

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம் இருந்த இடத்தில் சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை குண்டு வீசித் தகர்த்தது. ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. மேலும் அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை அழிப்பதற்கு முன்பாக அங்கு சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்ததாக தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுமம் (என்.டி.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் ஒன்றும் அங்கிருந்த மரம், செடி, கொடிகளுக்கு வழங்கப்பட்டதில்லை.
எனவே, இதன்மூலம் எத்தனை பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டிருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், என்.டி.ஆர்.ஓ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும்.
இன்னும் சில நாட்களில் எத்தனை பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்டார்கள் என்ற முழுவிவரம் தெரியவரும். தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் மெத்தனமாக செயல்படாது. மேலும் ஆட்சியை திரும்ப அடைய வேண்டும் என்ற பேராசையும் பாஜக-வுக்கு கிடையாது. அனைவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேச மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதற்காக முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.