

கும்பகோணம், டிச. 30 - தஞ்சை ஜில்லாவில் சில்லறை மார்க்கெட்டில் அரிசி, சமையல் எண்ணெய்களின் விலைகள் மேலும் இறங்குமுகமாகியுள்ளன.
தற்போது புழுங்கலரிசி கிலோ ரூ. 1.75க்கு கிடைக்கிறது. பழைய விலை ரூ. 1.90. பச்சரிசி கிலோ ரூ. 1.90க்கு கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ. 2.20. இதேபோன்று கடலை எண்ணெய் தற்போது கிலோ ரூ. 5.90க்கு கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ. 6.50. நல்லெண்ணெய் கிலோ ரூ. 7.50க்கு விற்கப்படுகிறது; இதன் முந்தைய விலை கிலோ ரூ. 8 என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதுடில்லி, டிச. 31 - சுயமாக வெளியிடும் திட்டத்தின் கீழ் இன்றிரவு வரை கறுப்புப் பணம் வெளியிடப்பட்டது ரூ. 860 கோடிக்கும் மேல் போய்விட்டது. இன்று நடுநிசிக்கு மேல் மேற்கொண்டு கெடு நீடிக்கப்பட மாட்டாதென அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 8 (ஆம் தேதி) ராஷ்டிரபதி பிறப்பித்த ஒரு அவசரச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பாளர்கள் தாங்கள் மறைத்த வருவாயையும், செல்வத்தையும் அபராதமின்றித் தெரிவிக்க கடைசி வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டது. இதற்கிணங்க பெரும்பாலோர் தாங்கள் கறுப்புப் பணத்தைத் தெரிவிக்க முன்வரவில்லையென்றால் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை சர்க்கார் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அபராதத்திலிருந்து விலக்களிப்பதுடன் இத்திட்டத்தின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கும்.
25,000 ரூபாய் வரை வெளியிடப்பட்ட வருவாய்க்கு 25 சதமும் சுமார் 50,000 ரூபாய்க்கு 60 சதமும் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் வெளியிட்ட ஒருவர் ரூ. 46,000 வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இது 50 சதத்தை விடக் குறைவு. வெளியிடப்பட்ட வருவாயில் 5 சதத்தை சர்க்கார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டியுமிருக்கும். இது சமூக முன்னேற்றத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
1951லும் 1965லும் இரு வெளியீடுத் திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டன. 1946 உலக யுத்த முடிவில் உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதென்றும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போது நிதி மந்திரியாக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி இந்த திட்டங்களை கொண்டு வந்தார். இந்த இரு திட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் ரூ. 267 கோடிதான் வெளியானது. இது மிகவும் சொற்பம்தான்.
இன்று டில்லியில் வெளியிட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இன்று மாலை வரை மட்டும் ரூ. 200 கோடி வெளியிடப்பட்டது. நடுநிசிக்குள் இத்தொகை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகள் விவரங்களை எடுத்து திட்டமான தொகையைத் தெரிவிக்க திணறும் அளவிற்கு அதிகமான அளவு இன்று வெளியிடப்பட்டது.
சென்னையில் இன்றிரவு 9 மணி வரை 102 கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியிடப்பட்டதாக வருமான வரி கமிஷனர் வி.வி. பாதாமி தெரிவித்தார்.
இன்று சென்னையில் வருமான வரி காரியாலயங்களில் பெரும் கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலும் வக்கீல்களும் ஆடிட்டர்கள். அக்கெளண்டண்டுகள் அவர்கள் குமாஸ்தாக்களும் தான் காணப்பட்டனர். ரிசர்வ் பாங்கிலும் வருமான வரிப் பணம் கட்ட நீண்ட ‘கியூ’ நின்று கொண்டிருந்தது.
இன்று நடு நிசிவரை ரிசர்வ் பாங்கு திறந்திருக்கும். கடைசி சமயத்தில் வந்திருப்பவர்கள் பெரும்பாலும் ஜில்லாக்களிலிருந்து வந்திருப்பவர்களே என்று கூறப்படுகிறது ...
... தமிழ்நாட்டில் இன்று மட்டும் மொத்தம் 2370 பேர் வெளியிட்டனர். இதுவரை வெளியிட்டவர்கள் மொத்தம் 8180 பேர்.
தாமாக அறிவிக்கும் திட்டத்துக்கான காலக்கெடு இன்று இரவு முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.