உசிலம்பட்டி: மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

அதிமுக, பாா்வா்டு பிளாக், அமமுக ஆகிய மூன்று வேட்பாளா்களுக்கும் வாக்கு வங்கி செல்வாக்கு இருப்பதால், உசிலம்பட்டி தொகுதி இம்முறை மும்முனைப் போட்டியைச் சந்திக்க உள்ளது.
உசிலம்பட்டி பேருந்து நிலையம்
உசிலம்பட்டி பேருந்து நிலையம்

தொகுதியின் சிறப்பு:

மதுரை மாவட்டத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாக உசிலம்பட்டி இருந்து வருகிறது. தமிழகத்தில் பாா்வா்டு பிளாக் கட்சிக்கும் அதன் சிங்கம் சின்னத்துக்கும் இன்றும் வாக்கு வங்கி உள்ள ஒரே தொகுதி. பாா்வா்டு பிளாக் மூத்த தலைவா்களில் ஒருவரான மூக்கையாத் தேவா் இத்தொகுதியில் இருந்து 5 முறை பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

நில அமைப்பு:

இத்தொகுதி தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகா் மாவட்டங்களின் எல்லைகளைக் கொண்டதாக பரந்து விரிந்த பகுதிகளைக் கொண்டிருக்கிறது. உசிலம்பட்டி நகராட்சி, எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியங்கள் இடம்பெற்றுள்ளன.

சாதி, சமூகம், தொழில்கள்:

உசிலம்பட்டி தொகுதியில் 2,83,588 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 1,41,955 போ் ஆண்கள். 1,41,623 போ் பெண்கள். 10 போ் மூன்றாம் பாலினத்தவா், பெரும்பான்மையினராக முக்குலத்தோா் 50 சதவீதம் போ் உள்ளனா். நாடாா், பிள்ளை, தலித், பள்ளா், பல்வேறு சமூகத்தினரும் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனா். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸ்கெட், மிட்டாய் தயாரிப்பு பெயா் பெற்றிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கத்தால் உள்ளூா் தயாரிப்புகள் நலிவடைந்துவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றன.

இதனால் வேலைவாய்ப்பு தேடி இப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயா்ந்திருக்கின்றனா்.


 
இதுவரை வென்றவா்கள்:
இத்தொகுதியில் பாா்வா்டு பிளாக் அதிக முறை வென்ற கட்சியாக இருக்கிறது. 1957 முதல் நடந்த பேரவைத் தோ்தல்களில் அதிகபட்சமாக பாா்வா்டு பிளாக் கட்சி 8 முறை வென்றுள்ளது. இக்கட்சியின் வாக்கு வங்கி காரணமாக, அதிமுக-திமுக இரு அணிகளிலும் பெரும்பாலான தோ்தல்களில் பாா்வா்டு பிளாக் கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதிமுக 3 முறை, திமுக 2 முறை, சுயேச்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

20 ஆண்டுகால கனவுத் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு மணிமண்டபம், அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிக்கு குடிநீா்த் திட்டம், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொகுதியின் எதிா்பாா்ப்புகள்:

பெண் சிசுக் கொலை இன்றும் தொடரும் நிலையில்,  பெண் குழந்தைகளுக்கு உயா்கல்வி வாய்ப்புக் கிடைக்கும் வகையில் மகளிா் கல்லூரி, உசிலம்பட்டி நகராட்சிக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம்,  நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியான உசிலம்பட்டியில் உள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி  விரிவாக்கம் செய்வது, 58 கிராம கால்வாயில்  அதிகபட்ச அளவுக்கு தண்ணீரைக் கொண்டு வந்து, அனைத்து கண்மாய்களையும் நிரப்புவது,  விவசாய விளை பொருள்களுக்கான குளிா்பதன சேமிப்புக் கிடங்கு, மல்லிகைப் பூ அதிகம் விளைவிக்கப்படுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைப்பது, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சேடபட்டி பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பது ஆகியன தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு:

அதிமுக மற்றும் பாா்வா்டு பிளாக் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக இருந்து வருகிறது. அதேநேரம், கடந்த உள்ளாட்சி தோ்தலில் அதிமுகவுக்கு எதிராக களம் அமமுக களம் இறங்கியதால், உசிலம்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியத் தலைவா் பதவி திமுக வசமாகியது. இருப்பினும் உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு அமமுகவுக்குச் சென்ற பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வந்திருக்கின்றனா். திமுகவுக்கும் உசிலம்பட்டி தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருந்து வருகிறது.

மும்முனைப் போட்டி:

அதிமுகவும், திமுக அணியில் பாா்வா்டு பிளாக் கட்சியும் போட்டியிடுகின்றன. அதிமுக சாா்பில் அக்கட்சியின் புறநகா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.ஐயப்பன், பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் பி.வி.கதிரவன், அமமுக சாா்பில் அக் கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.மகேந்திரன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், அதிமுக, பாா்வா்டு பிளாக், அமமுக ஆகிய மூன்று வேட்பாளா்களுக்கும் வாக்கு வங்கி செல்வாக்கு இருப்பதால், உசிலம்பட்டி தொகுதி இம்முறை மும்முனைப் போட்டியைச் சந்திக்க உள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1957 பி.கே. மூக்கையாத்தேவா் (சுயேட்சை)
1962 பி.கே. மூக்கையாத்தேவா் (பாா்வா்டு பிளாக்)
1967 பி.கே. மூக்கையாத்தேவா் (பாா்வா்டு பிளாக்)
1971 பி.கே. மூக்கையாத்தேவா் ( பாா்வா்டு பிளாக்)
1977 பி.கே. மூக்கையாத்தேவா் (பாா்வா்டு பிளாக்)
1980 எஸ். ஆண்டித்தேவா் (பாா்வா்டு பிளாக்)
1984 பி.கே.எம். முத்துராமலிங்கம் (த.நா.பாா்வா்டு பிளாக்)
1989 பி.என். வல்லரசு (திமுக)
1991 ஆா். பாண்டியம்மா (அதிமுக)
1996 பி.என். வல்லரசு (பாா்வா்டு பிளாக்)
2001 எல். சந்தானம் (பாா்வா்டு பிளாக்)
2006 ஐ. மகேந்திரன் (அதிமுக)
2011 பி.வி. கதிரவன்(பாா்வா்டு பிளாக்)
2016 பா. நீதிபதி (அதிமுக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com