வீரபாண்டி: சமபலம் வாய்ந்த அதிமுக, திமுக நேரடி போட்டி!

வீரபாண்டி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக - திமுக இடையே மீண்டும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
பனமரத்துப்பட்டி ஏரி
பனமரத்துப்பட்டி ஏரி

சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி தொகுதியில், கடந்த அரை நூற்றாண்டாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இத்தொகுதி மாநில அளவில் பிரபலமாக உள்ளது.

வீரபாண்டி,  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம், விசைத்தறி நெசவு ஆகிய தொழில்கள் பிரதானத் தொழிலாக உள்ளன. குறிப்பாக இளம்பிள்ளை பகுதியில் நெய்யப்படும் பருத்திச் சேலைகள், பட்டுச் சேலைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் நல்ல மதிப்புண்டு.

முறுக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்
முறுக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்

அதேபோல, ஆட்டையாம்பட்டி முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், வெளிநாடுகளிலும், வெளி மாவட்டங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் முறுக்கு சுடும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

முறுக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்
முறுக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்

தொகுதியில் அடங்கிய பகுதிகள்:

வீரபாண்டி தொகுதியில், சேலம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், வீரபாண்டி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. 

வீரபாண்டி தொகுதியில் கடந்த 2019 -இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 299 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்சமயம் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற முறையில் 55 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தற்போது 354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட இளம்பிள்ளையில் நெய்யப்படும் கண்கவர் பேன்சி பட்டு சேலைகள்.
சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட இளம்பிள்ளையில் நெய்யப்படும் கண்கவர் பேன்சி பட்டு சேலைகள்.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,30,313
பெண்கள்: 1,29,111
இதரர்: 7
மொத்தம்: 2,59,431

சமூக நிலவரம்:

இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமுதாய மக்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கவுண்டர், முதலியார், செட்டியார், போயர், அருந்ததியர்,  ஆதிதிராவிடர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:               

வீரபாண்டி தொகுதியில் இதுவரை நடந்த 14 தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1957: எம்.ஆர்.கந்தசாமி முதலியார் (காங்கிரஸ்).
1962: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)
1967: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)
1971: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)
1977: பி.வேங்கா கவுண்டர் (அதிமுக)
1980: பி.விஜயலட்சுமி (அதிமுக)
1984: பி.விஜயலட்சுமி (அதிமுக)
1989: பி.வெங்கடாசலம் (திமுக)
1991: கே.அர்ஜுனன் (அதிமுக)
1996: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)
2001: எஸ்.கே.செல்வம் (அதிமுக)
2006: வீரபாண்டி ராஜா (திமுக)
2011: எஸ்.கே.செல்வம் (அதிமுக)
2016: பி.மனோன்மணி (அதிமுக 94,792 வாக்குகளுடன் வெற்றி)

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

சேலம் - கோவை  தேசிய நெடுஞ்சாலையில் அரியானூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ. 42 கோடியில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு மக்களுக்கு ஜருகு மலையில் ரூ. 9 கோடியில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. சீரகாபாடி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சியில் ரூ. 652 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டமும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம், தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ளன.

முக்கியமான தேவைகள்:

இளம்பிள்ளை,  அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விசைத்தறி மூலம் ஜவுளி உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் இளம்பிள்ளையில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

ஆட்டையாம்பட்டி பகுதியில் முறுக்கு தயாரிக்கும் குடிசைத் தொழிலை மேம்படுத்த, இங்கு உற்பத்தியாகும் முறுக்குக்கு புவிசார் குறியீடு வழங்கினால் இத்தொழில் மென்மேலும் வளர்ச்சி பெறும்.

பனமரத்துப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் விளைச்சல் இருப்பதால் அங்கு பூக்களைப் பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

இளம்பிள்ளை ஏரியைத் தூய்மைப்படுத்தி சீர்படுத்தவும், சித்தர் கோயிலை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

நிறைவேறாத கோரிக்கைகள்:

ஒரு காலத்தில் சேலம் நகருக்கு தண்ணீர் வழங்கி வந்த பனமரத்துப்பட்டி ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. மேட்டூர் உபரிநீர்த் திட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் போல, பனமரத்துப்பட்டி ஏரியையும் மேட்டூர் உபரி நீர் திட்டத்துடன் சேர்க்க கோரிக்கை வலுத்து வருகிறது.

2,400 ஏக்கரில் இந்த ஏரி அமைந்துள்ளது. போதமலை, ஜருகுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து வரட்டாறு, கூட்டாறு வழியாக பனமரத்துப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும். ஆனால் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, வனத்துறையால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பணைகளால் ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஏரியைத் தூர்வாரி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் 15 ஆண்டுகாலக் கோரிக்கை.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காக்காபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வேம்படிதாளம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகியவை நீண்டநாள் கோரிக்கைகள். 

அரசியல் நிலவரம்:

வீரபாண்டி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக - திமுக இடையே மீண்டும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் வீரபாண்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு அதிமுக தலைமையை வற்புறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

திமுகவைப் பொருத்தவரையில் மீண்டும் அங்கு திமுக வேட்பாளர் களம் இறக்கப்படுவது உறுதி என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்த முறையும் திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர்தான் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் திமுக, அதிமுக அணியில் எதிரெதிரே போட்டியிட்டு, மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றனர். 

அதிமுக, திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் தொகுதியில் நிலவும் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வீரபாண்டி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மத்திய அரசால் வகுக்கப்பட்ட திட்டமான எட்டுவழிச் சாலையால்,  வீரபாண்டி தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலங்கள், வீடுகள் பாதிப்புக்குள்ளாகும். அந்தவகையில் எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களின் வாக்குகள் தேர்தலில் எதிரொலிக்கலாம் என கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com