செல்வமகள் சேமிப்பு திட்டம் - முழு விபரம்!

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு தகவல்..
சுகன்யா திட்டம்
சுகன்யா திட்டம்
Published on
Updated on
2 min read

ஆண் குழந்தைப் பிறந்தால் வரவாகவும், பெண் குழந்தைகள் செலவாகவும் நினைத்த காலம் மாறி, பெண் குழந்தைகளை அனைவரும் வரவேற்பதுடன் அரசும் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.

சுகன்யா திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி, திருமணச் செலவுகளை ஈடுசெய்யும் விதமாக இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

யாரெல்லாம் இந்த கணக்கைத் தொடங்கலாம்?

பெண் குழந்தைப் பிறந்தது முதல் 10 வயதுக்குள் எந்த நேரத்திலும் பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இந்த கணக்கினைத் தொடங்க முடியும். எந்தப் பெண் குழந்தையின் பெயரில் கணக்கினைத் தொடங்கினாலும் 18 வயது வரை மட்டுமே வைப்புத்தொகை செலுத்த முடியும். ஒரு பெண் குழந்தைகளுக்கு ஒன்று வீதம் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே தொடங்கமுடியும். மூன்றாவதாகப் பெண் குழந்தை இருந்தாலும் சுகன்யா திட்டத்தில் கணக்கு தொடங்க முடியாது.

எவ்வளவு காலம் வங்கியில் வரவு வைக்கமுடியும்?

2019 விதியின்படி வங்கிக் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை வரவு வைக்கலாம். ஒருவேளை 9 வயது இருக்கும்போது சுகன்யா கணக்கைத் தொடங்கினால், அதிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 24 வயது வரை வரவு வைக்க முடியும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும்.

பெற்றோர் மட்டுமே நிர்வகிக்க வேண்டுமா?

சுகன்யா கணக்கைப் பெண் குழந்தைக்கு 18 வயதாகும் வரை மட்டுமே பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தொடர முடியும். பெண் குழந்தைக்கு 18 வயது அடைந்தபிறகு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து கணக்கு வைத்திருக்கும் நபரே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். மேலும் அந்த பெண் குழந்தையின் படிப்பு செலவிற்குக் கணக்கில் உள்ள வைப்புத்தொகையில் 50 சதவீதம் வரை திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. அதேசமயத்தில் இந்த திட்டத்தில் கடன் வசதி கிடையாது.

சுகன்யா திட்டத்தின் வட்டி விகிதம்

அரசு வழங்கும் வட்டி விகிதம் அவ்வப்போது மாறலாம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டிற்கு நல்ல வட்டி கிடைக்கும். 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டின்படி ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது. ஒரு வருடத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை வரவு வைக்கலாம். சுகன்யா கணக்கை இயக்கும் பெற்றோர்/பாதுகாவலர் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு (வங்கி/தபால் நிலையத்துக்கு) கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

ஆதார், பான் அவசியம்..

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிதாக சுகன்யா கணக்கைத் தொடங்க ஆதார், பான் வழங்குவது கட்டாயமாகும். ஒருவேலை ஆதார், பான் அட்டை இதுவரை விண்ணப்பிக்கவில்லையெனில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் ஆதார், பான் எண்ணுக்கு விண்ணப்பித்துப் பெற்று, கணக்கு திறந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சுகன்யா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்போர் ஆதார், பான் சமர்ப்பிக்கப்படும் வரை கணக்கு செயல்படாது.

முன்கூட்டியே கணக்கினை முடிக்கச் செய்ய வேண்டியவை..

21 ஆண்டுகள் முடிவதற்குள் சுகன்யா கணக்கை முன்கூட்டியே முடிப்பதற்குக் கணக்கு வைத்திருப்பவர் திருமணத்தின் காரணமாக அத்தகைய கோரிக்கையுடன் விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருக்கும் பெண்ணிற்குத் திருமணம் நடந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது திருமணமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு கணக்கை முடிக்க அனுமதிக்கப்படாது.

எந்தெந்த வங்கியில் சுகன்யா கணக்கு வரவு வைக்கப்படுகிறது?

சுகன்யா திட்டத்திற்கான கணக்கைத் தபால் நிலையத்திலோ அல்லது ஆர்பிஐயால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கலாம். அதாவது ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ், பஞ்சாப், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, கனரா, இந்தியன் வங்கி, எஸ்பிஐ, மகாராஷ்டிர வங்கி, பஞ்சாப் & சிந்து, இந்தியன் ஓவர்சீஸ், யூகோ, இந்தியன், பரோடா வங்கி ஆகிய வங்கிகளில் சுகன்யா திட்டம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படுகிறது.

சுகன்யா திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள்..

புதிதாகக் கணக்குத் தொடங்குவோர், ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு கணக்கை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடர்பாக முழு விவரங்களை https://www.nsiindia.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com