நான் என்ன பைத்தியமா?

"மென்ட்டல்', "பைத்தியம்', "லூசு', "கிறுக்கன்' என முத்திரை குத்தப்பட்டு வாயில் எச்சில் ஒழுக, குளிக்காமல் தானாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல பயங்கரமாக, வித்த
Published on
Updated on
2 min read

"மென்ட்டல்', "பைத்தியம்', "லூசு', "கிறுக்கன்' என முத்திரை குத்தப்பட்டு வாயில் எச்சில் ஒழுக, குளிக்காமல் தானாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல பயங்கரமாக, வித்தியாசமாக இருந்தால்தான் மன நோய் எனக் கருத வேண்டாம்.

""சோம்பேறி'', ""டென்ஷன் பேர் வழி'', ""உதவாக்கரை'', ""முரடன்-முன் கோபி'', ""நேரம் சரியில்லை'' என எந்த வேலைக்கும் போகாமல், எந்த வேலைக்குப் போனாலும் சில மாதங்களுக்கு மேல் நிலைக்க முடியாமல் இருப்பதும்கூட மன நலப் பிரச்னைதான்.

இப்படி பொதுவான மன நலப் பிரச்னைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மது, பான் மசாலா, தூக்க மாத்திரைகள் ஆகியவற்றுக்கு அடிமையாவது, கணவன் அல்லது மனையின் நடத்தையில் சந்தேகம்,

மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசுவதாக தனக்கு எதிராக செயல்படுவதாக சந்தேகம், செய்வினை, சூனியம் செய்து விட்டதாக சந்தேகம் உள்ளிட்டவையும் மன நலப் பாதிப்புக்கான அறிகுறிகள்தான்.

குழந்தைகளுக்கு...:

ஆனால் குழந்தைகளுக்கான பாதிப்பு மேற்சொன்னவாறு வெளிப்படாது. மாறாக எப்பொதும் எரிச்சல், கோபம், கார்ட்டூன் சேனல்கள் போன்றவற்றுக்கு அடிமையாதல், படிப்பில் நாட்டம் - கவனம் குறைந்து மோசமாவது,

சரியாக சாப்பிடாமல் தனிமையை நாடுதல், அதீத குறும்பு, வயதாகியும்கூட தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது, விரல் சூப்புதல், நகம் கடித்தல், பயங்கர பிடிவாதம் ஆகிய ஏதேனும் அறிகுறிகள் வெளிப்படலாம்.

மன நல பாதிப்புகளுக்கான மற்ற அறிகுறிகள்:

தூக்கமின்மை, பசியின்மை, அன்றாட விஷயங்களில் நாட்டம் - ஈடுபாடு இல்லாமை; எப்பொழுதும் உடலில் ஒரு அசதி, சோர்வு; பயம், பதற்றம், நடுக்கம், குழப்பம்;

ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப மனதில் வந்து தொல்லை கொடுப்பது; கை கழுவுதல், சுத்தம் செய்தல் ஆகியவற்றை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது;

கணவன் - மனைவிக்குள் தினமும் சண்டை சச்சரவு சந்தேகம்; தனியாக இருக்கும்போது காதில் குரல் கேட்பது; சாமி வருவது, பேய் பிடிப்பது ஆகியவையும் ஒரு விதமான மன நல பாதிப்பே.



குடிப் பழக்கமும் மனப் பிரச்னைதான்:

குடி, பான்பராக், ஹான்ஸ், புகையிலை, மாவா, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களும் சர்க்கரை நோய் போன்று ஒரு நோய்.

தீவிரமான குடிநோயாளிகூட தனக்கு குடிநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார். அது அவர்களின் ஈகோவை பாதிக்கும். குடியால் உடல் நலம், குடும்ப அமைதி, மன அமைதி, வேலை / தொழிலில் சரிவு, மானம் / மரியாதை, கௌரவம் என படிப்படியாக எல்லாவற்றையும் இழக்க நேரிடும்.

""நான் நினைத்தால் நிறுத்தி விடுவேன், மலைக்கு போனப்பகூட ஒரு மாதம் குடிக்கவில்லை. நான் குடிகாரன் இல்லை'' என்பார்கள். சும்மா ஜாலி, கவலை, தூக்கமின்மை என அவர்களின் ஈகோ அவர்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றிக் கொண்டிருக்கும்.

ஒருவரது குடிப் பழக்கம் காரணமாக, அவரது குடும்பம், மனைவி, குழந்தைகள் தினமும் அனுபவிக்கும் துயரங்கள் மிகவும் வேதனையான ஒன்று. இருந்தபோதிலும் நோயாளியை நினைத்து நொந்து கொள்வதைவிட சிகிச்சை அளிப்பதே அறிவியல்பூர்வமானதும் அறிவுப்பூர்வமானதும் ஆகும்.

சிகிச்சை என்ன?

விதி, தலையெழுத்து, பில்லி, சூனியம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், ராசிக்கல், பெயர் மாற்றம் போன்றவை மனப் பிரச்னைக்கு கண்டிப்பாக தீர்வு கிடையாது. அந்த நேரத்தில் ஒரு திருப்தியும், அமைதியும் கிடைக்குமே ஒழிய, நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

அதே போல, இன்று பிரபலமாகி வரும் யோகா, தியானமும் மட்டுமே தீர்வு கிடையாது. முறையான அணுகுமுறையும், அறிவியல்பூர்வமான சிகிச்சையும்தான் தீர்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com