சினைப்பை நீர்க்கட்டி : சித்த மருத்துவம் மாயமாக்கும்

நவீன கால மகளிருக்கு உள்ள சவால்களில் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னையும் ஒன்று. இப்போது 5-ல் ஒரு மகளிர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு யாருக்கு? உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்காமல்
Published on
Updated on
2 min read

நவீன கால மகளிருக்கு உள்ள சவால்களில் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னையும் ஒன்று. இப்போது 5-ல் ஒரு மகளிர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு யாருக்கு? உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்காமல் அதிக உடல் எடை கொண்ட பெண்ணா நீங்கள்? தேவையற்ற இடங்களில் முடி (மீசை, தாடி) வளர்ந்திருக்கிறதா? உங்களது மாதவிடாய் சீரற்ற முறையில் உள்ளதா?----இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை "ஆம்' என்றால், சினைப்பை நீர்க் கட்டி பிரச்னை உங்களுக்கு இருக்க அதிக வாய்ப்பு உண்டு.

உறுதி செய்வது எப்படி? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மிகச் சரியாகக் கணிக்க முடியும்.

  சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

  நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர் இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

உணவு முறை என்ன? பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.

  சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.

மீசை வளர்வது ஏன்? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.

  சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி -  யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com