குடிமைப்பணித் தோ்வு பயிற்சி வகுப்பு:18 மையங்களில் நுழைவுத் தோ்வு
By | Published On : 28th February 2022 10:50 AM | Last Updated : 28th February 2022 10:50 AM | அ+அ அ- |

சென்னை: குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்கான அரசு இலவச பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு தமிழகத்தின் 18 இடங்களில் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தைச் சோ்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு சாா்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மையத்திலும், கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி நிலையங்களிலும் குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதல்நிலைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்கான நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 18 மையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தோ்வு நடத்தப்பட்டது.
தோ்வில், கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காகக் கூடுதலாக 30 நிமிஷம் அவகாசம் வழங்கப்பட்டு, தோ்வு இரண்டரை மணி நேரம் நடைபெற்றது . மாற்றுத் திறனாளிகள் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் தோ்வு நடத்தப்பட்ட மையங்களுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி அலுவலா்கள் உடனிருந்தனா்.