ரிஷிவந்தியம்: மீண்டும் போட்டியிடுவாரா விஜயகாந்த்?

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்ப்பு இருந்து வருகிறது.
ரிஷிவந்தியத்தில் கரும்பு விவசாயம்
ரிஷிவந்தியத்தில் கரும்பு விவசாயம்

தொகுதி அறிமுகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி ரிஷிவந்தியம். முழுவதும் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டது. மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. அதிலும், கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்பட 3 சர்க்கரை ஆலைகளைக் கொண்டுள்ளது. தொழில் வளர்ச்சி கிடையாது. ஆனால், இப்பகுதியிலிருந்து கூலி வேலைக்கு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.

கடந்த 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான தொகுதியாகும். இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கைகளில் தவழ்ந்த தொகுதிகளில் ஒன்று ரிஷிவந்தியம். இடையிடையே திமுக, அதிமுக ஆகியவையும் இத்தொகுதியை கைப்பற்றியுள்ளன. இதில், முத்தாய்ப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். விஜயகாந்தின் வெற்றிக்குப் பிறகு ரிஷிவந்தியம் தொகுதி தமிழக அளவில் மிக பிரபலமானது.
   
பகுதிகள்: ரிஷிவந்தியம் தொகுதியில் திருக்கோவிலூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட பகுதிகளையும் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மணலூர்பேட்டை ஆகிய பேரூராட்சி, மேலந்தல், காங்கியனூர்,  பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர்,  தேவரடியார்குப்பம்,  செல்லங்குப்பம்,  சித்தப்பட்டினம், சாங்கியம்,  ஜா.சித்தாமூர்,  கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல்,  டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலப்பந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமடையான்,  தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாறை, பரடாப்பட்டு, சுவாமிமலை, பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர்,  பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர்,  சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார் மற்றும் கச்சிக்குவச்சான், லக்கிநாயக்கன்பட்டி,

பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர்,  மூங்கில்துறைப்பட்டு,  பொருவளுர்,  ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர்,  பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர்,  எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், 
மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, ரிஷிவந்தியம், களையநல்லூர் மற்றும் பல்லகச்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன.

மக்களின் கோரிக்கைகள்: ரிஷிவந்தியம் என்றால் வளர்ச்சியடையாத பகுதி என்கின்றனர் அப்பகுதி மக்கள். ரிஷிந்தியம் தொகுதியில் உள்ள ஒரே பேரூராட்சி மணலூர்பேட்டை. மற்ற அனைத்தும் கிராமப்பகுதியே. ஏன், தொகுதி அமைந்துள்ள ரிஷிவந்தியம் தற்போது வரையில் ஊராட்சியாகவே இருந்து வருகிறது. இதனை வட்டாத் தலைநகரமாக தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும், குறைந்தபட்சம் பேரூராட்சி என்ற நிலைக்காவது தரம் உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், இதுவரையில் இந்த கோரிக்கை நிறைவேறாத கோரிக்கையாகவே தொடர்கிறது.

தொகுதியில் உள்ள கிராமங்களை இடையேயான இணைப்புச் சாலைகள் தற்போதும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. இங்குள்ள பல கிராமங்களுக்கு பேருந்து சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சாலைகளை மேம்படுத்த வேண்டும். ரிஷிவந்தியத்திலிருந்து திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறி போன்ற ஊர்களுக்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், வேளாண் தொழில் சார்ந்தே மக்கள் இயங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருவது, கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்புக்கான பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகும். கரும்புக்கான நிலுவைத் தொகை பல கோடிகளை கடந்துவிட்டது. இருப்பினும், மௌனமே பதிலாக இருந்து வருகிறது. இதனால், கரும்பு விவசாயிகள் கரும்பு விளைவிப்பதை விடுத்து வேறு பயிர்களை உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டனர். இதனை சரிசெய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.

தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால், தொழில் வாய்ப்புகள் இங்கு கிடையாது. இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு நோக்கி பயணப்படுகின்றனர். அதேபோன்று, விவசாயக் கூலிகளாகவும் பல்வேறு மாவட்டங்களுக்கு குடும்பம் குடும்பமாக சென்று மாதக்கணக்கில் வேலை செய்துவிட்ட வருபவர்களும் அதிகம். ஆகையால், ரிஷிவந்தியம் தொகுதியில் தொழில் வாப்புகளை உருவாக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும்.

இத்தொகுதியில் சொல்லும்படியாக மக்களின் பெரும் எதிர்ப்பாக இருந்த அரசுக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. ரிஷிவந்தியத்தில் அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரிஷிவந்தியத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் அரசு மருத்துவமனை கிடையாது. திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி நோக்கியே மருத்துவத்துக்காக மக்கள் படையெடுக்க வேண்டியுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

கடந்த தேர்தல்கள்: 1962 ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் இந்திய தேசிய கங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எல். ஆனந்தன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 1967 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆனந்தன் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக 1971இல் திமுக சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் என்பவரும் வெற்றி வாகை சூடினார்.

1977 மற்றும் 1980 ஆண்டுகளில் இந்த தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.சுந்தரம் இரண்டு முறையும் வெற்றி பெற்றார். இதன்பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.சிவராஜ் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்தார். இதன் மூலம் தொடர்ந்து இந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3 முறை வெற்றியை உறுதி செய்தது.

இதன்பிறகு, 1989இல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நடேச உடையார் வெற்றி பெற்று, காங்கிரஸ் கையில் இருந்த இந்த தொகுதியை திமுகவின் கைக்கு கொண்டு வந்தார். அப்படி மாறி மாறி திமுக, காங்கிரஸ் இருந்த தொகுதியை 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜூ வெற்றி பெற்று, இத்தொகுதியில் அதிமுகவின் முத்திரையைப் பதித்தார்.

பின்னர், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் எஸ்.சிவராஜ் கடந்த 1996, 2001 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றார். இதன்பிறகு, மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அதே என்.சிவராஜ் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இவர், கட்சிகள் மாறியிருந்தாலும் இத்தொகுதியில் 4 முறை வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில், விருத்தாசலம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற திட்டமிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பச்சை கொடி காட்டிய தொகுதிதான் ரிஷிவந்தியம். 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன்பிறகு, விஜயகாந்த் அங்கிருந்து உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு மாறினார். பின்னர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

சமூகம்: இந்த தொகுதியில் 30 சதவீதம் வன்னியர்கள், 25 சதவீதம் ஆதிதிராவிடர்கள், முதலியார், செட்டியார், உடையார், ரெட்டியார் உள்ளிட்ட பிற சமுகத்தினரும், இஸ்லாமியர்களும் உள்ளனர். தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 549 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 923 பெண் வாக்காளர்களும், 59 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது. இதனால், தேமுதிகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கவே அதிக வாய்ப்புள்ளது. அப்படி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டால், விஜயகாந்த் மனைவி பிரேமலதா அல்லது தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் போட்டியிடலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். விஜயகாந்த் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்ப்பு இருந்து வருகிறது.

அக்கட்சியினரின் அதிமுக போட்டியிட்டால், அதிமுக ஒன்றியச் செயலாளர்களாக இருந்து வரும் கதிர்.தண்டபாணி, அரசு ஆகியோர் இத்தொகுதியை கேட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் இத்தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றவருமான வசந்தம் கார்த்திகேயன் இங்கு மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதேபோன்று, தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவரும் போட்டியிட காய்களை நகர்த்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com