காளர்கள் இத்தேர்தலில் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள் மற்றும் பீடித் தொழிலை நம்பியுள்ளவர்கள். இவர்களின் வாக்குகளே வெற்றி தோல்வியை முடிவு செய்கின்றன.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

ஆலங்குளம் தொகுதி உதயமான 1952 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில்
சின்னத்தம்பி என்பவரும் அதனைத் தொடர்ந்து 1957ல் வேலுச்சாமித் தேவர்
சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962ல் காங்கிரஸ் சார்பில்
எஸ். செல்லபாண்டியன் வெற்றி பெற்றதோடு அப்போதய சபாநாயகராகவும் இருந்தார்.

1967 மற்றும் 1971ல் திமுக சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பசாமி பாண்டியன் வென்றார். 1980 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் நவநீத கிருஷ்ண பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சண்முகைய்யா பாண்டியன் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் திமுக சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டு வென்றார். கூடவே சட்டத்துறை அமைச்சராவும் பதவி வகித்தார். 2001 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2011 தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வென்றார் பி.ஜி. ராஜேந்திரன்.

கடந்த பேரவைத் தேர்தலில் (2016) அதிமுக வேட்பாளர் எப்சி கார்த்திகேயனை 4,754 வாக்கு வித்தியாசத்தில் வென்று தற்போது எம்எல்ஏவாகத் தொடர்கிறார் டாக்டர் பூங்கோதை.

தொகுதி மறுசீரமைப்பு

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து ஆலங்குளம் தொகுதியானது
ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஆலங்குளம், கீழப்பாவூர், பூலாங்குளம், புதுப்பட்டி கிராமங்களும், தென்காசி வட்டத்தில் உள்ள கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர், தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மேல ஆம்பூர் போன்ற கிராமங்களையும், ஆழ்வார்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள முக்கூடல் பேரூராட்சி மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சில கிராமங்களையும் கொண்டதாக அமைந்தது.

 2019 நவம்பர் திருநெல்வேலியில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிந்த பின்னர் அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருந்த கடையம் ஒன்றிய பகுதிகள் தென்காசி வட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி மற்றும் முக்கூடல் பகுதிகள் தொடர்ந்து ஆலங்குளத்திலேயே நீடிக்கிறது. இதனால் இத்தொகுதி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி வருகிறது.

சமூகம்: இத்தொகுதியில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதேபோல இத்தொகுதில் நாடார் சமுதாய வாக்குகள் 50 சதவீதத்திற்கு மேலாகவும் தொடர்ந்து, தேவர், ஆதி திராவிடர், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் வாக்குகள் தொடர்ந்து அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனர். இதனால் இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே அனைத்து அரசியல் கட்சிகளும் நிறுத்துகிறது.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

தொகுதியில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஏதும் இல்லை. 50 விழுக்காடு மக்களின் தொழில் விவசாயம், கூலித் தொழில்தான். பெரும்பாலானோர் பீடித் தொழிலில்தான் ஈடுபட்டு வருகின்றனர். பீடித் தொழிலால் ஏராளமானோர் ஆஸ்துமா, புற்றுநோய் என பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் தொகுதி முழுவதுமே உள்ளது. பீடி சுற்றும் பெண்களுக்கு உரிய கூலியும் வழங்கப்படுவது இல்லை. இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும், முக்கூடலில் செயலற்று கிடக்கும் பீடித் தொழிலாளர் நல மருத்துவமனையை சீரமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்.

தொட்டியன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் ஆலங்குளம் கால்வாய் முறைப்படி தூர்வாரப்பட்டால் ஆண்டுதோறும் இக்குளம் நிரம்பும். அதன்மூலம் விவசாயம் செழிக்கும். சுமார் 30 ஆண்டு கால கோரிக்கை இது. ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட மருத்துவமனையாக மாறி 5 ஆண்டுகள் ஆகியும் இங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அவசர சிகிச்சை மற்றும் பேறுகால சிகிச்சைகள் எதுவும் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு நடைபெறவில்லை. இம் மருத்துவமனையை மேம்படுத்துவதுடன் நகர துணை சுகாதார நிலையமும் இங்கு அமைக்க வேண்டும்.

