13.2.1976: இந்திய மக்கள் தொகை 60 கோடியை தாண்டியது!

இந்திய மக்கள் தொகை 60 கோடியை தாண்டியது பற்றி...
13.2.1976
13.2.1976
Updated on
2 min read

புதுடில்லி, பிப், 12- இந்தியாவின் மக்கள் தொகை 60 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது.

1975-ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை இந்த அளவை எட்டியுள்ளது. இது 1971ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் நிலவரத்தை விட, 10.4 சதவீதம் உயர்வாகும்; அப்போதைய மக்கள் தொகை 54 கோடியே 70 லட்சம்தான்.

அதாவது, சுமார் 5 ஆண்டுகளில், நம் நாட்டின் மக்கள் தொகை 5 கோடியே 70 லட்சம் அதிகமாகி உள்ளது என்று பொருளாகிறது; அதாவது ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாக அர்த்தம். இந்த தொகை மட்டும் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சமமாகும்.

1973-ல் 2.1 சதவீதமாக இருந்த மக்கள் தொகைப் பெருக்க விகிதம், 1975-76-ல் 2 சதவீதமாகக் குறையக் கூடும் என்று, மக்கள் தொகை மதிப்பீடு பற்றிய நிபுணர் குழு கருத்து தெரிவித்து இருந்தது. உண்மையிலேயே இவ்வாறு இந்த விகிதம் குறைந்ததா என்பது, வரும் மார்ச் 31-ந் தேதியன்று நிலவரப்படி கிடைக்கக் கூடிய மக்கள் தொகை புள்ளிவிவரத்தைப் பார்த்தால்தான் தெரிய வரும்.

இந்தியாவின் மக்கள் தொகை 1980-ல் 68 கோடியாக இருக்கும் என்று, இந்திய மக்கள் தொகை பற்றிய ஐக்ய நாடுகள் சங்க மதிப்பீடு கூறுகிறது. 1978-79-ல் இந்திய மக்கள் தொகை 64 கோடியே 20 லட்சமாக இருக்கும் என்று நம் நாட்டு அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

1961 முதல் 1970 வரையிலான பத்தாண்டு காலத்திலேதான், இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தது.

1961-ல் 43 கோடியே 90 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 1971-ல் 54 கோடியே 70 லட்சமாக உயர்ந்தது. இந்த உயர்வு விகிதம் 24.6 சதவீதமாகும்; 1951 முதல் 1960 வரையிலான பத்தாண்டு காலத்தில் மக்கள் தொகை உயர்வு விகிதம் 21.6 சதவீதம்தான்.

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்த காலம் 1911 முதல் 1921 வரையிலான பத்தாண்டு காலமாகும். இந்தப் பத்தாண்டுகளில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 9 சதவீதம்தான்.

நமது நாட்டில் தேசிய பிறப்பு விகிதம் 1961-ல் ஆயிரத்துக்கு 41.7 என்ற கணக்கில் இருந்தது. 1972-ல் 36.6 ஆகக் குறைந்தது. நான்காம் ஐந்தாண்டு திட்ட இறுதியில், இந்த விகிதம் ஆயிரத்துக்கு 35 ஆகக் குறைந்துவிட்டது.

பம்பாயில் ரயில் பெட்டி தீப்பிடித்து 24 பேர் சாவு - 31 நபர்களுக்கு காயம்

பம்பாய், பிப். 12 - வடக்கு பம்பாயில் மதுங்கா ஸ்டேஷன் அருகே இன்று பிற்பகல் தானா - பம்பாய் புறநகர் ரயிலின் முதல் பெட்டி தீப்பிடித்துக்கொண்டதன் விளைவாக 22 நபர்கள் வெந்துமாண்டனர். ரயில் ஏறியதால் இருவர் மாண்டனர் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. 31 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் 19 நபர்கள் இறந்ததாக நகர போலீஸார் கூறினர். ரயில் பெட்டியிலிருந்து 17 கருகிய சடலங்கள் எடுக்கப்பட்டதாகவும், ரயிலிலிருந்து குதித்த மற்றும் இருவர் மீது எதிர்பக்கமாக வந்து கொண்டு இருந்த ரயில் ஏறியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பெரும்பாலான கருகிய சடலங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 33 பிரயாணிகள் காயமடைந்ததாகவும் போலீஸார் குறிப்பிட்டனர்.

சயான் ஆஸ்பத்திரியில் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் நிலை கவலைக்கிடம் என்று கூறப்பட்டது.

இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் ஆண்கள் என்று ரயில்வே அதிகாரிகளும், ஆஸ்பத்திரி டாக்டர்களும் தெரிவித்தனர். ...

40,000 இந்தியரை அனுப்ப இலங்கை ஏற்பாடுகள்

கொழும்பு, பிப். 12 - ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்படிக்கையின்கீழ் ஏற்கனவே பாஸ்போர்ட்டுகள் பெற்றுவிட்ட 90,000 இந்தியரில் 40,000 பேரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை குடியேற்ற துணைக் கண்ட்ரோலர் நியூட்டன் சமர சிங்கே இதை நேற்று கூறினார்.

பாஸ்போர்ட்டுகள் பெற்ற பின் நீண்ட காலம் பலர் தங்கிவிட்டனர். வைப்பு நிதி, மற்ற பாக்கிகளைப் பெறுவதில் அவர்களுக்கு ஏற்பட்ட காலதாமதமே இதற்குக் காரணம். இப்போது இவ்வித காலதாமதங்களெல்லாம் தவிர்க்கப்பட்டு விட்டன என்று அவர் கூறினார்.

சிலர் அதிகாரிகள் கண்களிலிருந்து தப்பி, தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் மாற்று வேலை தேடிக் கொண்டு தங்கிவிட்டார்கள். இவ்வாறு தங்கியவர்கள் 200 பேரை அரசாங்கம் கண்டு பிடித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

விஸா முடிந்தபின் தங்கியோர் கைது

விஸா காலம் முடிவடைந்த பின்னும் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்களைக் கைது செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 86 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 86 பேரும் தங்கள் குடும்பத் தலைவர்கள். இவர்களும், இவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்(மொத்தம் சுமார் 300 பேர்) இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். வைப்புநிதி கிராச்சூட்டி போன்றவைகளைப் பெற்ற பின்னும் ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் இவர்கள் இலங்கையில் தங்கி விட்டார்கள் என்று அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.

இடிக்கி நீர் மின்சாரத் திட்டம்: பிரதமர் துவக்கி வைத்தார்

மூலமட்டம் (கேரளா), பிப். 12 - கேரளாவில் மாபெரும் இடிக்கி நீர் மின்சாரத் திட்டத்தின் வர்த்தக ரீதியிலான மின்சார உற்பத்தியை பிரதமர் இந்திரா காந்தி இன்று துவக்கி வைத்து அத்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாதாளத்தில் அமைந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஒரு பொத்தானை அழுத்த 700 மீட்டர் உயரத்திலிருந்து நீர் மிக வேகத்தில் பாய்ந்து சென்று மின் உற்பத்தி யந்திரத்தைச் சுழல வைத்தது. 150 வினாடிகளில் கேரளாவின் மின் உற்பத்தி 21 சதவிகிதம் உயர்ந்தது.

Summary

13.2.1976: India's population crossed 60 crores!

13.2.1976
12.2.1976: த.நா. திட்டம் - சேலம் உருக்காலை, நெய்வேலி சுரங்க ஒதுக்கீடுகள் உயரலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com