
ஓட்டுநர் உரிமம் என்பது இந்தியாவில் உள்ள சாலைகளில் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை இயக்க தனிநபருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது மண்டல போக்குவரத்து ஆணையத்தால்(RTO) வழங்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்தின் அவசியம்? எப்படி விண்ணப்பிக்கலாம், எப்படிப் புதுப்பிக்கலாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இங்கே..
ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?
ஒருவர் முறையாகப் பயிற்சி பெற்றவர் என்பதற்கும், வாகனத்தை நன்றாக ஓட்ட முடியும் என்பதற்கும், போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை அவர் அறிந்திருப்பதற்கும் இது சான்றாகும். வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும், அது ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே வாகன ஓட்டுநர் உரிமம் ஒருவருக்கு மிகவும் அவசியமாகும்.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமங்களின் வகைகள்..
1. கற்றல் உரிமம் (LL): நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்களுக்கு கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது. ஓட்டுநரின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தில்(RTO) விண்ணப்ப செயல்முறையை முடித்தவுடன், விண்ணப்பதாரருக்குத் தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும். தனிநபர் ஒருவர் தங்கள் ஓட்டுநர் திறன்களை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும், நிரந்தர ஓட்டுநர் உரிமத் தேர்வுக்குத் தயாராகவும் இது உதவுகிறது. ஆறு மாதத்திற்குப் பிறகு நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
2. நிரந்தர ஓட்டுநர் உரிமம் (PDL): மண்டல போக்குவரத்து அலுவலகம் (RTO) நடத்தும் எழுத்து மற்றும் ஓட்டுநர் தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற நபருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. சாலைகளில் இலகுரக வாகனத்தை இயக்குவதில் தனிநபர் தகுதியானர் என்பதையும், போக்குவரத்து சின்னங்களைப் பற்றி விரிவான புரிதல் கொண்டிருப்பதையும் இது குறிக்கிறது. ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அவரவர் வயதுக்கு ஏற்ப அதிகபட்சமாக 20 வருடங்களுக்கு இந்த உரிமம் செல்லுபடியாகும்.
3. வணிக ஓட்டுநர் உரிமம் (CDL): கனரக மோட்டார் வாகனங்கள்(HMV), நடுத்தர மோட்டார் வாகனங்கள்(MMV), இலகுரக சரக்கு போக்குவரத்து பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து போன்ற வணிக நோக்கங்களுக்காக வாகனங்களை இயக்கும் நபர்களுக்காக வழங்கப்படும் சிறப்பு ஓட்டுநர் உரிமமாகும். நிலையான ஓட்டுநர் உரிமங்களிலிருந்து இது வேறுபடுகின்றன.
விண்ணப்பதாரர்களுக்குக் கல்வித்தகுதியாகக் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 22 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மாநில அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான சரியான பயிற்சியைப் பெற்றிருப்பது அவசியம். இந்த உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும்.
நிரந்தர ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது போலவே கனரக வாகன செயல்முறைகள் இருக்கும். ஆனால் விண்ணப்பதாரர்கள் வணிக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க என்று குறிப்பிட வேண்டும். நிரந்தர ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பவர்களும், வணிக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
4. சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDL)
வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட விரும்பும் நபர்களுக்குச் சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளாரா என்பதையும், வெளிநாட்டில் வாகனம் ஓட்ட அங்கீகரிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் சரிபார்க்கவும் இது உதவுகிறது. வெளிநாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள வசதியாக இந்த உரிமம் பல்வேறு மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த உரிமத்தைப் பெற ஒருவர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதோடு, அவர்கள் வசிக்கும் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அனுமதி ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும், மீண்டும் புதுப்பிக்க இயலாது. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிப்பது அவசியம்.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்குத் தகுதி என்றால் அது வாகன வகையைப் பொறுத்து மாறுபடும். 50cc வரை எஞ்சின் திறன் கொண்ட கியர்கள் இல்லாத வாகனங்களுக்கு 16 வயதுடையவர்களின் பெற்றோர் ஒப்புதலுடன் ஓட்டத் தகுதியானவர்கள். கியர் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்ட 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். வணிக வாகனங்கள் ஓட்ட 20 வயதும் (சில மாநிலங்களில் 18 வயது) கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சார்ந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்..
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழ், பள்ளி இறுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவையும், அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவையும், முகவரிச் சான்றாக வீட்டு ஒப்பந்தம், மின் கட்டண ரிசீது, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்றவை அவசியமாகும்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் பிற ஆவணங்கள்..
கற்றல் உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவை. மேலும், விண்ணப்பக் கட்டணம், முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம். மேலும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாகும்.
