11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

நியூஜிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆனது பற்றி...
11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்
Updated on
2 min read

கிரைஸ்ட்சர்ச், பிப் 10 - இந்தியாவுக்கும், நியூஜிலாந்துக்கும் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று வெற்றி தோல்வியின்றி "டிரா” வில் முடிந்தது. மொத்தம் மூன்று டெஸ்டுகளில் முதலாவதில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவதில் இந்தியா வெற்றிபெற்றால் இந்த வரிசையில் நியூஜிலாந்தை தோற்கடித்ததாகக் கருதப்படும். மூன்றாவது கடைசி டெஸ்ட் போட்டி வெள்ளியன்று வெலிங்டனில் ஆரம்பமாகிறது.

இந்தியாவின் முக்கோல் காவலர் சையத் கிர்மானி, நியூஜிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 5 காட்சுகள் பிடித்து ஒருவரை ஸ்டம்ப் செய்ததன் மூலம் உலக சாதனையை நிலைநாட்டினார். விக்கெட் கீப்பர்களான வாலி கிரவுட் (ஆஸ்திரேலியா), டெனிஸ் லின்ட்ஸே (தென்னாப்பிரிக்கா), ஜான் மர்ரே (இங்கிலாந்து) மூவருக்கும் சமமானவர் ஆகிவிட்டார் இந்தியாவின் கிர்மானி. அம்மூவரும் காட்சு மூலம் 6 பேரை அவுட்டாக்கினர். கிர்மானி விக்கெட் கீப்பருக்கு மட்டுமே உரித்தான "ஸ்டம்ப்" உரிமையைக் கூட பயன்படுத்தினார். 26-வயதான கிர்மானி தான் ஆடும் இரண்டாவது டெஸ்டிலேயே இந்தசாதனையைப் புரிந்திருக்கிறார். உலகச் சுழலர்களான பிரஸன்னா, சந்திர சேகர் இருவரையும் தந்த கர்நாடகத்தின் பரிசு கிர்மானி.

பசையில்லா வேகப்பந்து வீச்சு

இனி இன்றைய ஆட்டத்தில் புகலாம். நேற்று விக்கெட்டு எதையும் இழக்காமலே 16 ரன் எடுத்திருந்த இந்தியா இன்று ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. ஆட்டக்களம் ஒரே மந்தம். அதில் பசையே இல்லை. அதனால் நியூஜிலாந்தின் நடுத்தர வேகப்பந்து வீச்சுக்காரர்கள் இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் போது காட்டிய கைவரிசையைக் காட்ட முடியவில்லை.

சுநில்கவாஸ்கரும், குண்டப்பா விசுவநாத்தும் சிறப்பாக ஆடி "டிரா"வுக்கு வழி வகுத்தனர். வெங்ஸர்க்காரும் கவாஸ்கரும் நேற்று விட்ட இடத்திலிருந்து 60-க்குக் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் அதுவரையில் நடுத்தர வேகப்பந்து வீச்சைக்கண்டு மலைக்காத வெங்ஸர்க்கார் ரிக்ஹாட்லி பந்தைத் தீண்டி விட்டார். பந்தைத் முக்கோல் காவலர் வாட்ஸ்வொர்த் சுலபமாக பிடித்தார். அவர் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

இருவரும் 37 ரன்கள் திரட்டினர். சுரேந்திர அமர்நாத், கவாஸ்கருடன் சேர்ந்து கொண்டார். ஆனால் இடைவேளைக்குக் கலைவதற்கு முன்பாக சுரேந்திர அமர்நாத் காலிஞ்ச் பந்தில் வாட்ஸ் வொர்த்திடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். அமர்நாத் 21 எடுத்தார். அப்போது இந்தியா (2)100 எடுத்திருந்தது. நியூஜிலாந்தின் முதல் இன்னிங்ஸ் எண்ணிக்கையை எட்ட இன்னும் 33 வேண்டியிருந்தது. இடைவேளைக்குப் பின் பார்த்துக் கொள்ளலாமென்று போயினர்:

இடைவேளை போயிற்று? கவாஸ்கரும், விசுவநாத்தும் ஒன்று சேர்ந்தனர். கவாஸ்கர் பொறுமை, பாய்ச்சல் இரண்டையும் காட்டி 185 நிமிஷம் ஆடினார். ஆறு பவுண்டரிகளும் ஒரு ஆறும் அடித்து 71 எடுத்தார். ஹாட்லி பந்தில் அவர் அடித்தார். ஹோவர்த் அருமையான 'காட்ச்' பிடித்து அவரை அவுட்டாக்கினார். அவரும் விச்சுவும் 41 திரட்டினர். இப்போது நியூஜியைவிட 5 அதிகம் எடுத்திருந்தது.

அடுத்தாற்போல் விச்சு முழுப் பொறுப்பையும் ஏற்று ஜோராக ஆடினார். அவருக்கு மோகீந்திரா அமர்நாத் உறுதுணையாக நின்றார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 75 குவித்தது அருமையான ஆட்டமாகும். விசுவநாத் 79 அடித்தார். அவர் ராபர்ட்ஸ் பந்தில் விக்கெட்காரர் வாட்ஸ்வொர்த்திடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை அடுத்து அமர்நாத் 30 எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூஜிலாந்து விக்கெட்-கீப்பர் வாட்ஸ்வொர்த் இன்று நான்கு இந்தியரை அவுட்டாக்கி, கிர்மானியுடன் போட்டி போட்டார். ஆனால் இதற்குள் ஆட்டம் முடிந்து விட்டது. ஆறு விக்கெட்டுக்கு 255 எடுத்தது இந்தியா.

இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஸ்ரீலங்காவுக்கு ரூ. 5 கோடி இந்தியக் கடன் உதவி - தொழில்நுட்ப உதவியும், வர்த்தகமும் விஸ்தரிப்பு

புது டில்லி, பிப். 10 - இந்தியா - ஸ்ரீலங்கா இடையே பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு வர்த்தக விஸ்தரிப்பு, ஸ்ரீலங்காவுக்கு கடனுதவி சம்பந்தமாக புது டில்லியில் இன்று 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஸ்ரீலங்கா தனக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்படும் தொழில் தயாரிப்புகளை இந்தியாவிடமிருந்து வாங்கிக் கொள்வதற்காக ஸ்ரீலங்காவுக்கு இந்தியா இந்த ஒப்பந்தங்கள் ஒன்றின் கீழ் எளிய நிபந்தனைகளின் கீழ் ரூ. 5 கோடி கடனுதவி அளிக்கும்.

டில்லியில் இந்தியா - ஸ்ரீலங்கா கூட்டுப் பொருளாதாரக் கமிஷனின் 2 நாள் கூட்டத்தில் நடந்த தீவிர விவாதங்களைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா அளிக்கும் கடனுதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வர்த்தக வாகனங்கள், என்ஜினீயரிங் மற்றும் ஆலைத் தயாரிப்புக்களை ஸ்ரீலங்கா வாங்கிக் கொள்ளும்.

1948- லிருந்து ஸ்ரீலங்காவுக்கு, இந்தியா அவ்வப்போது அளித்து வரும் கடனுதவியில் இது ஆறாவதாகும்.

Summary

The second Test ended in a "draw": 4 Gavaskar - Viswanath played a brilliant game

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்
10.2.1976: மவுண்ட் ரோடு டெலிபோன் தொடர்பகம் ஏப்ரல் மத்தியில் இயங்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com