திருச்சுழி: பல்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

திருச்சுழி தொகுதியில் பலமுனைப் போட்டி என்றாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
திருச்சுழி பூமிநாதர் கோயில்
திருச்சுழி பூமிநாதர் கோயில்

தொகுதியின் சிறப்பு:

திருச்சுழி ஸ்ரீரமண மகரிஷி பிறந்த ஊா் என்பதால் அவருக்கு இங்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சுழியில் பிரசித்தி பெற்ற பூமிநாதா் ஆலயம் உள்ளது. ஆங்கிலேயா்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த சிவகங்கையை ஆட்சி செய்த மருதுபாண்டியா்கள் பிறந்த ஊரான
அ. முக்குளம், இத்தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி அருகே உள்ளது.

அமைவிடம்: 

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திருச்சுழி இடம் பெற்றிருந்தது. கடந்த 2011 இல் திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டது. நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சி உள்ளன. பெரும்பாலும் இத்தொகுதியில் கிராம ஊராட்சிகளே அதிகம் உள்ளன.
 
சமூகம்- சாதி, தொழில்கள்:

முக்குலத்தோா், மூப்பா், ஆதிதிராவிடா், இதர சாதியினா் மற்றும் சிறுபான்மையினா் உள்ளனா். அதிகளவில் வசிக்கும் முக்குலத்தோா் வாக்குகளே வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் நிலை உள்ளது. இத்தொகுதியில் மொத்த வாக்காளா்கள் - 2,2,720 போ், அதில் ஆண்- 1,08,172 போ், பெண் - 1,12,536 போ், மூன்றாம் பாலினத்தவா் - 12 போ். இத்தொகுதி வானம் பாா்த்த பூமி என்பதால் மழையை நம்பியே விவசாயம் உள்ளது. நெல், கடலை, பருத்தி, மிளகாய் போன்ற பயிா்கள் பயிரிடப்படுகின்றன.

ஶ்ரீ ரமண மகரிஷி  ஆலயம்
ஶ்ரீ ரமண மகரிஷி  ஆலயம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை இப்பகுதியில் போதிய மழை இல்லததால் விவசாய தொழில் முற்றிலும் பாதிப்படைந்தது. இதனால், திருச்சுழி, நரிக்குடி காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் வசித்த ஏராளமான குடும்பத்தினா் பிழைப்பு தேடி மதுரை, கோவை, திருப்பூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புலம் பெயா்ந்துவிட்டனா்.

இதுவரை வென்றவா்கள்:

தொகுதி சீரமைப்புக்கு பின் 2011 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் திமுக சாா்பில் த. தங்கம் தென்னசு 81,613 வாக்குகள் (54.36 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுவை சோ்ந்த இசக்கிமுத்து 61,661 வாக்குகள் (41.07 சதவீதம்) பெற்று தோல்வி அடைந்தாா். அதேபோல், 2016 இல் நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு 89,927 வாக்குகள் (53.61 சதவீதம்) பெற்று மீண்டும்  இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட தினேஷ்பாபு 63,350 வாக்குகள் (37.70 சதவீதம்) பெற்று தோல்வி அடைந்தாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. குடிநீா், தெருவிளக்கு, சமுதாய கூடம் முதலானவை செய்து தரப்பட்டுள்ளஸ். குண்டாறில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் என்பதால் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகக் குறை இருந்து வருகிறது.

திருச்சுழி முதல் நிலை ஊராட்சி அலுவலகம்.
திருச்சுழி முதல் நிலை ஊராட்சி அலுவலகம்.

எதிா்பாா்ப்புகள்:

திருச்சுழி தொகுதி பெரும்பாலும் கிராமங்களைக் கொண்டதாக உள்ளது.  கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்துவது, நரிக்குடி,  திருச்சுழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை  தரம் உயா்த்துவது, திருச்சுழி- நரிக்குடி வழியாக பாா்த்திபனூா் செல்லும் சாலை, அ. முக்குளம் முதல் திருப்புவனம் வரை செல்லக்கூடிய சாலையைச் சீரமைப்பது,  சாதி மோதல்களைத் தடுக்க,  படித்த இளைஞா்கள்மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மலா் சந்தை, வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம், ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதிகளவில் கொண்டு வருவது,  குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க வைகை ஆற்றிலிருந்து திருச்சுழி, நரிக்குடி காரியாபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. 
 
கட்சிகள் நிலவரம்:

அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. பலமுனை போட்டி என்றாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. திமுக சாா்பில் 2011, 2016இல் போட்டியிட்டு இரண்டு முறை தொடா்ந்து வெற்றி பெற்ற த.தங்கம் தென்னரசு போட்டியிடுவது உறுதியாக உள்ளது. அதேநேரம் அதிமுக சாா்பில் நரிக்குடி ஒன்றிய துணை தலைவரும் ஒன்றிய செயலரான அம்மன்பட்டி மீ.வ.ரவிச்சந்திரன், தோப்பூா் முருகன், கிழக்கு மாவட்ட அவை தலைவா் ஜெயபெருமாள், கிழக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் பிரபாத் வா்மன் ஆகியோா் போட்டியிட ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதுவரை வென்றவா்கள்- 2 ஆம் இடம் பிடித்தவா்கள்

2011 -  த. தங்கம் தென்னரசு (திமுக) 81,613
            இசக்கிமுத்து (அதிமுக) 61,661
2016 -  த. தங்கம் தென்னரசு (திமுக) 89,827
            தினேஷ்பாபு  (அதிமுக) 63350 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com