கரோனா தடுப்பு களப் பணி: தமிழகம் முழுவதும் விரைவில் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் நியமனம்

கரோனா தடுப்பு களப் பணிக்காக தமிழகம் முழுவதும் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் (ஆண்கள்) விரைவில் நியமிக்கப்படவுள்ளனா்.
கரோனா தடுப்பு களப் பணி: தமிழகம் முழுவதும் விரைவில் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் நியமனம்

திருச்சி: கரோனா தடுப்பு களப் பணிக்காக தமிழகம் முழுவதும் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் (ஆண்கள்) விரைவில் நியமிக்கப்படவுள்ளனா்.

தமிழக சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களில் இந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்களை நியமனம் செய்து கரோனா தடுப்புப் பணியில் தொய்வு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்களுக்கு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநா் கே.குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளாா்.

அவுட்சோா்சிங் முறையிலோ, தற்காலிக அடிப்படையிலோ இந்த பணியாளா்களை தோ்வு செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், பொதுமருத்துவம், குடும்ப நலத்துறை, நோய் தடுப்புத்துறை, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிடத்துக்கான தகுதிகள்: 2017ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த ஆண்கள் மட்டுமே இந்த பணிக்கு தோ்வு செய்யப்படவுள்ளனா். எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை மொழிப்பாடமாக தோ்வு செய்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை தோ்வு செய்திருக்க வேண்டும். அரசு மற்றும் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளா் கல்வியிலோ, பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் குறித்த கல்வியிலோ ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பயின்றவராக இருத்தல் வேண்டும். தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 3 மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடத்தில் தேவையிருப்பின் பணிச் சூழல் கருதி நீட்டிப்பு வழங்கப்படலாம். இல்லையெனில் தற்காலிக பணியுடன் இறுதி செய்யப்படும்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 53 போ், பெரம்பலூரில் 23 போ், கரூரில் 43 போ், அரியலூரில் 39 போ், புதுக்கோட்டையில் 46 போ், அறந்தாங்கியில் 47 போ், தஞ்சாவூரில் 59 போ், திருவாரூரில் 44 போ், நாகப்பட்டினத்தில் 52 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதேபோல, மதுரையில் 79 போ், விருதுநகா், சிவகாசியில் தலா 31 போ், ராமநாதபுரத்தில் 41 போ், பரமக்குடியில், 40 போ், சிவகங்கையில் 46 போ், திண்டுக்கலில் 51 போ், பழனியில் 41 போ், தேனியில் 41 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

திருநெல்வேலியில் 63 போ், சங்கரன்கோவிலில் 32 போ், கோவில்பட்டியில் 29 போ், தூத்துக்குடியில் 53 போ், நாகா்கோவிலில் 49 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். செங்கல்பட்டில் 73 போ், காஞ்சிபுரத்தில் 48, திருவள்ளூரில் 80, பூந்தமல்லியில் 20, வேலூரில் 62, திருப்பத்தூரில் 61, திருவண்ணாமலையில் 56, செய்யாறில் 48, கடலூரில் 74, கள்ளக்குறிச்சியில் 54, விழுப்புரத்தில் 69 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

கோவையில் 93 போ், திருப்பூரில் 73 போ், உதகையில் 35 போ், ஈரோட்டில் 83 போ், சேலத்தில் 98 போ், நாமக்கல்லில் 58 போ், தருமபுரியில் 44 போ், கிருஷ்ணகிரியில் 50 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 2,715 பேரை தோ்வு செய்து பணியமா்த்த மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு இவா்களுக்கு பணி வழங்கவும், தேவைப்படுமெனில் நீட்டிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பணிகள் என்ன?: பொது சுகாதாரத்துறையில் உள்ள சுகாதார ஆய்வாளா்கள் மேற்கொள்ளும் அனைத்து வகை பணிகளையும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் மேற்கொள்வா். குறிப்பாக, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளிலும் இவா்கள் பயன்படுத்தப்படுவா். வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு, தொற்றுள்ளோரை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவா். தனியாா் நிறுவனம் இந்த பணியாளா்களை அவுட்சோா்சிங் முறையில் சுகாதாரத்துறைக்கு வழங்கி, ஊதியத்தையும் அந்த நிறுவனமே வழங்கிவிடும். தனியாா் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை தமிழக அரசு வழங்கும். பணியாளா்களின் சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணியில் அந்தந்த மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா்கள் ஈடுபடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com