திருச்செங்கோடு: வெற்றியை நிர்ணயிக்கும் முதலியார் சமூகத்தினர்

முதலியார் சமுதாயத்தினரை வேட்பாளராக இரு பிரதான கட்சியில் எந்த கட்சி அறிவிக்கிறதோ அந்தக்கட்சிக்கு முதலியார் சமுதாயத்தினர் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிகிறது. 
திருச்செங்கோடு
திருச்செங்கோடு

ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்த, சிவன் பாதி; சக்தி பாதியாக அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலைக் கொண்ட தொகுதி திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள இத்தொகுதியில் விவசாயம், ஆழ்துளைக் கிணறு (ரிக்) அமைக்கும் தொழில், லாரி கூடு கட்டும் பட்டறைகள், ஜவுளி உற்பத்தி போன்ற தொழில்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிகமான கல்வி நிறுவனங்களைக் கொண்ட கல்வி நகரமாகவும் திருச்செங்கோடு விளங்குகிறது.

வாக்காளர்கள் விவரம்: 

ஆண்கள்:  1,12,125
பெண்கள்:  1,18,154
மூன்றாம் பாலினத்தவர்: 37
மொத்தம்:  2,30,316 

இதுவரை நடந்த தேர்தல்கள்: 

1951:  எஸ்.ஆறுமுகம் (சுயேச்சை)
1957:  டி.எம்.காளியண்ண கவுண்டர் (காங்கிரஸ்)
1962: டி.எம்.காளியண்ண கவுண்டர் (காங்கிரஸ்)
1967: டி.ஏ.ராஜவேலு (திமுக)
1971: எஸ்.கந்தப்பன் (திமுக)
1977: சி.பொன்னையன் (அதிமுக)
1980:  சி.பொன்னையன் (அதிமுக)
1984: சி.பொன்னையன் (அதிமுக)
1989: வி.ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
1991: டி.எம்.செல்வகணபதி (அதிமுக)
1996:  டி.பி.ஆறுமுகம் (திமுக)
2001:  சி.பொன்னையன் (அதிமுக)
2006:  பி.தங்கமணி (அதிமுக)
2011: பி.சம்பத்குமார் (தேமுதிக)
2016:  பொன்.சரஸ்வதி  (அதிமுக)

இதுவரை அதிமுக 7 முறையும்,  திமுக 3 முறையும் காங்கிரஸ் 2 முறையும், கம்யூனிஸ்டு, தேமுதிக, சுயேச்சை ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை

2016  தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: 

பொன்.சரஸ்வதி (அதிமுக) 73,103 
பார்.இளங்கோவன் (திமுக) 69,713
விஜய் கமல் (தேமுதிக) 6,688
நதி.ராஜவேல் (கொமதேக) 6,471
நாகராஜன் (பாஜக) 2,499
ராஜா (பாமக) 2,012 

சமூக நிலவரம்:

திருச்செங்கோடு தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், செங்குந்த முதலியார், வன்னியர் சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர். முதலியார் சமுதாயத்தினரின் கணக்கெடுப்பின்படி, திருச்செங்கோடு தொகுதியில் மட்டும் 1.06 லட்சம் மக்கள் இருப்பதாகவும், வாக்காளர் விகிதத்தில் 39 சதவீதம் முதலியார் சமூகத்தினர் இருப்பதாகவும் தெரிவிககின்றனர்.

இத்தொகுதியில் முதலியார் சமுதாயத்தினரை வேட்பாளராக இரு பிரதானக் கட்சிகளில் எந்தக் கட்சி அறிவிக்கிறதோ அந்தக் கட்சிக்கே முதலியார் சமுதாயத்தினர் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இரு கட்சிகளும் முதலியார் சமுதாயத்தினரை வேட்பாளராக நிறுத்தவில்லை என்றால் முதலியார் சமுதாயம் சார்பில் பொது வேட்பாளரைப் போட்டியிட வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொகுதியின் பிரச்னைகள்:   

ரிக், ஜவுளி தொழில்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் களைவது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுற்றுவட்டப்பாதை அமைப்பது, திருச்செங்கோட்டில் அரசுக் கல்லூரி ஏற்படுத்துவது போன்றவை இத்தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாக உள்ளன.

அரசியல் நிலவரம்:

அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதி எம்எல்ஏ மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரிகிறது. தொகுதியில் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தியது, அனைத்து வார்டுகளிலும் சாலை, சாக்கடைக் கழிவுநீர்ப் பாதை வசதி, தொகுதியில் புதிதாக நிறைய அரசு கட்டடங்கள் கட்டியது என நிறைய திட்டங்களை தொகுதிக்கு செய்திருப்பதாகத் தெரிவிக்கும் பொன்.சரஸ்வதி மீண்டும் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்து வருகிறார்.

திமுக சார்பில் பார்.இளங்கோவன், தாண்டவன்.கார்த்தி, வட்டூர்.தங்கவேல், மதுரா.செந்தில், ஆர்.நடேசன், ஜிஜேந்திரன் என பலர் போட்டியிடக் காத்திருக்கின்றனர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த தாண்டவன்.கார்த்தி திமுக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரிகிறது.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் இத்தொகுதியைக் கேட்டு வருகின்றனர். திமுகவில் திருச்செங்கோடு தொகுதி கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அதிமுகவின் கரம் ஓங்கும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com