தொகுதி தலைமை இடத்தில் மகளிர் கலைக் கல்லூரி கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. உள்ளூரில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் குறிப்பிட்ட அளவில் சொந்த தொழில் செய்து வந்தாலும் பீடித் தொழிலுக்கு அடுத்தபடியாக அரிசி, பருப்பு ஆலைகள், காய்கனிச் சந்தையில் இரவு மூட்டை தூக்கும் வேலைகளையே செய்து வருகின்றனர். இவர்களின் வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இவர்களுக்குத் தொழிலாளர் நல வாரியம் மூலம் தக்க நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2013 ஆம் ஆண்டு ஆலங்குளத்தில் பேருந்து பணிமனை அமைக்கப்படும் என அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதையொட்டி இப்போதய எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, தனது 2016 தேர்தல் அறிக்கையில் தான் வெற்றி பெற்றால் பணிமனைக்கு தனது சொந்த இடத்தில் 10 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் அவர் எதிர்க்கட்சி எம்எல்ஏவாகிவிட்டதால் அந்தப் பணி கிடப்பில் உள்ளது. பணிமனை வந்தால் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் விடுவதற்கு வசதியாக இருக்கும் என்பது பொதுமக்கள் கருத்து.

கடையம் ஒன்றிய பகுதியான கடனாநதி, ராமநதி போன்றவை தூர்வாரப்படும் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் உறுதிமொழியாக இருக்கும். ஆனால் செயல்வடிவம் கடந்த கால் நூற்றாண்டுகளாக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

கடையம் பகுதியில் மலர் உற்பத்தி அதிகம் இருப்பதால் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள்.

கடையம் பகுதியில் சுமார் 700 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடும் வெயிலில் பணி செய்யும் இவர்களுக்குக் கிடைப்பதோ சொற்ப ஊதியம்தான். வரும் புதிய அரசு இத்தொழிலாளர்கள் வாழ்வில் வளம் பெறச் செய்யும் பொருட்டு வாரியம் ஒன்று அமைக்க வேண்டும்.

குறிப்பாக திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழிச் சாலையை காரணம் காட்டி கடந்த 8 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப் படாமல் உள்ளது. இதனால் இவ்வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வர் வந்து சென்ற ஓரிரு முறை பெரிய பள்ளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு பின்னர் அவை கண்டும் காணாமல் விடப்பட்டு வருகிறது. நான்கு வழிச் சாலையால் பாதிக்கப் படுவோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் 

தொகுதியை தக்க வைக்க தற்போதய எம்எல்ஏ பூங்கோதை(திமுக) முனைப்பு காட்டி வருகிறார். அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களை தான் எதிர்க்கட்சி எம்எல்ஏ என நினைக்காமல் முன் நின்று செயல்படுத்துவது தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் தொகுதி பிரச்னைகளுக்காக அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும் போதும், நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் கட்சி நிர்வாகிகளை அழைப்பதில்லை என நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தென்காசி தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரசிற்கு ஒதுக்கப்படுமானால் ஆலங்குளத்தில் போட்டியிடப் போவதாக தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் கூறி வருகிறார். இந்த ஒருவரில் ஒருவருக்கே திமுகவில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன், அதிமுக வழி காட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி பிரபாகரன் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். இவர்களில் யாருக்கும் சீட் கிடைத்து விடக் கூடாது என ஒருவர் தரப்பில் இருந்து மற்ற தரப்பினர் மீது புகார் மனுக்களை தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக தலைவர் சரத்குமார் இத்தொகுதியை விரும்பி கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இவர் கடந்த 2001 தேர்தல் முதல் இத்தொகுதியில் நிற்பேன் என பிரசாரத்திற்கு வரும்போதெல்லாம் வாக்கு கொடுத்து வருகிறார். தனது கட்சியின் சார்பில் இத்தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளதால் எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது.

இதனிடையே பனங்காட்டுப்படை கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆலங்குளம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது பிரசாரத்தை கடந்த ஜனவரி 2 ஆம் வாரமே தொடங்கி விட்டார். தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார். இவர் அணிந்திருக்கும் நகைகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடி வருகிறது. தற்போது, நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளதால் இவர் வாக்களாளர்களைக் கவர்ந்துள்ளார்.

களம் காணும் அனைத்து வேட்பாளர்களும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வாக்காளர்களுக்கு சற்று குழப்பம் ஏற்படும். எனினும் கட்சி சார்ந்த வாக்குகள் சிதறாமல் வந்து சேரும் என்பதால் அதிமுக, திமுக வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளது. தற்போதய எம்எல்ஏவான பூங்கோதை மீது கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தி நிலவினாலும், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி மீது பொதுமக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் வெற்றி பெறலாம் என நம்பிக்கையில் உள்ளார் பூங்கோதை.

பதவியில் இல்லாவிட்டாலும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி முழுவதும் கட்சி பாகுபாடின்றி அனைத்து சுக துக்க நிகழ்வுகளில் கலந்து வாக்குகளை சேகரித்து வருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன். இது வாக்குகளாக மாறும் என்பது அவரது நம்பிக்கை. பி.ஜி.ராஜேந்திரனைத் தவிர வேறு யாரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறாது என அதிமுகவினரே பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே தற்போதய சூழலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுவுக்கே சாதகமாக இருக்கும் என்பதே நிலவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com