கும்பகோணம்: தொகுதியை தக்க வைக்குமா திமுக?

இந்த முறையும் தொகுதியைத் தக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது. அதிமுகவை பொருத்தவரை 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
மகாமகக் குளம்
மகாமகக் குளம்
Published on
Updated on
3 min read

தொகுதியின் சிறப்பு:

கோயில் நகரமான கும்பகோணத்தில் தொன்மையான சைவ, வைணவக் கோயில்களின் எண்ணிக்கை அதிகம். கும்பகோணம் காபி, கும்பகோணம் வெற்றிலை பிரபலமானவை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நகரில் மகாமகத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜன் கும்பகோணத்தில் பள்ளி, கல்லூரிக் கல்வியைப் பயின்றார். இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப் பழைமையானதும், 1854 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுமான தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் எனப் போற்றப்படும் கும்பகோணம் கலை, அறிவியல் கல்லூரி, சென்னைக்கு அடுத்து புகழ்பெற்ற அரசு நுண்கலைக் கல்லூரி, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் போன்றவை இத்தொகுதியில் உள்ளன.

தொழில்: இங்கு பட்டு நெசவு, பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை முதன்மைத் தொழில்களாக உள்ளன.

கடந்த தேர்தல்கள்

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் உள்ள இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி 4 முறை வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து 15 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். மேலும் 1977 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். 

தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்

எல்லைகள்:

கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 2 ஊராட்சிகள், சோழபுரம், தாரசுரம், திருநாகேசுவரம் பேரூராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.

இதில், அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டுமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுக்கருப்பூர், அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், அம்மாசத்திரம், மூப்பக்கோவில், மேலக்காவேரி, பாபுராஜபுரம், பழவாத்தான்கட்டளை, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழன் மாளிகை, ஆரியபடைவீடு, மேலக்கொற்கை, கீழக்கொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், தேனாம்படுகை, உடையாளூர், தில்லையம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை உள்ளிட்ட கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

கும்பகோணம் அரசுக் கல்லூரி
கும்பகோணம் அரசுக் கல்லூரி

சமூக அமைப்பு:

இத்தொகுதியில் வன்னியர், சௌராஷ்டிரர், பிராமணர், மூப்பனார், முக்குலத்தோர், இஸ்லாமியர், பட்டியலினத்தவர் ஆகியோர் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

ஆழ்குழாய் குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாடு, நியாய விலைக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

பிரச்னைகள்:

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு. சில ஆண்டுகளாக இக்கோரிக்கை வலுப்பெற்று, போராட்டக்குழு அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அருகிலுள்ள மயிலாடுதுறை உள்பட பல புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்படாதது இத்தொகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அணைக்கரை கொள்ளிடத்தில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. எனவே, இப்பகுதியில் முதலைப் பண்ணையுடன் கூடிய சுற்றுலா தலத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மூன்றாம் கட்டப் புறவழிச்சாலையும் முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. 

மகாமகக் குளம்
மகாமகக் குளம்

நகரில் ஓடும் 4 முக்கிய வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வார வேண்டும். மீன் சந்தை, உச்சிப்பிள்ளையார் கோயில், மொட்டைக்கோபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும். காவிரி, அரசலாறு உள்ளிட்ட ஆறுகளைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும். தாராசுரம் - பட்டீசுவரம் சாலையிலும், அண்ணலக்ரகாரம் - கும்பகோணம் சாலையிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்டுச் சீரமைக்க வேண்டும் போன்ற நீண்ட கால கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

அரசியல் கட்சிகளின் நிலை:
 
கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரஸ் 6 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் ஒரு முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக 1996 ஆம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

எனவே, இந்த முறையும் இத்தொகுதியைத் தக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் சாக்கோட்டை க. அன்பழகனுக்கு இம்முறையும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

அதிமுகவைப் பொருத்தவரை 1991 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து இத்தொகுதியில் தோல்வியடைந்து வருகிறது. ஏற்கெனவே, இத்தொகுதியில் அதிமுக சார்பில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்ட ராம. ராமநாதன், மேற்கு ஒன்றியச் செயலர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் உள்பட பலர் விருப்ப மனு அளித்து காத்திருக்கின்றனர். இதனிடையே, இத்தொகுதியைப் பெற பாமகவும் முயற்சி செய்து வருகிறது.

இத்தொகுதியைப் பொருத்தவரை திமுக - அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. எனவே, வாக்கு சேகரிப்பு வியூகத்தைப் பொருத்தே இத்தொகுதியில் வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

இதுவரை பெற்றி வெற்றவர்கள்:

1952: வரதன் (காங்கிரஸ்)  
1957: டி. சம்பத் (காங்கிரஸ்)
1962: இராமசாமி (காங்கிரஸ்)
1967: என். காசிராமன் (காங்கிரஸ்)
1971: என். காசிராமன் (ஸ்தாபன காங்கிரஸ்)
1977: எஸ்.ஆர். ராதா ( அதிமுக)
1980: இ.எஸ். எம். பக்கீர்முகம்மது (காங்கிரஸ்)
1984: கே. கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்)
1989: கோ.சி. மணி (திமுக)
1991: இராம. இராமநாதன் (அதிமுக)
1996: கோ.சி. மணி (திமுக)
2001: கோ.சி. மணி (திமுக)
2006: கோ.சி. மணி (திமுக)
2011: சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக)
2016: சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக)

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,33,058
பெண்கள்: 1,39,433
திருநங்கைகள்: 15
மொத்த வாக்காளர்கள்: 2,72,506 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com