சேலம் வடக்கு: மீண்டும் உதிக்குமா சூரியன்?

முகவுக்கு பலமுள்ள இத்தொகுதியில் அதிமுக  மோதுவதால் போட்டி கடுமையாகவே இருக்கும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தொகுதி நில அமைப்பு

சேலம் வடக்கு தொகுதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், அரசு அதிகாரிகள், அலுவலர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வெள்ளிப் பட்டறைகள்,தொழில் நிறுவனங்கள்,வணிக வளாகம்,மத்திய,மாநில அரசு அலுவலகம் என வர்த்தக ரீதியாகவும்,தொழில் சார்ந்த பகுதியை உள்ளடக்கியுள்ளது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,34,319

பெண்கள்: 1,40,436.

மூன்றாம் பாலினத்தவர்: 21.

மொத்தம்: 2,74,776.

தொகுதியின் பகுதிகள்:

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கடந்த 2011ஆம் ஆண்டு சேலம் வடக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் உள்ள 6ஆவது வார்டு முதல் 16ஆம் வார்டு வரைக்கும், 26 ஆவது வார்டு முதல் 36 ஆவது வார்டு வரைக்கும் என மொத்தம் 22 வார்டுகள், கன்னங்குறிச்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கி உள்ளது.

சமூக நிலவரம்:

வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இத்தொகுதியில் வசிக்கின்றனர்.செட்டியார், நாடார், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.சேலம் நகரப் பகுதியான கோட்டை, செவ்வாய்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் அதிகமாக வசிக்கின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக, காங்கிரஸ் தலா மூன்று முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1991ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக வெற்றி பெறவில்லை. மாறாக அதிமுக கூட்டணியில் 2001இல் பாமகவும், 2011இல் தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன.

சேலம் வடக்கு நீதிமன்ற வளாகம்
சேலம் வடக்கு நீதிமன்ற வளாகம்

இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்கள் விவரம்:

1951: சி.லட்சுமண கந்தன் (காங்கிரஸ்)

1957: அ.ரத்தினவேல் கவுண்டர் (காங்கிரஸ்)

1962: அ.ரத்தினவேல் கவுண்டர் (காங்கிரஸ்)

1967: ஈ.ஆர்.கிருஷ்ணன் (திமுக)

1971: ராஜாராம் (திமுக)

1977: எம்.ஆறுமுகம் (ஜனதா கட்சி)

1980: எம்.ஆறுமுகம் (அதிமுக)

1984: ஆறுமுகம் (அதிமுக)

1989: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)

1991: எம்.நடேசன் (அதிமுக)

1996: ஏ.எல்.தங்கவேல் (திமுக)

2001: எம்.கார்த்தி (பாமக)

2006: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (திமுக)

2011: அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக)

2016: ஆர்.ராஜேந்திரன் (திமுக)

2016 தேர்தல் நிலவரம்:

ஆர்.ராஜேந்திரன் (திமுக) 86,583 வெற்றி

சரவணன் (அதிமுக) 76,710

கதிர் ராசரத்தினம் (பாமக) 7,975

ஆர்.தேவதாஸ் (தமாகா) 4,157

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

திமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், பகுதி மக்களுக்குத் தேவையான பேவர் பிளாக் தரை, கான்கிரீட் சாலை, சிறுபாலம் அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால், நியாயவிலைக் கடை கட்டடம், பயணியர் நிழற்குடை, பயணியர் இருக்கை, தார்ச் சாலை, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை அமைத்தல், அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு, சுகாதார வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எல்.இ.டி. சோலார் விளக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வாங்க நிதி உதவி என பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

தீர்க்கப்படாத பிரச்னைகள்:

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் அவ்வழியே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் ரயில் வரும் வேளைகளில் முள்ளுவாடி கேட் அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஏற்காடு சேர்வராயன் மலையில் இருந்து வரும் நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஜான்சன்பேட்டை, மணக்காடு, பெரமனூர், அழகாபுரம், பெரியபுதூர் உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர சேகரிக்கப்படாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

அரசியல் நிலவரம்:

2021 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. சேலம் மேற்கு தொகுதியில் இருமுறை வெற்றி கண்ட அதிமுக எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம், இந்த முறை தொகுதி மாறி, சேலம் வடக்கு தொகுதியில் களம் காண்கிறார்.

திமுகவில் தற்போதைய சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். மறைந்த திமுக அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கடந்த 2006 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் சார்பாக வெங்கடாசலம் போட்டியிட உள்ளார்.

அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். கடந்த 2016 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதி மட்டுமே திமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதியாகும். திமுகவுக்கு பலமுள்ள இத்தொகுதியில் அதிமுக மோதுவதால் போட்டி கடுமையாகவே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com