வாசுதேவநல்லூர்: கூட்டணி பலம் அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா? 

இத்தொகுதியில் அமமுக கணிசமான வாக்கு வங்கியினைப் பெற்றுள்ளது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 
பிரசித்தி பெற்ற வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆனி தேரோட்டம்(கோப்பு படம்)
பிரசித்தி பெற்ற வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆனி தேரோட்டம்(கோப்பு படம்)



தொகுதி சிறப்புகள்:

தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் தனித் தொகுதியாகும். இத்தொகுதியில் உள்ள நெல்கட்டும்செவலில்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும். 

இந்தத் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. புளியங்குடி எலுமிச்சை சந்தை தமிழக அளவில் பெரிய எலுமிச்சை சந்தையாக உள்ளது. இங்கிருந்து கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தொகுதியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்குவதால் பல நூறு ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. புளியங்குடி பகுதியில் சிறு விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கோட்டைமலையாறு மற்றும் செண்பகவல்லி அணை இத்தொகுதியில் அமைந்துள்ளன.

தொகுதி அமைப்பு:

சிவகிரி வட்டம், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டத்தின் சில பகுதிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. புளியங்குடி நகராட்சியும், ராயகிரி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளும், வாசுதேவநல்லூர் ஒன்றியப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. 

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்:

1967 மற்றும் 1971ல் திமுகவின் வெள்ளத்துரையும், 1977 மற்றும் 1980ல் மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணனும், 1984, 1989 மற்றும் 1991ல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996 மற்றும் 2001 ல் தமாகா-வின் ஈஸ்வரனும், 2006ல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011ல் அதிமுகவின் துரையப்பாவும் வெற்றி பெற்றனர். 2016 தேர்தலில் அதிமுகவின் மனோகரன் வெற்றி பெற்றார்.

பிரச்னைகள்: கோட்டைமலையாறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் போதிய குடிநீர் ஆதாரம் இல்லாததால் குடிநீர் பிரச்னை இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை வழங்கி வந்த சிவகிரி செண்பகவல்லி அணையின் தடுப்புச் சுவரில் உடைப்பு ஏற்பட்டு இரு மாநில பிரச்னை காரணமாக சரி செய்யப்படாமல் இருப்பதால் தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய பல ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

வாக்காளர் விவரம்: மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 227 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 101 பேர். மூன்றாம் பாலினத்தவர் 39 பேர். மொத்தம் 36 வாக்குச்சாவடிகள் இத்தேர்தலுக்காக அமைக்கப்படவுள்ளன.

இத்தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் எலுமிச்சை சார்ந்த மதிப்புக் கூட்டு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்தால் பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

சமூக நிலவரம்: இத்தொகுதி தனி தொகுதியாக உள்ள நிலையில், தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் பெருமளவு உள்ளன. அடுத்த படியாக தேவர், நாடார், யாதவர், செங்குந்த முதலியார் வாக்குகளும் கணிசமாக உள்ளன.

யாருக்கு போட்டியிட வாய்ப்பு?

தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மனோகரன் அனைத்து சமூகங்களுடனும் இணக்கமாக பழகக்கூடியவர். மேலும், யாரும் அவரை எளிதில் சந்திக்க முடியும் என்பதுடன் தொகுதி வளர்ச்சி நிதி தவிர்த்து பாதிக்கப்படுபவர்களுக்கு தனது சொந்த பணத்தில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார் என்பதால் அவர் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். இதுதவிர இது தனி தொகுதி என்பதால், தென்காசி மாவட்டத்திலுள்ள ஏராளமான அதிமுகவினர் வாசுதேவநல்லூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், மனோகரன் எம்எல்ஏ மீது எந்தவிதமான புகாரும் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவது எளிது என்கின்றனர் அதிமுகவினர்.

இதற்கிடையே, திமுக சார்பில் அதன் மாவட்டச் செயலர் துரை போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார். அதேபோல பல முறை இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் காங்கிரஸ் கட்சியினரும் இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இத்தொகுதியில் அமமுக கணிசமான வாக்கு வங்கியினைப் பெற்றுள்ளது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமமுகவினர் கூறி வருகின்றனர். இருப்பினும் கடந்த முறை போட்டியிட்ட புதிய தமிழகம், பாஜக, பாமக கட்சிகள்  பெற்ற சுமார் 65,000 வாக்குகள் தற்போது அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதால் அமமுக பிரிக்கும் வாக்குகளால் பெரிதும் பாதிப்பில்லை என்கின்றனர் அதிமுகவினர்.

மொத்தத்தில் கூட்டணிக் கட்சிகளின் பலம், குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் வாக்குகள்தான் வாசுதேவநல்லூரில் வெற்றியை தீர்மானிப்பதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com