புதுமைப் பெண் திட்டம்! விண்ணப்பிக்க தகுதி என்ன?

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பற்றி..
புதுமைப் பெண் திட்டம்
புதுமைப் பெண் திட்டம்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழகத்தில் உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டமே புதுமைப் பெண் திட்டம்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகள், முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இந்த திட்டத்துக்கான இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம்.

சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதித்திட்டம்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது.

ஆனால், ஏழை மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்ய, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய தேவையான தகுதி விவரங்கள் :

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம்.

அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள்,

வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.

தமிழக தனியார் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்.

கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, அப்படிப்புக்கான உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.

வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் https://www.pudhumaipenn.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டுக் குழு மற்றும் கண்காணிப்புக் குழு இத்திட்டம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் கண்காணித்திட மாநில அளவில் அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களைக் கொண்டு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆண்டிற்கு இரண்டு முறை கூடும்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப் பெண் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், ஆண்டு தோறும், உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற்று வருகிறார்கள். உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Summary

The Innovative Girl Scheme is a scheme that provides a monthly scholarship of Rs. 1,000 to girl students studying in government schools in Tamil Nadu from class 6 to 12 and pursuing higher education in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com