
கிரெடிட் கார்டு என்றால் இன்று பலரும் அதனை வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். ஏற்கெனவே பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் அதனைப் பார்த்து பயப்படுகின்றனர் என்றே சொல்லலாம்.
உண்மையில், சரியான, பாதுகாப்பான முறையில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் அது பல வகைகளில் உதவும். கிரெடிட் கார்டு எளிதாக பெறக்கூடியது. அதேபோல அதை நிர்வகிப்பதும் எளிதுதான்.
கிரெடிட் கார்டு என்பது..
கிரெடிட் கார்டு என்பது வங்கிகள் வழங்கும் கடன் வசதிகளில் ஒன்று. குறிப்பிட்ட தொகையை நீங்கள் மாதந்தோறும் செலவழிக்கவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப அதனைச் செலுத்தவும் முடியும். அந்த குறிப்பிட்ட அளவு பணத்தை தோராயமாக ஒரு மாதம் அல்லது 45 நாள்கள் வரையில் வட்டியில்லாமல் அளிக்கக்கூடியதுதான் கிரெடிட் கார்டு. அந்த குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் அந்த பணத்தை முழுவதுமாக திருப்பி செலுத்திவிட்டால் வாங்கிய அந்த தொகையை மட்டும்செலுத்தினால் போதும். அதுவே, இஎம்ஐ என்ற முறையில் செலுத்தினாலோ அல்லது தாமதகமாக செலுத்தினாலோ கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி வேலை செய்யும்?
உங்களுடைய சேமிப்புக் கணக்கின் வரவு- செலவு அடிப்படையிலே வங்கிகள் இப்போதெல்லாம் தானாகவே கிரெடிட் கார்டுகளை கேட்டு வழங்குகின்றன. (இதற்குக் காரணம் உங்களைச் செலவு செய்யவைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவது)
கிரெடிட் லிமிட் என உங்களுக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக அந்த தொகையை நீங்கள் செலவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதன் வரவு - செலவு விவரங்கள் அறிக்கையாக (statement) வரும்.
உங்களுக்கான வரம்பு தொகை, உங்களுடைய பேலன்ஸாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் பயன்படுத்தும்போது இந்த தொகை குறைந்துகொண்டே வரும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வங்கி வரவு- செலவு விவரம் அனுப்பும். நீங்கள் பயன்படுத்திய தொகையை அந்த தேதியில் மொத்தமாகவும் செலுத்தலாம் அல்லது குறைந்தபட்ச தொகையையும் செலுத்தலாம்.
மொத்தமாக தொகையை செலுத்தாவிட்டால் கூடுதல் தொகை அல்லது வட்டி எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், குறைந்தபட்ச தொகை மட்டும் செலுத்தினால் மீதியுள்ள தொகைக்கு வட்டி விதிக்கப்படும். இது உங்களுடைய அடுத்த வரவு- செலவு விவரங்களில் சேர்க்கப்படும். இந்தத் தொகைக்கு 25% முதல் 60% வரை வட்டி விதிக்கப்படுகிறது.
அதேபோல கிரெடிட் கார்டுகளை நேரடியாக வங்கி ஏடிஎம்களில் செலுத்தி பணம் எடுத்தால் அதற்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். எனவே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை வாங்குங்கள், ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டாம்.
இதுவே அந்தக் குறிப்பிட்ட தேதியில் எந்த தொகையும் செலுத்தாமல்விட்டால் உங்களுடைய வங்கிக்கணக்கில் தானாகவே பதிவாகிவிடும். இது உங்கள் சிபில் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். (சிபில் ஸ்கோரைப் பொறுத்துதான் வங்கிகள் கடன் கொடுக்கும்)
மேலும் இதனால் உங்களுடைய கிரெடிட் கார்டுக்கான சலுகைகளும் கிடைக்காமல் போகும். அடுத்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படும். அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைவிட அதிக தொகை செலுத்த வேண்டிவரும்.
இதைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திய தொகையை மொத்தமாக செலுத்திவிடலாம். இதனால் எந்த நஷ்டமும் இல்லை. அல்லது குறைந்தபட்ச தொகையையாவது செலுத்திவிட்டு அடுத்த முறை மொத்த தொகையை செலுத்தலாம்.
உங்களால் இதை செய்யமுடியவில்லை எனில் தானாகவே வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளும் ஆட்டோ- டெபிட் முறையில் பணத்தைச் செலுத்த வங்கியில் முன்னதாகவே தெரிவித்துவிட வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் வங்கிகளே உங்களுடைய சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும். குறைந்தபட்ச தொகை அல்லது முழுத்தொகையை செலுத்தலாம். அது உங்கள் விருப்பம்.
