உடலின் பாகங்கள் குறித்துக் கவலைப்பட்டு, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு அவற்றைச் சிறப்பாக பராமரிக்க மக்கள் தவறுவதில்லை. ஆனால் பெரும்பாலானோர் பற்கள் - ஈறுகள் குறித்துக் கவலைப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
பற்கள், ஈறுகள் குறித்து பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவமனைகள்கூட போதிய அக்கறை செலுத்துவதில்லை. "மாஸ்டர் செக் - அப்' என முழு உடல் பரிசோதனை வசதிகளை வைத்துள்ள பல மருத்துவமனைகள், பல் நலத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை.
பல் பிடுங்குவதற்கு மட்டுமே "பல் மருத்துவம்' எனக் கருதுவது சரி அல்ல. பற்கள், ஈறுகளை முறையாகப் பராமரித்து பற்களை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள உதவுவதுதான் பல் மருத்துவம்.
இதயத்துடன் தொடர்பு: ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுகின்றனர். ஏனெனில், இந்தப் பிரச்னைகள் இதயத்தைப் பாதித்து உயிரைப் பறித்து விடும் என்ற பயம்தான்.
ஆனால் பல்லில் பிரச்னை அல்லது ஈறு நோய் என்றால் "பல் தானே' என்ற அலட்சியம் பலரிடம் உள்ளது. இனி அத்தகைய அலட்சியம் வேண்டாம்.
ஏனெனில் ஈறு நோய்க்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது, ஈறு நோய்க்கும் இதய நோய்க்கு வித்திடும் ரத்த நாளங்களின் குறுகலுக்கும் ("அதீரோஸ்குளோரோசிஸ்') தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோய் - அறிகுறிகள் என்ன? பற்களிடையே தங்கிக் கொள்ளும் உணவுப் பொருள்கள், சில வகை பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் ஒரு வகை அசுத்த கொழுப்பு பற்களைச் சுற்றிப் படிகிறது. இதை ஆரம்பகட்ட ஈறு நோய் ("ஜின்ஜிவிட்டிஸ்') என்று கூறலாம்.
வழக்கமாக "பிங்க்' நிறத்தில் இருக்கும் ஈறுகள், சிவப்பு நிறமாகக் காட்சி அளிப்பதும் பல் துலக்கும்போது ரத்தக் கசிவு ஏற்படுவதும் ஈறு நோய்க்கான அறிகுறிகள். இப்படி பற்களில் படியும் கடினமான கொழுப்புப் பொருள்களை பல் துலக்கும் பிரஷ் மூலம் அகற்ற முடியாது.
இந்தக் கொழுப்பு படிப்படியாக இறுகி, மஞ்சள் கலந்த கடின படிமமாக உருமாறும். நாள்கள் செல்லச் செல்ல, இந்தப் படிமம் ஆழமாக இறுகி, தீவிர ஈறு நோயாக மாறி விடும். இதன் மூலம் தாடை எலும்பில் நோய் பரவி பாதிப்பு ஏற்படும். மேலும் இது இதய நோயாகவும் உருவெடுக்கும்.
ரத்த நாள குறுக்கம் ஏன்? இதயத்துக்கு ரத்தத்தை அனுப்பும் ரத்த நாளங்கள் கொழுப்புச் சத்தால் அடைக்கப்பட்டு, குறுகிய பாதையாகச் சிதைவடைவதுதான் இதய நோயாக உருவெடுக்கிறது.
இவ்வாறு நாளங்களில் கொழுப்பு படியும்போது ரத்த நாளங்களின் சுவர்களும் பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் மற்றும் சத்துப் பொருள்கள் பற்றாக்குறையால் இதயம் பாதிக்கப்படும். மாரடைப்பு ஏற்படக்கூடும். இப்படி கடுமையான பாதிப்பை தரக்கூடிய இதய நோய்க்கும் ஈறு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோய் காரணமாக...: ஈறு நோயை உருவாக்கும் பாக்டீரியா, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். மேலும் எதிர்ப்புத் தன்மையற்ற ஈறுகளிலிருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள், ரத்தக் குழாயைச் சென்றடைந்து நாளங்களின் சுவர்களை வெப்பப்படுத்துவதால் நாளங்களில் தேவையற்ற சுருக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கொழுப்புகள் அடங்கிய ரத்த நாளங்களில் பாக்டீரியாக்கள் தங்களை நேரடியாக இணைத்துக் கொள்வதாலும் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஈறு - இதய தொடர்புக்கு ஆதாரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த ஆய்வில், ஈறு நோயுடன் உள்ள 51 பேரைச் சோதனை செய்ததில் வழக்கமாக வாய்ப் பகுதியில் உள்ள 8 பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களின் கொழுப்புப் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களுக்கு பை - பாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. கொழுப்பு உள்ள ரத்த நாளங்களில் 66 சதவீதத்துக்கு மேல் வாய்ப் பகுதி பாக்டீரியா இருப்பது நிரூபணமானது.
எனவே இதய நோயைத் தவிர்க்க விரும்புவோர் ஈறு நோய்களையும் தவிர்க்க வேண்டும்.
டாக்டர் ஜெய்தீப் மகேந்த்ரா,
பல் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்,
ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி,
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.
ஈறு நோயைத் தவிர்க்க...
பற்களை தினமும் சரியாக துலக்காவிட்டால், ஈறு நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
காலையிலும் இரவிலும் சரியான முறையில் பல் துலக்குங்கள்.
பல் மருத்துவரின் பரிந்துரையுடன் சரியான பற்பசையைப் பயன்படுத்துங்கள்.
நூல் மூலம் பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வது நல்ல பலனைத் தரும்.
குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறத் தவறாதீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.