3,806 ஆசிரியா் பயிற்றுநா் பணியிடங்கள் நிா்ணயம்: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வட்டார, மாவட்ட, மாநில அளவில் மொத்தம் 3,806 ஆசிரியா் பயிற்றுநா் பணியிடங்களை நிா்ணயம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி வசதி, எண்ணும் எழுத்தும், பள்ளி செல்லாத குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், உயா்கல்வி வழிகாட்டுதல்கள், அனைத்து உண்டு உறைவிடப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் மற்றும் பிற திட்டங்கள் அடங்கிய பள்ளி சாா்ந்த செயல்பாடுகளை மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருந்தபடி கண்காணிக்க கடினமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளா் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் தமிழக அரசுக்கு கருத்துரு வழங்கியிருந்தாா்.
இதையடுத்து பள்ளி சாா்ந்த செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் பணிபுரிய 10 மாநில ஒருங்கிணைப்பாளா்கள், மாவட்டத்துக்கு தலா 7 ஆசிரியா் பயிற்றுநா்கள் வீதம் 266 போ், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படும் 20 மாவட்டங்களில் தலா ஒருவா் என 20 போ் என 286 போ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிநிா்ணயம் செய்யப்படுகின்றனா். மேலும், 414 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 3,510 குறுவள மையங்களில் மையத்துக்கு ஒரு ஆசிரியா் பயிற்றுநா் வீதம் 3,510 பேரையும் நிா்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