சரியான நேரத்தில் தொகையை செலுத்திவிட்டால் கிரெடிட் கார்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதுவே செலுத்தவில்லை என்றால் நீங்கள் எதிர்பாராத அளவு கூடுதல் தொகையை பல ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும். இது கடனையும் அதிகரிக்கும், செலவையும் அதிகரிக்கும்.
பொதுவாக மாதச் செலவை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் கிரெடிட் கார்டு வாங்க முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் அது பல பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வகைகள்
1. நீங்கள் கிரெடிட் கார்டு பல்வேறு இடங்களில் பயன்படுத்தும்போது அதற்கு வட்டி இல்லாத கிரெடிட் கார்டாக இருக்க வேண்டும். (0% வட்டி). அதேநேரத்தில் பெரும்பாலான கார்டுகளில் வங்கி ஏடிஎம்களின் மூலமாக 'பணமாக' எடுக்கும்போது வட்டி இருக்கும். (எனவே பணமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்) இது சாதாரண வகை கிரெடிட் கார்டு.
2. உங்கள் கிரெடிட் கார்டு வரம்பின் பெரும் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம். இப்போது பணமாக நீங்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதற்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், பரிமாற்றத்திற்கான கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். (தொகையில் 4% வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்)
இந்த இரண்டு வகை காடுகளிலும் கண்டிப்பாக மாதம் குறைந்தபட்ச தொகையாவது செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஏற்கெனவே கடன் நிலுவையில் இருக்கும்போது அடுத்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கூடுதல் கடனை ஏற்படுத்தும்.
கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்த அதன் வரவு-செலவு கணக்குகள் சரியாக இருக்க வேண்டும். அதேபோன்று கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு ஆண்டுக்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகளில் ஆண்டு கட்டணம் ஏதுமின்றி கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.
சலுகைகள்
கிரெடிட் கார்டுகளை பொருத்து சலுகைகள் இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் ஆன்லைனில் அதிகம் பொருள்களை வாங்க பயன்படுத்துவீர்களானால் ஒரு வகை கிரெடிட் கார்டு, ஆஃப்லைனில் அதாவது நேரடியாகச் சென்று கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தினால் ஒரு வகை கிரெடிட் கார்டு இருக்கிறது. இதற்கேற்ப கேஷ்பேக் ஆஃபர் (நீங்கள் பயன்படுத்தும் தொகைக்கு 1% அல்லது குறிப்பிட்ட தொகை திருப்பி கிடைக்கும்) அல்லது புள்ளிகள்(புள்ளிகள் அதிகம் சேர்ந்தபிறகு அதை வைத்து ஏதேனும் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்) வழங்கப்படுகின்றன.
அதேபோல ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, பயணம், ஆன்லைனில் பொருள்களை வாங்குதல் என தனித்தனி வகை கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன.
கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கிரெடிட் கார்டு பெறுவதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட அளவு தொகை மாத ஊதியமாக இருக்க வேண்டும், வங்கிக்கணக்கிலும் வரவு- செலவு சரியாக இருக்க வேண்டும். நீங்கள் கிரெடிட் கார்டு பெறத் தகுதியானவரா என பல்வேறு இணையதளங்களின் மூலமாக தெரிந்துகொள்ளலாம், அல்லது வங்கியைத் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் தகுதியானவர்கள் என்று தெரிந்துகொண்டால் ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக வங்கிக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, நீங்கள் விரும்பும் கிரெடிட் கார்டு விவரங்களை தெரிந்துகொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சரியான தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சில ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று நிரப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் கிரெடிட் கார்டு அஞ்சல்/கூரியர் மூலமாக உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏடிஎம் சென்றோ 4 இலக்க கடவுச்சொல் எண் (4 digit PIN) செட் செய்துவிட்டு பின்னர் அதனை பயன்படுத்தத் தொடங்கலாம்.
ஆன்லைன் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலமாக இதன் வரவு-செலவு கணக்குகளை நீங்கள் நிர்வகித்துக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வங்கியைத் தொடர்புகொண்டு ஏன் எனத் தெரிந்துகொண்டு அதனை சரிசெய்த பின்னர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்திவிட்டு வேண்டாம் என்று நினைத்தால் நிலுவைத் தொகையை எல்லாம் செலுத்திய பிறகு வங்கிக்கிளையைத் தொடர்புகொண்டு கார்டை செயலிழக்க வைத்துவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.