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி?
https://parivahan.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் சர்வீஸ் என்பதைக் க்ளிக் செய்யவும். அதில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்(Driving Licence Related Services) என்பதைக் கிளிக் செய்து மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளே செல்லவும். ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்க என்பதைக் கிளிக் செய்து, விண்ணப்பத்தை நிரப்பிய பின்னர், ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும், ஓட்டுநர் உரிமத்துக்கான தேர்வில் பங்கேற்க ஒரு இடத்தை முன்பதிவு செய்வதுடன் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த தேதி, நேரத்தில் மண்டல போக்குவரத்து ஆணையரை (RTO) சென்று சந்திக்க வேண்டும். அங்கு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு உங்களின் ஓட்டுநர் உரிமம் அனுப்பிவைக்கப்படும் அல்லது நீங்கள் பயிற்சி பெற்ற மையத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய விதிப்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற தனியார்ப் பள்ளியிலும் ஓட்டுநர் தேர்வை முடிக்கலாம். RTO-வில் ஓட்டுநர் தேர்வை முடிப்பது இனி கட்டாயமில்லை.
நேரடி நடைமுறை..
கற்றல் உரிமத்திற்குப் படிவம் 1-ம், நிரந்தர உரிமத்திற்குப் படிவம் 4-ம் பயன்படுத்தலாம். இந்தப் படிவம் மாநில போக்குவரத்து இணையதளத்திலோ அல்லது அருகிலுள்ள ஆர்டிஓ (RTO) அலுவலகத்திலோ கிடைக்கும். படிவத்தை நிரப்பி, வயது மற்றும் முகவரிக்கான சான்றுகளுடன் உங்கள் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்கவும். உங்கள் ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கான தேதியை ஆர்டிஓ அதிகாரிகளிடமிருந்து கேட்டு, அதற்குண்டான பணத்தைச் செலுத்தவும். குறிப்பிட்ட தேதி, நேரத்தின்படி ஓட்டுநர் உரிம சோதனை நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், நீங்கள் ஓட்டுநர் உரிமம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் நீங்கள் பயிற்சி பெற்ற ஓட்டுநர் மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைனில் ஓட்டுநர் உரிம நிலையை சரிபார்க்க..
ஓட்டுநர் உரிமத்தின் நிலையை https://parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் சர்வீஸில்(Driving Licence Related Services) என்பதைக் கிளிக் செய்து மாநிலத்தைத் தேர்வு செய்தால் வரும் பக்கத்தில் Application Status என்பதைக் கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி, கேப்சா உள்ளிட்டவை செலுத்தி விவரங்களை அறிந்துகொள்ளலாம். இல்லையெனில், ஓட்டுநர் உரிமத்தின் நிலையைச் சரிபார்க்க உங்கள் விண்ணப்ப எண்ணுடன் அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்குச் சென்றும் விண்ணப்ப நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
கற்றல் உரிமத்திற்கான தேர்வு நடைமுறை (LL)
போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஓட்டுநர் திறன்களையும் சரிபார்க்க கற்றல் உரிமத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து விண்ணப்பதாரர்களும் RTO அலுவலகத்தில் கற்றல் உரிமத்திற்கான எழுத்துத் தேர்வை எழுத வேண்டும்.
நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு நடைமுறை
இருசக்கர வாகனங்களுக்கு.. கற்றல் உரிமத் தேர்வுக்கு 8 என்ற வடிவிலான சாலையில் இருசக்கர வாகனத்தை சமிக்ஜைகள் காட்டி இயக்க வேண்டும். விண்ணப்பதாரர் தரையில் கால் வைக்காமல் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் ஓட்டி காண்பிக்க வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு.. ஆர்டிஓ அலுவலரிடம் நான்கு சக்கர வாகனத்தை முன்னும் பின்னுமாக ஓட்டும் திறன், பார்க்கிங், கண்ணாடிகள் சரிபார்ப்பு, கியர்கள் மற்றும் பிரேக்குகளைப் பயன்படுத்தி ஓட்டுதல் போன்ற ஓட்டுநர் தேர்வு வைக்கப்படுகின்றது.
சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கு..
வெளிநாடு செல்லும் இந்தியக் குடிமக்களுக்குச் சர்வதேச ஓட்டுநர் அனுமதியை இந்தியச் சாலைப் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்குகிறது. இந்த ஓட்டுநர் அனுமதி இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டுச் சாலைகளில் பயணிக்கும்போது, உங்கள் அசல் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் சர்வதேச ஓட்டுநர் அனுமதி ஆகியவற்றை உங்களுடன் வைத்திருப்பது அவசியம். சர்வதேச ஓட்டுநர் உரிமமானது ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்..
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும் வாகன வகையைப் பொறுத்து மாறுபடும்.
படிவம் 9: ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம். ஆர்டிஓ அலுவலகத்தில் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். காலாவதியான ஓட்டுநர் உரிமம், முகவரிச் சான்று, வயதுச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவை தேவைப்படுகிறது.
படிவம் 1: மருத்துவ தகுதிச் சான்றிதழ். இதை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அருகிலுள்ள ஆர்டிஓவிலும் பெறலாம்.
