பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

7.2.1976: தி. நகர் சிவ-விஷ்ணு ஆலய கும்பாபிஷேக வைபவம்

தி. நகர் சிவ-விஷ்ணு ஆலய கும்பாபிஷேக வைபவம் நடந்தது பற்றி...

News image

7.2.1976

Updated On :6 பிப்ரவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, பிப். 6 - தியாகராய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ - விஷ்ணு ஆலயத்தின் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக சம்ப்ரோக்ஷணம் இன்று காலை விமரிசையாக நடந்தேறியது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள்ளேயும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் திரளாக நின்று கும்பாபிஷேகக் காட்சியை தரிசித்தனர். வேத கோஷங்களும், திருவாய் மொழிப் பாடல்களும் ஒருபுறம் முழங்க, மறுபுறம் 'ஹர ஹர சிவ சிவ' 'கோவிந்தா' என்னும் பக்தர்களின் கோஷத்தோடு காலை 7 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. பக்தர்களைப் பரவசமடையச் செய்யும் வண்ணம் நாதஸ்வர இசையும், பக்திப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன.

பல்வேறு புண்ணிய நதித்தீரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் காலை 6 மணி அளவில் ஆலயத்தின் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வேத விற்பன்னர்களின் வேத கோஷத்தோடு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் கோபுரத்தின் உச்சியை அடைந்தார். உரத்த குரலில் சில மந்திரங்களை உச்சரித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்குமாறு ஆக்ஞையிட்டார். கூடியிருந்த வேத வித்பன்னர்கள் வேதங்களை உரத்த குரலில் முழக்கத் தொடங்கினர்.

வேத வித்வான் தாம்பரம் முத்துக்குமார சிவாச்சாரியார், ராகவாச்சாரியார் ஆகியோர் பல்வேறு கலசங்களிலிருந்து புனித நீரை விமானத்திற்கு அபிஷேகம் செய்தனர்.

சீனிவாசப் பெருமாள் சந்நிதி கோபுரத்திற்கு முத்துக்குமார சிவாச்சாரியார் சம்ப்ரோக்ஷணம் நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் மகாலட்சுமி தாயார், பார்வதி அம்பாள், நடராஜர் ஆகிய சம்ப்ரோக்ஷண சந்நிதிகளில் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடைபெற்றன. அடுத்து சுப்பிரமணிய ஸ்வாமியின் கோபுரத்திற்கு சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைக்கப்பட்டது. இதே சமயத்தில் சித்தி புத்தி சமேத வல்லபேசுவரர், கேதாரீசுவரர் கோபுர விமானத்துக்கு சம்ப்ரோக்ஷணம் செய்விக்கப்பட்டது. விமான சம்ப்ரோக்ஷண தீர்த்தம் அருகே கூடியிருந்த பக்தர்களுக்கு மேலிருந்து தெளிக்கப்பட்டது.

புதுடில்லி, பிப் - பார்லிமெண்டின் இரு சபைகளும் - லோக் சபை, ராஜ்ய சபை - இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. பார்லிமெண்டின் இப்போதைய கூட்டத் தொடர் ஜனவரி 5ந் தேதி ஆரம்பமாகியது.

லோக் சபையின் ஆயுளை நீடிக்க வகை செய்யும் மசோதா, நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதா, பத்திரிகைகள் சம்பந்தமான மூன்று மசோதாக்கள் உட்பட 33 மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன

இப்போதைய லோக்சபையின் ஆயுளை ஓராண்டு நீடிப்பதற்கு பார்லிமெண்ட் அங்கீகாரம் அளித்துவிட்டது. ஏற்கெனவே லோக் சபையில் நிறைவேறிய மக்கள் சபை (பதவிக்கால நீடிப்பு) மசோதா இன்று ராஜ்ய சபையிலும் நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.