காந்திஜி ஜுஹூ போகக் கூடும்
By DIN | Published On : 04th January 2019 01:26 AM | Last Updated : 04th January 2019 01:26 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தியின் தேக நிலை கொஞ்சம் கொஞ்சமாக அபிவிருத்தியடைந்து வருகிறதென்றும் இதே அபிவிருத்தி நீடிக்குமாயின் இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் அவர் தலைமையை மேற்கொண்டு விஷயங்களை கவனிக்க முடியுமென்றும் இன்று புணேவிலிருந்து நமது விசேஷ நிருபர் அறிவிக்கிறார்.
ஆயினும் காந்திஜிக்கு உள்ளூர கோளாறு இருந்து வருவதாகவும், அதைப் போக்க டாக்டர்கள் தீவிரமாக போராடி வருவதாகவும் அறிவிக்கிறார்.
நேற்று மாலை டாக்டர்கள் விடுத்த அறிக்கையில் முந்தின இரவை காந்திஜி சுகமாக கழித்தாரென்றும், அவருக்கு ஓய்வு அவசியமாகையால் இன்னும் 15 தினத்துக்கு அவரை பேட்டி காண யாரும் வரவேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
காந்திஜி இன்னும் இரண்டொரு தினங்களில் புணேவிலிருந்து பிரயாணமாகி பம்பாய் செல்வார். அநேகமாக அவர் கடற்கரையோரமுள்ள ஜுஹுவில் தங்கலாமென்று தெரிகிறது.
காந்திஜி நேற்று எக்ஸ்ரே மூலம் பரீûக்ஷ செய்யப்பட்டார். அவருடைய ஹ்ருதயம் ரொம்ப நெகிழ்ந்து விரிந்திருப்பது அந்த பரீûக்ஷயின் மூலம் தெரிந்தது. ரத்தக் குழாய்கள் இறுகிக் காணப்பட்டது. ஆகவே அவர் உடம்பு தேற ஓய்வு அவசியம் என்று டாக்டர் வற்புறுத்தினார்.
நேற்று மாலை நடந்த பிரார்த்தனையின் போது வந்திருந்த ஜனக்கூட்டம் சொல்லி முடியாது. வந்த கூட்டம் கலையவே ஒரு மணி நேரமாயிற்று. ஜனங்கள் அபாயத்தைக்கூட பொருட்படுத்தாது மரம், மட்டை, சுவர், பாறை முதலிய இடங்களில் தொத்திக்கொண்டிருந்தனர். அண்ணலைக் கண் குளிரக் கண்டனர். இவர்கள் போட்ட ஜே கோஷம் விண்ணை பிளந்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய சோல்ஜர்களும் பலர் காணப்பட்டனர்.
தினமணி (09-05-1944)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...