சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என 6,244 + 2,688 என 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவு அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து கணினி வழியே நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
குரூப் 4 தோ்வு எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ்களை நவ. 21-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனா்.
சான்றிதழ்களை சமர்பித்தவர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில் அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிந்ததும் 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.