படிவம் 1A: விண்ணப்பதாரர் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் மருத்துவச் சான்றிதழ் அவசியம்.
வணிக வாகன ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்..
படிவம் 9ஐ உள்ளூர் ஆர்டிஓவில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். முகவரிச்சான்று, வயதுச் சான்று, காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் படிவம் 1, படிவம் 1A இணையதளத்தில், ஆர்டிஓ அலுவலகத்திலும் கிடைக்கும். பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஓட்டுநர் புதுப்பிப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகிறது. வணிக வாகன ஓட்டுநர்கள் 30 நாள்களுக்குள் உரிமத்தைப் புதுப்பித்தால் ஒரு கட்டணமும், அதற்குப்பிறகு புதுப்பித்தால் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பது எப்படி?
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான ஆன்லைன் செயல்முறை மிகவும் எளிமையானது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ https://parivahan.gov.in/parivahan/ இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் சர்வீஸில் Driving License Related Services என்பதைக் க்ளிக் செய்து மாநிலத்தைத் தேர்வு செய்து உள்ளே சென்றால் "DL Renewal" என்பதை க்ளிக் செய்யவும். Continue என்பதை க்ளிக் செய்து படிவத்தில் கேட்கப்பட்ட பிறந்த தேதி, ஓட்டுநர் உரிம எண், கேப்ட்சா உள்ளிட்டவை வழங்கி படிவம் நிரப்பப்பட்டதும், சரிபார்ப்பு செயல்முறைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்தைப் பார்வையிட வேண்டும். ஆவணங்களின் சரிபார்ப்பு முடிந்ததும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்முறை தொடங்கப்பட்டு 15 நாள்களுக்குள் உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
நேரடியாக விண்ணப்பிப்பவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் படிவம் 9, படிவம் 1, படிவம் 1-A ஆகிய மூன்று விண்ணப்பங்களையும் பெற்று தேவையான ஆவணங்களுடன் ஆர்டிஓ அலுவலக அதிகாரியிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அடுத்த 15 நாள்களுக்குள் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்?
ஓட்டுநர் உரிமம் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லும். அதாவது அந்த 20 வருடங்கள் ஒருவருக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போதும் வாகனம் ஓட்டுவதற்கு உகந்த மனநிலை, உடல்நிலை இருக்கின்றதா என்பதை மருத்துவர் பரிசோதித்த ஒப்புதல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனின் அபராத தொகையைச் செலுத்தும் முறை..
https://echallan.parivahan.gov.in/inde87x/accused-challan என்ற இணையதளத்திற்குச் சென்று செலான் எண்/ஓட்டுநர் உரிம எண்/வாகன எண் ஆகிய மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, கேப்சாவை உள்ளிடவும், பின்னர் அபராத கட்டணத்தைத் தேர்வு செய்யவும். கட்டணத்தைக் கட்டி முடித்த பிறகு, உங்களுக்கு ஒரு transaction ID இது குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
வேறு மாநிலமாக இருந்தால்.. அபராத தொகை செலுத்து முறை..
மாநில போக்குவரத்து இணையதளத்திற்குச் சென்று விதிமீறல் அபராதங்களைச் செலுத்த என்பதை க்ளிக் செய்யவும். மீறல் அபராதம், பார்க்கிங் கட்டணங்கள், ஸ்பாட் அபராதங்கள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்களைச் செலுத்த வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யுங்கள். போக்குவரத்து மீறலின் வகையைப் பொறுத்து சில விவரங்கள் மாறுபடும். (பொதுவாக புதிய வாகனப் பதிவு எண், பழைய பதிவு எண் அல்லது பார்க்கிங் மீறல் டேக் எண்ணை (உங்களுக்குத் தெரிந்தால்) உள்ளிடவும். கட்டண முறையைத் தேர்வு செய்து மாஸ்டர் அல்லது விசா அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும்.
ஆஃப்லைனில் அபராதம் செலுத்தும் முறை..
போக்குவரத்து விதிமீறலுக்கான கடிதம் உங்கள் கையில் இருக்கும்பட்சத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள எந்த போக்குவரத்து காவல் நிலையத்திலும், போக்குவரத்து ஆய்வாளரிடம் விதிமீறலுக்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரலாம். நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் செலுத்த வேண்டியிருந்தால், இன்றே அதைச் செலுத்திப் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும்.
நிலுவையில் உள்ள அபராதத் தொகையைக் கண்டறிவது எப்படி?
இணையதளத்தில் Vahan Jankari application என்பதைக் க்ளிக் செய்து வாகனப் பதிவு எண், கேப்ட்சாவை சரிபார்த்து உள்ளிடவும். உங்களின் வாகனம் தொடர்பாக உள்ள புகார், எஃப்ஐஆர் ஏதேனும் இருந்தால் திரையில் தோன்றும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம் தொடர்பான முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் அல்லது விடுபட்டிருந்தால் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.
Source: https://parivahan.gov.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.